Thursday, March 17, 2016

ஊழல் வழக்கில் அமைச்சர் உதவியாளர் கைது: அமைச்சர்களை தப்ப விடக்கூடாது!: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் ஆய்வக உதவியாளர் வேலை வாங்கித்தருவதாகக் கூறி  ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றதாக சுற்றுலா அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி  கைது செய்யப்பட்டிருக்கிறார்; அமைச்சரின் மகன் தேடப்படுகிறார். இந்த ஊழலில்  மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருவதாக கடந்த பல ஆண்டுகளாகவே  குற்றச்சாற்றுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தாது மணல், கிரானைட், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை வெட்டி எடுத்தல், மின்சாரம், பருப்பு, முட்டை ஆகியவற்றை கொள்முதல் செய்தல், அரசுப் பணிகள் சார்ந்த ஒப்பந்தங்களை பெற்றுத் தருதல், வேலை வாங்கித் தருதல் என்று பல்வேறு துறைகளிலும் ஊழல்கள் நடப்பது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில்  ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வலியுறுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆளுனர் ரோசய்யாவிடம் பா.ம.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், ஆளுங்கட்சி மேலிடத்தின் அழுத்தம் காரணமாக  ஆளுனரிடம் அளித்த புகார் மனு மீது  கடந்த ஓராண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், கிருபானந்த முருகன் என்பவர் ஆட்சியாளர்களின் முழு பாதுகாப்புடன் நேற்று அளித்த புகார் மனு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அமைச்சரின் உதவியாளர் கைது செய்யப் படுகிறார்.  அமைச்சர் சண்முகநாதனின் மகனை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய நிதி மற்றும் பொதுப்பணி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், மின்துறை அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிராக கிருபானந்த  முருகனிடம் வாக்குமூலம் வாங்கப்படுகிறது. அந்த வாக்குமூலத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமோ, இல்லையோ அதை காட்டி சில திரைமறைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். சாதாரண நேரத்தில் இதுபோன்று புகார்கள் அளிக்கப்பட்டால் புகார் கொடுத்தவர் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போது ஊழல் புகார் மீது அதிரடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றால், அதற்கு காரணம் ஊழலை ஒழிக்க தமிழக ஆட்சியாளர்கள் சபதம் எடுத்திருக்கிறார்கள் என்பதல்ல... ஊழல் கணக்கு&வழக்கில் நடந்த சில தவறுகளை சரி செய்ய ஆளுங்கட்சி மேலிடம் துடிப்பது தான் என்பது அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு கூட தெரியும். ஊழல் புகார் மீதான நடவடிக்கைக்கு காரணம் என்னவாக இருந்தாலும் ஜெயலலிதா ஆட்சியில் ஊழல் நடந்திருக்கிறது, ஜெயலலிதாவின் தளபதிகளாக  இருந்து பல்வேறு பேரங்களை முடித்த மூத்த அமைச்சர்கள் இருவருக்கு ஊழலில் தொடர்பு உள்ளது என்றெல்லாம்  வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பது எளிதில் ஒதுக்கிவிடக் கூடிய விஷயமல்ல. கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஊழல்களை நிரூபிப்பதற்கான முக்கிய ஆதாரங்களாகும்.

ஊழல் குற்றச்சாற்றின் அடிப்படையில் அமைச்சரின் உதவியாளர் கைது செய்யப்பட்டிருப்பதும், அமைச்சரின் மகன் தேடப்படுவதும், மூத்த அமைச்சர்களுக்கு எதிராக வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதும் அவர்களுடன் மட்டுமே முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல. இதில் எதையும் ஜெயலலிதாவை தவிர்த்து விட்டு பார்க்க முடியாது. ஜெயலலிதாவுக்கு தெரியாமல் அவரது ஆட்சியில் எதுவும் நடக்காது. மாறாக,  நடைபெற்ற ஊழல்களுக்கான கணக்கை சரியாக காட்டாததற்காகத் தான் நடவடிக்கை பாய்கிறது.

எனவே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வாங்கி ஏமாற்றியது தொடர்பான வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்டுள்ள மூத்த அமைச்சர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.  அவர்களுக்கெல்லாம் முதலமைச்சர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கும் இம்முறைகேடுகளில் பங்கு உண்டு என்பதால் அவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: