அன்புமணி இராமதாஸ் விடுக்கும் உலக மகளிர் நாள் செய்தி! :
’’உலக மகளிர் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் உட்பட உலகம் முழுவதும் உள்ள அனைத்து மகளிருக்கும் எனது மகளிர் நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகில் உன்னதமான அவதாரம் என்றால் அது பெண்கள் தான். அவர்கள் தான் இந்த உலகின் ஆக்கும் சக்திகள். அவர்களால் தான் குடும்பமும், சமுதாயமும், ஊரும், மாநிலமும், நாடும், உலகமும் முழுமை பெறுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க மகளிருக்கு உரிய அங்கீகாரம் வழங்க அரசுகள் தவறி விட்டன. அதற்கெல்லாம் மேலாக மது என்ற தீய சக்தியை பாய விட்டு, ஆண்களை அதற்கு அடிமை ஆக்கி குடும்பங்களை சீரழிக்கும் அழிவு சக்தியாக தமிழக அரசு திகழ்கிறது. மதுவை ஒழித்து மக்களைக் காக்க வேண்டும் என்று மகளிர் கோரினால், அவர்களையே மதுவுக்கு அடிமையாக்கும் இழிசெயலை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. பெண்களை மதிக்காத வீடும், பெண்களை நிம்மதியாக வாழ அனுமதிக்காத நாடும் சாத்தானின் சாபத்திற்கு ஆளானவையாகவே கருதப்படும்.
மது என்ற அரக்கனை ஒழிப்பதன் மூலம் தான் இந்த சாத்தானின் சாபத்திலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியும். இது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் முதன்மை இலக்கு ஆகும். ஆட்சியில் அமர்ந்தவுடன் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான கோப்பில் முதல் கையெழுத்தை இடுவதன் மூலம் இந்த சாபத்திற்கு முடிவு கட்டப்படும். அதற்காக கையெழுத்திடும் வரத்தை பெறுவதற்காக கடுமையாக உழைக்க இந்நன்நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.’’
No comments:
Post a Comment