அமைச்சர்கள் மீதான மோசடிப் புகார்கள் குறித்து
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை:
’’நாளிதழ்களைத் திறந்தாலே அ.தி.மு.க. அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான மோசடிப் புகார்கள் குறித்த செய்திகள் தான் பக்கம் பக்கமாக இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இப்புகார்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டிய அரசு, இவற்றை மூடி மறைக்கத் துடிப்பது அதிர்ச்சியளிக்கிறது.
2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா அரசு பதவியேற்ற நாளில் இருந்தே அனைத்துத் துறைகளிலும் ஊழல் கொடிகட்டி பறக்கத் தொடங்கி விட்டது. தகுதி, திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தான் வேலை வழங்க வேண்டும் என்ற சட்டத்தையும், விதியையும் காலில் போட்டு மிதித்து விட்டு, பணம் கொடுப்பவர்களுக்குத் தான் அரசு வேலை என்பது எழுதப்படாத சட்டமாக மாறி விட்டது. குறிப்பாக அதிக எண்ணிக்கையில் பணி நியமனம் நடக்கும் போக்குவரத்துத் துறை, சத்துணவு மற்றும் சமூக நலத்துறையில் தான் அதிக ஊழல்களும், மோசடிகளும் அரங்கேற்றப்படுகின்றன. போக்குவரத்துத் துறையில் ஓட்டுனர், நடத்துனர், பொறியாளர் வேலை தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வாங்கி ஏமாற்றி விட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இவர்களிடம் மோசடி செய்யப்பட்ட தொகை மட்டும் ரூ. 4 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டில் 7500-க்கும் மேற்பட்ட ஓட்டுனர், நடத்துனர்களும் பொறியாளர்களும் நியமிக்கப்பட்டனர். இதற்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ஓட்டுனர், நடத்துனர் வேலைக்கு ரூ.3 லட்சம், பொறியாளர் பணிக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை என விலை நிர்ணயித்து தமிழகம் முழுவதும் தரகர்கள் மூலம் வசூல் வேட்டை நடைபெற்றது. இது குறித்து அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இந்த ஊழல் குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று ஆணையிட வலியுறுத்தி தமிழக ஆளுனர் ரோசய்யாவிடம் எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி குழு மனு அளித்தது. ஆனால், அதன் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இடைப்பட்ட காலத்தில் போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவரது உறவினர்களும் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக இப்போது காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சத்துணவு பணியாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் மீதும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் அறையிலேயே தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவமும் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் சின்னையா ரூ.25 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்கள் காமராஜ், தோப்பு வெங்கடாச்சலம், ஆனந்தன் உட்பட மேலும் பல அமைச்சர்கள் மீதும் பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார்கள் எழுந்துள்ளன.
பொதுவாழ்வில் இருப்பவர்கள் ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் பெரும்பான்மையானோர் மீது மோசடி புகார்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் கடந்த 58 மாதங்களில் 32 அமைச்சர்கள் பதவிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மோசடிப் புகார்களுக்கு ஆளானவர்கள் ஆவர். இதை வைத்துப் பார்க்கும் போது மோசடிக் குற்றச்சாற்றின் அடிப்படையில் தான் இவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும், அவ்வாறு பதவி நீக்கம் செய்வது மட்டுமே தண்டனையாகாது. மாறாக மோசடி புகார்கள் குறித்து விசாரணை நடத்தி தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும்.
ஆனால், மக்களுக்காகவே வாழ்வதாக கூறிக்கொள்ளும் முதலமைச்சர் ஜெயலலிதா, பாதிக்கப் பட்ட மக்களின் புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஆணையிட மறுப்பதன் காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு வேளை அமைச்சர்கள் மீதான மோசடிப் புகார்கள் குறித்து விசாரணை நடத்தினால் அது போயஸ் தோட்டம் வரை நீளும் என்ற அச்சம் தான் அவரைத் தடுக்கிறதா? எனத் தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான மோசடிப் புகார்கள் மீது விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். இல்லாவிட்டால் தம்மை காப்பாற்றிக் கொள்வதற்காகத் தான் ஜெயலலிதா விசாரணையை தடுக்கிறார் என்று தான் கருத வேண்டியிருக்கும்.’’
No comments:
Post a Comment