Tuesday, March 29, 2016

தோசையை மாற்றிப் போட்டாலும்” கொள்கை அளவில் ஒற்றுமையாக இருக்கும் திமுக, அதிமுக- ராமதாஸ்

சென்னை: தமிழகத்தின் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு மக்கள் தோசையை மாற்றிப் போட்டு வாய்ப்பு கொடுத்தாலும் அவர்கள் மக்களைச் சுரண்டும் கொள்கைகளில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே கொள்கை உள்ள கட்சி. தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக 28 ஆவணங்களை வெளியிட்டு உள்ளோம். இதுவரை 15 வரைவு பட்ஜெட்டுகளை வெளியிட்டுள்ளோம். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வெளியிட்டு வருகிறோம்.



பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம். ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் மக்களை பற்றி கவலை இல்லை. மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அவர்களுக்காக போராடி வருகிறேன். போராட்டக்காரன், போராளி என்று அழைப்பதே எனக்கு பிடிக்கும். பா.ம.க முதல்-அமைச்சர் வேட்பாளர் அன்புமணி, தன்னுடன் நேருக்குநேர் ஒரே மேடையில் விவாதிக்க அழைத்தும் எந்தக்கட்சியும் வரவில்லை. அன்புமணியிடம் திறமை உள்ளது. அவருடன் விவாதிக்க யாருக்கும் திறமை இல்லை.
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஊழல் செய்வது, இலவசங்களை கொடுப்பது, மதுவை கொடுப்பது போன்ற கொள்கைகளில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். தோசையை மாற்றி போடுவது போல 5 முறை கருணாநிதிக்கும், 3 முறை எம்.ஜி.ஆர், 3 முறை ஜெயலலிதா என 2 கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாய்ப்பு அளித்தீர்கள். ஆனால், அவர்கள் கடமையை சரியாக நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. தொழிலதிபர்கள் மற்ற மாநிலங்களுக்கு தொழில் தொடங்க செல்கிறார்கள். இங்கு எந்த வளர்ச்சியும் இல்லை. கல்விக்கூடங்களை தனியார் நடத்துகிறார்கள். டாஸ்மாக் கடைகளை அரசு நடத்தி வருகிறது" என்று தெரிவித்தார்.

Thursday, March 17, 2016

ஊழல் வழக்கில் அமைச்சர் உதவியாளர் கைது: அமைச்சர்களை தப்ப விடக்கூடாது!: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் ஆய்வக உதவியாளர் வேலை வாங்கித்தருவதாகக் கூறி  ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றதாக சுற்றுலா அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி  கைது செய்யப்பட்டிருக்கிறார்; அமைச்சரின் மகன் தேடப்படுகிறார். இந்த ஊழலில்  மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருவதாக கடந்த பல ஆண்டுகளாகவே  குற்றச்சாற்றுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தாது மணல், கிரானைட், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை வெட்டி எடுத்தல், மின்சாரம், பருப்பு, முட்டை ஆகியவற்றை கொள்முதல் செய்தல், அரசுப் பணிகள் சார்ந்த ஒப்பந்தங்களை பெற்றுத் தருதல், வேலை வாங்கித் தருதல் என்று பல்வேறு துறைகளிலும் ஊழல்கள் நடப்பது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில்  ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வலியுறுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆளுனர் ரோசய்யாவிடம் பா.ம.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், ஆளுங்கட்சி மேலிடத்தின் அழுத்தம் காரணமாக  ஆளுனரிடம் அளித்த புகார் மனு மீது  கடந்த ஓராண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், கிருபானந்த முருகன் என்பவர் ஆட்சியாளர்களின் முழு பாதுகாப்புடன் நேற்று அளித்த புகார் மனு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அமைச்சரின் உதவியாளர் கைது செய்யப் படுகிறார்.  அமைச்சர் சண்முகநாதனின் மகனை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய நிதி மற்றும் பொதுப்பணி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், மின்துறை அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிராக கிருபானந்த  முருகனிடம் வாக்குமூலம் வாங்கப்படுகிறது. அந்த வாக்குமூலத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமோ, இல்லையோ அதை காட்டி சில திரைமறைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். சாதாரண நேரத்தில் இதுபோன்று புகார்கள் அளிக்கப்பட்டால் புகார் கொடுத்தவர் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போது ஊழல் புகார் மீது அதிரடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றால், அதற்கு காரணம் ஊழலை ஒழிக்க தமிழக ஆட்சியாளர்கள் சபதம் எடுத்திருக்கிறார்கள் என்பதல்ல... ஊழல் கணக்கு&வழக்கில் நடந்த சில தவறுகளை சரி செய்ய ஆளுங்கட்சி மேலிடம் துடிப்பது தான் என்பது அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு கூட தெரியும். ஊழல் புகார் மீதான நடவடிக்கைக்கு காரணம் என்னவாக இருந்தாலும் ஜெயலலிதா ஆட்சியில் ஊழல் நடந்திருக்கிறது, ஜெயலலிதாவின் தளபதிகளாக  இருந்து பல்வேறு பேரங்களை முடித்த மூத்த அமைச்சர்கள் இருவருக்கு ஊழலில் தொடர்பு உள்ளது என்றெல்லாம்  வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பது எளிதில் ஒதுக்கிவிடக் கூடிய விஷயமல்ல. கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஊழல்களை நிரூபிப்பதற்கான முக்கிய ஆதாரங்களாகும்.

ஊழல் குற்றச்சாற்றின் அடிப்படையில் அமைச்சரின் உதவியாளர் கைது செய்யப்பட்டிருப்பதும், அமைச்சரின் மகன் தேடப்படுவதும், மூத்த அமைச்சர்களுக்கு எதிராக வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதும் அவர்களுடன் மட்டுமே முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல. இதில் எதையும் ஜெயலலிதாவை தவிர்த்து விட்டு பார்க்க முடியாது. ஜெயலலிதாவுக்கு தெரியாமல் அவரது ஆட்சியில் எதுவும் நடக்காது. மாறாக,  நடைபெற்ற ஊழல்களுக்கான கணக்கை சரியாக காட்டாததற்காகத் தான் நடவடிக்கை பாய்கிறது.

எனவே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வாங்கி ஏமாற்றியது தொடர்பான வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்டுள்ள மூத்த அமைச்சர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.  அவர்களுக்கெல்லாம் முதலமைச்சர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கும் இம்முறைகேடுகளில் பங்கு உண்டு என்பதால் அவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.’’

Wednesday, March 9, 2016

தொழில் அனுமதி ஊழலில் தமிழகத்துக்கு முதலிடம்: ஜெயலலிதா அரசின் சாதனை!: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’புதிய தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி அளிப்பதற்கு கையூட்டு வசூலித்து ஊழல் செய்வதில் ஒட்டுமொத்த இந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் எத்தகைய ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதற்கு இது தான் அசைக்க முடியாத ஆதாரம் ஆகும்.

2011&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதாக வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மக்கள் நலன் சார்ந்த அனைத்து துறைகளிலும் தமிழகத்தை கடைசி இடத்துக்கு தள்ளி எதிர்மறையான சாதனைகளைத் தான் படைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக இந்த தொழில் அனுமதி ஊழலில் புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியாவின் 20 பெரிய மாநிலங்கள் மற்றும் தில்லி யூனியன் பிரதேசத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழல் எவ்வாறு உள்ளது என்பதை அறிவதற்காக தில்லியைச் சேர்ந்த தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழு  நடத்திய ஆய்வில் தான் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

டது. இவற்றில் தொழிலாளர் வளம், ஆட்சி மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகிய அம்சங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதாலும், அரசியல் ஸ்திரத்தன்மை நிலவுவதாலும் இவை சாத்தியம் ஆகியிருக்கின்றன.

ஆனால், தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கு முக்கிய அம்சமான ‘நல்ல வணிக தட்பவெப்பநிலை’யில் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஒரு மாநிலத்தில் நல்ல வணிக தட்பவெப்பநிலை நிலவுகிறதா? என்பது, தொழில் தொடங்க அனுமதி அளிக்க கையூட்டு கோரப்படுகிறதா? அனுமதி தர அதிக காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறதா? சுற்றுச்சூழல் அனுமதிக்கு எவ்வளவு காலம் ஆகிறது? என்பன உள்ளிட்ட 22 காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்த காரணிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் ஊழலில் தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. 

இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து தொழில்துறையினரும் (100%) தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டுமானால் பெருமளவில் பணத்தை கையூட்டாக தர வேண்டும்; இல்லாவிட்டால்  தொழில் தொடங்க அனுமதி கிடைக்காது என்று கூறியுள்ளனர். இந்த புள்ளிவிவரம் தேர்தல் கருத்துக் கணிப்புகளைப் போல கற்பனையாக எழுதப்பட்டதல்ல. மாறாக தமிழகத்தில் தொழில் செய்பவர்களிடம் நேரடியாக பெறப்பட்டதாகும். தமிழகத்தில் இப்போது தொழில் நடத்துபவர்கள் அனைவரும் அதற்காக  ஆட்சியாளர்களிடம் கையூட்டு கொடுத்திருக்கிறார்கள் என்பதால் தான் இவ்வாறு பதில் அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பதில் ஊழல் தலைவிரித்தாடுவதாக ஆய்வில் வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியோ, வியப்போ அளிக்கவில்லை. மாறாக இது ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். இதுபற்றி ஏராளமான ஆதாரங்களுடன் நான் பலமுறை அறிக்கை வெளியிட்டு உள்ளேன். ஏற்கனவே தொழில் தொடங்கிய சிறு தொழிலதிபர் ஒருவர் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை விளக்கும் போது,‘‘ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு சிறிய தொழிற்சாலையை நான் அமைத்தேன். அதில் உற்பத்தித் தொடங்கவிருந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்டத் துறையிலிருந்து அறிவிக்கை வந்தது. அதில் தொழிற்சாலைக்கு இன்னும் சில அனுமதிகளை வாங்க வேண்டும்; அந்த அனுமதிகளை 10 நாட்களில் பெற்று தாக்கல் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் தொழிற்சாலையை பூட்டி சீல் வைப்போம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தத் துறையின் அதிகாரியை சந்தித்த போது, அமைச்சரிடம் பேசும்படி கூறினார்.

 அமைச்சரை சந்தித்த போது, அனைத்து அனுமதிகளையும் வழங்க ரூ.40 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்பின் பேரம் பேசி அதை 20 லட்சமாக குறைத்தேன். எனது தொழிற்சாலையின் முதலீடே ரூ.1 கோடி தான் எனும் போது அதற்கு அனுமதி வாங்க ரூ.20 லட்சம் கையூட்டு என்பது மிகப் பெரிய தொகை’’ என்று கூறியிருந்தார். இப்போது இந்த தகவல் வெளியாகியிருப்பதன் மூலம் எனது குற்றச்சாற்று உண்மை என்று ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அனுமதி அளிப்பதில் தாமதமும், ஊழலும் தான் புதிய தொழில் முதலீடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்றும் அந்த ஆய்வை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தொழில்வளம்  பெருகாததற்கு காரணம் ஊழல் தான் என்பதற்கு இதை விட வலிமையான ஆதாரம் தேவையில்லை. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலை நிலவுவதால் தான் தொழில் தொடங்க யாரும் முன்வருவதில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு குவிந்தாக தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்ட போதிலும், இதுவரை ஒரு புதிய தொழிற்சாலைக்கு கூட அடிக்கல் நாட்டப்படவில்லை. இந்த அவலநிலைக்கு காரணம் ஊழலைத் தவிர வேறொன்றுமில்லை.

ஆட்சியாளர்களின் ஊழல் வெறி காரணமாக தொழில்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 70 நாட்களில் பா.ம.க. ஆட்சி அமையும் போது இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அப்போது தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்பதை தீர்மானிப்பதற்கான 5 அம்சங்களிலும் முதலிடம் வகிக்கும் மாநிலமாகவும், ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம் நடைபெறும் சிறந்த மாநிலமாகவும் தமிழ்நாடு திகழும் என்பது உறுதி!’’

Tuesday, March 8, 2016

மீண்டும் தலைதூக்கும் கள்ளத் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - ராமதாஸ்

சென்னை: காவல்துறை சுதந்திரமாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டு சென்னையில் மீண்டும் தலைதூக்கியுள்ள கள்ளத் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை கோயம்பேடு சந்தை அருகில் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்த கும்பலை காவல்துறை கைது செய்து, அக்கும்பலிடமிருந்து அதிநவீன துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்திருக்கிறது. சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் எந்த தடையும், அச்சமும் இல்லாமல் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. View Photosசென்னையில் பிடிபட்ட கும்பல் கள்ளத் துப்பாக்கி விற்பனையில் இப்போது புதிதாக ஈடுபட்டவர்கள் அல்ல. 4 பேர் கொண்ட இக்கும்பல் பல ஆண்டுகளாக கள்ளத்துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பல வாரங்களாக இவர்களை கண்காணித்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து துப்பாக்கி வாங்க விரும்பும் போக்கிலிகளைப் போல நடித்து ஓரிடத்திற்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்.பிடிபட்ட கும்பலும் நீண்டநாட்களாக கள்ளத் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டு வருவதையும், பிகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ரூ.40 ஆயிரத்துக்கு கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி வந்து ரூ.1 லட்சத்துக்கு விற்பதையும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி, மேலும் பல கும்பல்களும் கள்ளத்துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டிருக்கின்றன. தமிழகத்தில் கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரம் மீண்டும் தலைவிரித்தாடுவதை இந்த வாக்குமூலம் உறுதி செய்கிறது.தமிழகத்தில் கள்ளத் துப்பாக்கி விற்பனை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறுகிறது. ஏதேனும் பெரிய அளவில் குற்றச்செயல்கள் நடைபெறும் போது கள்ளத்துப்பாக்கி விற்பனையாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதும், அதன்பின் நிறுத்தப்படும் கள்ளத் துப்பாக்கி விற்பனை அடுத்த சில மாதங்களில் மீண்டும் தலைதூக்குவதும் வாடிக்கையாகிவிட்டன.கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டுமென நான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், அதற்கான எந்த முயற்சியையும் தமிழகத்தை ஆளும் கட்சியும், இதுவரை ஆண்ட கட்சியும் மேற்கொள்ளவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை கோயம்பேடு, கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் வட இந்திய மாணவர்கள் சிலர் துப்பாக்கிகளுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியான போதே தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.தமிழக அரசும், காவல்துறையும் அந்த விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் பெருகியிருக்காது. மாறாக ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டியதால் தான் கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரம் ஆலமரமாக விழுது விட்டிருக்கிறது.கள்ளத் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதுச்சேரியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த வழக்கறிஞர் காமேஷ், அவருடன் வந்த போக்கிலி ஒருவரால் கள்ளத்துப்பாக்கி மூலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மதுரையில் சில வாரங்களுக்கு முன் அமைச்சர் செல்லூர் ராஜு பயன்படுத்தி வந்த இரு அலுவலகங்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.அதற்கு ஒருவாரம் முன்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப் பட்டது. அண்மையில் சென்னை வியாசர்பாடியில் பள்ளி வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை காவல்துறையினர் கண்டுபிடித்து செயலிழக்க வைத்தனர். இந்த குற்றச்செயல்கள் நடந்து பல மாதங்களாகியும் இவற்றில் ஒரு குற்ற வழக்கில் கூட இன்னும் துப்பு துலக்கப்படவில்லை.தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற பின்னர் 5 ஆண்டுகளில் சட்டம் -ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 9948 படுகொலைகள், சுமார் ஒரு லட்சம் கொள்ளை மற்றும் திருட்டுகள் நடந்துள்ளன. இவை போதாது என கள்ளத்துப்பாக்கி கலாச்சாரமும் மீண்டும் தலைதூக்கியுள்ளது. துப்பாக்கி கலாச்சாரத்திறகு உடனடியாக முடிவு கட்டாவிட்டால், சிறிய குற்றங்களுக்கு கூட கள்ளத் துப்பாக்கியை பயன்படுத்தும் நிலை உருவாகிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மனித உயிர்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும்.கள்ளத் துப்பாக்கி கலாச்சாரத்தை தகர்த்து எறியும் திறமை தமிழக காவல்துறைக்கு உண்டு. ஆனால், இதுவரை ஆட்சியாளர்களின் பிடியில் இருந்ததால் அவர்களின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. இப்போது அரசு நிர்வாகத்தில் ஆட்சியாளர்கள் பிடி அகன்றுவிட்ட நிலையில், காவல்துறை சுதந்திரமாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டு கள்ளத் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

Sunday, March 6, 2016

சாத்தானின் சாபத்திலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியும் : ராமதாஸ்


 அன்புமணி இராமதாஸ் விடுக்கும் உலக மகளிர் நாள் செய்தி! :
 ’’உலக மகளிர் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் உட்பட உலகம் முழுவதும் உள்ள அனைத்து மகளிருக்கும் எனது மகளிர் நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகில் உன்னதமான அவதாரம் என்றால் அது பெண்கள் தான். அவர்கள் தான் இந்த உலகின் ஆக்கும் சக்திகள். அவர்களால் தான் குடும்பமும், சமுதாயமும், ஊரும், மாநிலமும், நாடும், உலகமும் முழுமை பெறுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க மகளிருக்கு உரிய அங்கீகாரம் வழங்க அரசுகள் தவறி விட்டன. அதற்கெல்லாம் மேலாக மது என்ற தீய சக்தியை பாய விட்டு, ஆண்களை அதற்கு அடிமை ஆக்கி குடும்பங்களை சீரழிக்கும் அழிவு சக்தியாக தமிழக அரசு திகழ்கிறது. மதுவை ஒழித்து மக்களைக் காக்க வேண்டும் என்று மகளிர் கோரினால், அவர்களையே மதுவுக்கு அடிமையாக்கும் இழிசெயலை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. பெண்களை மதிக்காத வீடும், பெண்களை நிம்மதியாக வாழ அனுமதிக்காத நாடும் சாத்தானின் சாபத்திற்கு ஆளானவையாகவே கருதப்படும்.

மது என்ற அரக்கனை ஒழிப்பதன் மூலம் தான் இந்த சாத்தானின் சாபத்திலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியும். இது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் முதன்மை இலக்கு ஆகும். ஆட்சியில் அமர்ந்தவுடன் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான கோப்பில் முதல் கையெழுத்தை இடுவதன்  மூலம் இந்த சாபத்திற்கு முடிவு கட்டப்படும். அதற்காக கையெழுத்திடும் வரத்தை பெறுவதற்காக கடுமையாக உழைக்க இந்நன்நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.’’

மதுவை விற்றுக்கொண்டு மகளிர் நாளையும் கொண்டாடுவது முரண்பாடு : ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் விடுத்துள்ள உலக மகளிர் நாள் செய்தி! 
’’ மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் உலக மகளிர் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் மகளிர் சமுதாயத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகளிர் நாள் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டதாகும். 1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின்போது சமத்துவம், சுதந்திரத்துவம், வாக்குரிமை ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பாரிஸ் நகரில் பெண்கள் போராடத் தொடங்கியது தான் மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான தொடக்கம் ஆகும். அதன் பின் உலகம் முழுவதும் உள்ள மகளிர் தங்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த நிலையில் 1911 ஆம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் நாளை ஐ.நா. அமைப்பு முறைப்படி அறிவித்தது. 

இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் மகளிருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுவிட்ட போதிலும்  சமத்துவம், சுதந்திரம் போன்றவை மகளிருக்கு தொடுவானமாகவே தோன்றுகின்றன. மற்றொரு பக்கம் தமிழகத்தில் மகளிருக்கு பாதுகாப்பு  இல்லாத நிலை காணப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில்  தமிழகத்தில் மகளிருக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 37,577 ஆக அதிகரித்துள்ளது.

சமூகச் சூழலை எடுத்துக் கொண்டால்,தமிழகத்தில், பெரும்பாலான அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இதற்கான அடிப்படைக் காரணம் மது தான். குடும்பங்களைச் சீரழிக்கும் மதுவை அரசே விற்பனை செய்து கொண்டு, அரசே மகளிர் நாளையும் கொண்டாடுவது முரண்பாடுகளின் உச்சமாகவே இருக்கும். உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வென்றதைப் போல தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற பெண்களின் விருப்பமும் பா.ம.க. ஆட்சி என்ற கருவி மூலம் நிறைவேறும்.  இப்படி ஒரு உன்னத சாதனையை படைப்பதற்காக கடுமையாக உழைக்க இந்நாளில் உறுதியேற்போம்.’’

அரசின் மனித நேயமின்மையே காரணம்!: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் அறிக்கை:
’’மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கிராமத்தில் உள்ள முகாமைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற அகதி அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மின்சாரக் கம்பத்தில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், வருத்தமும், துயரமும் அளிக்கிறது. நம்பி வந்த அகதிகளின் உயிரைக் காக்கத் தவறியதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் சில அதிகாரிகளின் மனிதநேயமற்ற அணுகுமுறை தான் இலங்கை அகதி ரவிச்சந்திரனின் தற்கொலைக்கு காரணம் ஆகும். கூத்தியார்குண்டு முகாமிலுள்ள அகதிகளை கணக்கெடுக்கும் பணி சில நாட்களாக நடைபெற்று வருகிறது. முகாமில் நேற்று கணக்கெடுப்புக்காக சென்ற வருவாய் அதிகாரி ஒருவர், ரவிச்சந்திரன் முகாமில் இல்லாதது குறித்து விசாரித்துள்ளார். அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன் உடல்நலம் பாதித்த பேரனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வந்ததால் தாமதமானதாக கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த அதிகாரி, ரவிச்சந்திரனின்  பெயரை அகதிகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார். இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ முடியும்? என்று ரவிச்சந்திரன் கேட்ட போது, வாழ வழியில்லை என்றால் மின்சாரம் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொள் என்று திமிராகக் கூறியுள்ளார். இதனால் மனம் உடைந்த ரவிச்சந்திரன் அங்கிருந்த  உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி மின் கம்பியை கால்களால் மிதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இலங்கைப் போரில், உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தங்களின் உடமைகளையெல்லாம் இழந்து அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களை தொப்புள் கொடி உறவுகளாக கருதி அரவணைக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், தமிழக அரசு மனிதநேயமின்றி அவர்களை வேண்டாத விருந்தாளிகளாகவும், கூடுதல் சுமையாகவும் கருதுவதன் விளைவு தான் ஓர் அப்பாவி உயிரை மாய்த்துக் கொண்டதில் முடிந்திருக்கிறது. அரசின் தவறான அணுகு முறையால்  அகதிகள் உயிரை மாய்த்துக் கொள்வது இது முதல் முறையல்ல. கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டும், மர்மமான முறையிலும் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து எந்த விசாரணையும் நடத்தப் படவில்லை. இலங்கைத் தமிழ் அகதிகளை மனிதர்களாக பார்க்காமல் விலங்குகளை விட கேவலமாக தமிழக அரசு கருதுவதே இதற்கு காரணம்.

அகதிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்; செங்கல்பட்டு சிறப்பு முகாமை மூடி அங்குள்ள இலங்கை அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இப்போதைய அதிமுக அரசும், முந்தைய திமுக அரசும் இக்கோரிக்கையை காதில் போட்டுக் கொள்வதே இல்லை. மாறாக அங்குள்ள அகதிகளை பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்குவதில் தான் காவலர்கள் இன்பம் காண்கின்றனர். காவல்துறையினரின் கொடுமைகளை தாங்க முடியாமல்  சசிகரன் என்ற அகதி நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்றார். செந்தூரன் என்ற அகதி தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல முறை சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் நடத்தினார். ஒரு கட்டத்தில் அவரது போராட்டத்துக்கு பணிந்து 17 அகதிகள் விடுதலை செய்யப்பட்ட போதிலும், மீதமுள்ள ஈழ அகதிகள் மீதான கொடுமைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

முகாம்களிலும், சிறப்பு முகாம்களிலும் இழைக்கப்படும் கொடுமைகள், முகாமை விட்டு வெளியேறி சுதந்திரமாக வாழ முடியாத அவலம் ஆகியவற்றை சகித்துக் கொள்ள முடியாத அகதிகள் தங்களின் உயிர்களை பணயம் வைத்து ஆஸ்திரேலியாவில் குடியேறும் நோக்குடன் படகுகள் மூலம் பயணம் மேற்கொள்வதும், பயணத்தின் போது படகு கவிழ்ந்து இறப்பதும் வாடிக்கையாகிவிட்டன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இதுபோன்று 600க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பலரின் உயிரிழப்பு வெளி உலகத்துக்கு தெரியாமலேயே போய்விட்டது. இத்தனைக்கும் காரணம் ஈழ அகதிகளை அகதிகளாக பார்க்காமல் சட்ட விரோதமாக குடியேறியவர்களாக அரசு பார்ப்பது தான்.

2011-ஆம் ஆண்டுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், இலங்கை தமிழ் அகதிகள் கவுரவமாக வாழ வகை செய்யப்படும் என்பது உள்ளிட்ட 5 வாக்குறுதிகள் அடங்கிய அகதிகள் சிறப்பு மறுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அத்தகைய திட்டம் செயல்படுத்தப் படாததால் மறு வாழ்வு தேடிய அகதிகள் இருக்கும் உயிரை இழக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மின்சார கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்ட ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஈழத் தமிழ் அகதிகளின் உயிரிழப்புக்கும் தமிழகத்தை ஆளும் கட்சியும்,  ஆண்ட கட்சியும் தான் பொறுப்பேற்க வேண்டும்.  

போர் உள்ளிட்ட காரணங்களால் தஞ்சம் தேடி வரும் அகதிகளை உள்நாட்டு குடிமக்களைப் போல நடத்த வேண்டும் என ஐ.நா கூறுகிறது. ஆனால், ஈழத் தமிழ் அகதிகளின் நலனுக்காக சட்டம் கூட தமிழகத்தில் நிறைவேற்றப்படவில்லை. 

இந்தியாவில் தஞ்சம் புகுந்த பாலஸ்தீன அகதிகளும், திபெத் அகதிகளும் கவுரவமாக வாழ வகை செய்யப்பட்டுள்ளது. திபெத் அகதிகளுக்கு கூட்டுறவு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு கொடைக் கானல் போன்ற பகுதிகளில் அவர்கள் வணிகம் செய்ய உதவிகள் வழங்கப் பட்டிருக்கின்றன. வங்க தேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவியர் களுக்குக் கூட சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், நமது சொந்தங்களாக ஈழ அகதிகளை குற்றவாளிகளைப் போலவே ஆட்சியாளர்கள் பார்க்கின்றனர். 

இந்த நிலை மாற்றப்பட்டால் தான் இலங்கை அகதிகள் தமிழகத்தில் சுய மரியாதையுடனும், கவுரவத்துடனும் வாழ முடியும். பாட்டாளி மக்கள் கட்சி அரசு அமைந்தவுடன் ஈழத் தமிழ் அகதிகளின் குறைகள் தீர்க்கப்படும்; கோரிக்கைகள் ஏற்கப்படும் என உறுதியளிக்கிறேன்.’’

Thursday, March 3, 2016

அமைச்சர்கள் மீதான மோசடிப் புகார்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்! : ராமதாஸ்

அமைச்சர்கள் மீதான மோசடிப் புகார்கள் குறித்து 


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை:
’’நாளிதழ்களைத் திறந்தாலே அ.தி.மு.க. அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான மோசடிப் புகார்கள் குறித்த செய்திகள் தான் பக்கம் பக்கமாக இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இப்புகார்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டிய அரசு, இவற்றை மூடி மறைக்கத் துடிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா அரசு பதவியேற்ற நாளில் இருந்தே அனைத்துத் துறைகளிலும் ஊழல் கொடிகட்டி பறக்கத் தொடங்கி விட்டது. தகுதி, திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தான் வேலை வழங்க வேண்டும் என்ற சட்டத்தையும், விதியையும் காலில் போட்டு மிதித்து விட்டு, பணம் கொடுப்பவர்களுக்குத் தான் அரசு வேலை என்பது எழுதப்படாத சட்டமாக மாறி விட்டது. குறிப்பாக அதிக எண்ணிக்கையில் பணி நியமனம் நடக்கும் போக்குவரத்துத் துறை, சத்துணவு மற்றும் சமூக நலத்துறையில் தான் அதிக ஊழல்களும், மோசடிகளும் அரங்கேற்றப்படுகின்றன. போக்குவரத்துத் துறையில் ஓட்டுனர், நடத்துனர், பொறியாளர் வேலை தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வாங்கி ஏமாற்றி விட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இவர்களிடம் மோசடி செய்யப்பட்ட தொகை மட்டும் ரூ. 4 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டில் 7500-க்கும் மேற்பட்ட ஓட்டுனர், நடத்துனர்களும் பொறியாளர்களும் நியமிக்கப்பட்டனர். இதற்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ஓட்டுனர், நடத்துனர் வேலைக்கு ரூ.3 லட்சம், பொறியாளர் பணிக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை என விலை நிர்ணயித்து தமிழகம் முழுவதும் தரகர்கள் மூலம் வசூல் வேட்டை நடைபெற்றது. இது குறித்து அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இந்த ஊழல் குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று ஆணையிட வலியுறுத்தி தமிழக ஆளுனர் ரோசய்யாவிடம் எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி குழு மனு அளித்தது. ஆனால், அதன் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இடைப்பட்ட காலத்தில் போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவரது உறவினர்களும் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக  இப்போது காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சத்துணவு பணியாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி  பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் மீதும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் அறையிலேயே தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவமும் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் சின்னையா ரூ.25 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்கள் காமராஜ், தோப்பு வெங்கடாச்சலம், ஆனந்தன் உட்பட மேலும் பல அமைச்சர்கள் மீதும் பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார்கள் எழுந்துள்ளன.

பொதுவாழ்வில் இருப்பவர்கள் ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் பெரும்பான்மையானோர் மீது மோசடி புகார்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் கடந்த 58 மாதங்களில் 32 அமைச்சர்கள் பதவிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மோசடிப் புகார்களுக்கு ஆளானவர்கள் ஆவர். இதை வைத்துப் பார்க்கும் போது மோசடிக் குற்றச்சாற்றின் அடிப்படையில் தான் இவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும், அவ்வாறு பதவி நீக்கம் செய்வது மட்டுமே தண்டனையாகாது. மாறாக மோசடி புகார்கள் குறித்து விசாரணை நடத்தி தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும்.

ஆனால், மக்களுக்காகவே வாழ்வதாக கூறிக்கொள்ளும் முதலமைச்சர் ஜெயலலிதா, பாதிக்கப் பட்ட மக்களின் புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஆணையிட மறுப்பதன் காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு வேளை அமைச்சர்கள் மீதான மோசடிப் புகார்கள் குறித்து விசாரணை நடத்தினால் அது போயஸ் தோட்டம் வரை நீளும் என்ற அச்சம் தான் அவரைத் தடுக்கிறதா? எனத் தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான மோசடிப் புகார்கள் மீது விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். இல்லாவிட்டால் தம்மை காப்பாற்றிக் கொள்வதற்காகத் தான் ஜெயலலிதா விசாரணையை தடுக்கிறார் என்று தான் கருத வேண்டியிருக்கும்.’’

ராமதாஸ் எழுதிய 6 நூல்கள் வெளியீட்டு விழா



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கைகள் ‘என் கடன் பணி செய்வதே’ தலைப்பில் 5 தொகுதிகளாக தொகுக்கப்பட்டிருக்கின்றன.

1. சமூக நீதியும் தமிழும் என் உயிர் மூச்சு, 2. மக்களைக் காக்க மது விலக்கு, 3. ஒரே தீர்வு தமிழீழம், 4. நதிநீர் பிரச்சினைக்கு நான் விரும்பும் தீர்வு, 5. எழுக தமிழ்நாடே! ஆகியவை தான் அந்த 5 தொகுதிகளின் தலைப்புகள் ஆகும். அவை மட்டுமின்றி, ராமதாஸின் டுவிட்டர்ப் பதிவுகள் ‘என் குறள்’ என்ற தலைப்பில் தனிப் புத்தகமாக தொகுக்கப்பட்டிருக்கிறது.

ராமதாஸ் படைப்பில் உருவான இந்த 6 நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகர், தியாகராயா சாலையில் உள்ள ஜி.ஆர்.டி. கன்வென்ஷன் சென்டரில் வரும் 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். நிறைவாக ராமதாஸ் ஏற்புரை நிகழ்த்துவார். விழாவுக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே மணி தலைமையேற்கிறார். 

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: