பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’வருவாய்க்கு மீறி ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கிலிருந்து ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகளை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா? என்ற வினா எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்படவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யலாம் என்று கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மக் குமாரும், அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யாவும் அரசுக்கு பரிந்துரை அளித்திருந்தனர். அதனடிப்படையில் தான் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவிருந்தது. இந்த பரிந்துரைகள் குறித்து தலைமை வழக்கறிஞரிடம் சில விளக்கங்களைக் கேட்க வேண்டியிருந்ததாகவும், ஆனால், அரசு தலைமை வழக்கறிஞர் ஊரில் இல்லாததால் இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா கூறியிருக்கிறார். இந்தக் காரணம் சரியானது அல்ல என்று கூறி நிராகரிக்க முடியாது. அதேநேரத்தில் மேல்முறையீடு குறித்து முடிவெடுக்கப்படாததால் மக்களிடையே ஐயம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது.
கர்நாடக அரசின் நிலை தொடர்பாக மக்களுக்கு ஐயம் ஏற்பட்டிருப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்வதாக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் ஏராளமான ஓட்டைகள் இருப்பதையும், இவற்றைச் சுட்டிக்காட்டி இந்த வழக்கில் கர்நாடக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா உள்ளிட்டவர்களுக்கு கடந்த 13 ஆம் தேதி நான் கடிதம் எழுதியிருந்தேன். இவ்வழக்கு விசாரணையில் முக்கியப் பங்காற்றியவரும் சிறப்பு அரசு வழக்கறிஞருமான ஆச்சார்யாவும், தலைமை வழக்கறிஞரும் இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யாவிட்டால் அது தவறான முன்னுதாரனம் ஆகிவிடும் என்று கர்நாடக அரசை எச்சரித்திருந்தனர். சட்ட வல்லுனர்களும் இதையே கூறியிருந்தனர்.
அதேநேரத்தில் கர்நாடக காங்கிரசில் உள்ள ஜெயலலிதா ஆதரவு தலைவர்கள் பலர் இவ்வழக்கில் மேல்முறையீடு கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள். இத்தகைய சூழலில் கடந்த 21 ஆம் தேதி நடைபெறவிருந்த கர்நாடக அமைச்சரவை கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று செய்திகள் வெளியாகும் போது மேல்முறையீடு செய்வதிலிருந்து கர்நாடகம் பின்வாங்குகிறதோ? என்ற ஐயம் ஏற்படுவதில் தவறில்லை.
சொத்து வழக்கில் மேல்முறையீடு செய்ய ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நேரம் இருப்பதால், நன்றாக சிந்தித்து பொறுமையாக முடிவெடுக்கலாம் என கர்நாடக அரசு கருதியிருக்கலாம்; அவ்வாறு கருதினால் அது தவறும் இல்லை. ஆனால், மேல்முறையீடு செய்வதற்கான காரணங்கள் வலுவாக இருக்கும் நிலையில், மேல்முறையீடு செய்வது பற்றி எப்போது முடிவெடுக்கப்படும் என்பதை கர்நாடக அரசு உறுதியாக அறிவிக்காமல் இருப்பதும், முடிவெடுப்பதற்கான கூட்டங்களை அறிவித்துவிட்டு திடீரென அதை மாற்றுவதும் தான், இந்த விஷயத்தில் தேவையில்லாத யூகங்களை ஏற்படுத்துகிறது. இவ்வாறு தேவையில்லாத யூகங்கள் ஏற்படுவதற்கு இடம் தராமல், அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எப்போது நடக்கும்? என்பது குறித்த விவரங்களை கர்நாடக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
மற்றொருபுறம், இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதாக சென்னையில் நேற்று நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் கலைஞர் அறிவித்திருக்கிறார். இந்த வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கலைஞர் கூறிவந்த நிலையில், தி.மு.க.வும் மேல்முறையீட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 14 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தேன். இத்தகைய சூழலில், மேல்முறையீடு செய்ய தி.மு.க. முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் மேல்முறையீட்டுக்கு அதிக கால அவகாசம் இருக்கிறது என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது. அநீதி அதிக நாட்களுக்கு ஆட்சி செய்ய அனுமதிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் நீதியை உடனடியாக நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றக் கோடை விடுமுறை முடிவதற்கு முன்பாகவே மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து, ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் வல்லமை பெற்ற மூத்த வழக்கறிஞரை நியமித்து இவ்வழக்கை நடத்த திமுக முன்வர வேண்டும் என மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.’’
No comments:
Post a Comment