Tuesday, May 26, 2015

அரசு செலவில் தேர்தல் பிரச்சாரமா? முதல்வரிடம் இழப்பீடு பெற வேண்டும்: ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை: 
’’தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு பதவியேற்று நான்காண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக  அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நாளிதழ்களில் 4 பக்கங்கள் விளம்பரம் வெளியிடப் பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் சாதனைகளே செய்யப்படவில்லை என்ற போதிலும் விளம்பரங்களை வெளியிடுவதை பா.ம.க. எதிர்க்கவில்லை. ஆனால், அரசு விளம்பரமே அ.தி.மு.க.வுக்கான தேர்தல் பிரச்சாரமாக மாற்றப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக அரசின் சாதனைகள் என்று கடந்த 3 ஆண்டுகளாக என்னென்ன பட்டியலிடப்பட்டனவோ, அவையே தான் இப்போதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. விளம்பரத்தின் மையக்கருத்தாக ‘‘செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஆற்றல் மிக்க தலைமையில் நாடு போற்றும் நான்காண்டு ஆட்சி... என்றும் அம்மாவின் ஆட்சி’’ என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளது. உண்மையில் மே 15 ஆம் தேதியுடன்  4 ஆண்டுகள் முடிவடைந்து மே 16 ஆம் தேதி முதல் ஐந்தாம் ஆண்டு தொடங்கிவிட்டது. இதனால்,  அரசின் சாதனைகள் குறித்த விளம்பரம் கடந்த 16 ஆம் தேதியே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், அப்போது விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தால் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் என்று குறிப்பிட வேண்டியிருந்திருக்கும் என்பதால், அரசு நிர்வாகத்தின் நாள்காட்டியையே 10 நாட்களுக்கு தள்ளிவைத்து தாம் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு இன்று விளம்பரம் வெளிவர வைத்திருக்கிறார்.  எதுவாக இருந்தாலும் தாமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்; விளம்பரங்கள் கூட தாம் பதவியேற்ற பிறகுதான் வெளியிடப்பட வேண்டும் என்ற ஜெயலலிதாவின் தன்முனைப்பையே இது காட்டுகிறது.

தமிழக அரசின் சாதனை விளம்பரத்தில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் அப்பட்டமாக மீறப் பட்டிருக்கின்றன. அரசு விளம்பரங்களில் முதலமைச்சரின் படங்கள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்ற அறிவுரையை பின்பற்றி விளம்பரத்தில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெற வில்லை என்றாலும், ஒட்டுமொத்த விளம்பரமுமே ஜெயலலிதாவின் புகழ்பாடும் வகையில் அமைந்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக ‘‘என்றும் அம்மாவின் ஆட்சி’’ என்ற வாசகத்தின் மூலம் அரசு விளம்பரம் அதிமுகவின் பிரச்சார விளம்பரமாக மாற்றப்பட்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. இன்னும் ஓராண்டில் அதிமுக அரசின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், எந்த அடிப்படையில் ‘‘என்றும் அம்மா ஆட்சி’’ என அரசு விளம்பரத்தில் குறிப்பிட முடியும் என தெரியவில்லை. இவ்வாறு கூறியதன் மூலம் அரசு விளம்பரத்தை அதிமுக விளம்பரமாகவும், தமிழக அரசை அதிமுகவின் துணை அமைப்பாகவும் மாற்ற ஜெயலலிதா முயற்சி செய்திருக்கிறார். இது மலிவான விளம்பர உத்தி என்பது மட்டுமின்றி, அரசியல் சட்டத்திற்கு எதிரான செயலும் ஆகும். 

அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,‘‘ஒரு குறிப்பிட்ட திட்டம் குறித்த அரசு விளம்பரங்களில் ஆளுங்கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறும் போது, அத்திட்டத்தையே சம்பந்தப்பட்ட தலைவர் தான் உருவாக்கியது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது; இது தனிநபர் துதிபாடும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது. எனவே தலைவர்கள் படம் இடம்பெறக் கூடாது’’ என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பின் நோக்கம் அரசு விளம்பரங்களில் தலைவர்கள் படம் இடம்பெறக்கூடாது என்பது மட்டுமல்ல... தனிநபர்களை துதிபாடும் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் தான். ஆனால், இத்தீர்ப்புக்கு மாறாக விளம்பரத்தில் ஜெயலலிதா புகழ் பாடப்பட்டு இருப்பதுடன், என்றும் அவரது ஆட்சி தான் நீடிக்கும் என்றும் பிரச்சாரமும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விளம்பரத்திற்காக ஏறக்குறைய ரூ. 15 கோடி மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டு இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தையும், அரசியல் சட்டத்தையும் மதிக்காமல் அரசு செலவில் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் வகையில் விளம்பரம் வெளியிடப்பட்டதை அனுமதிக்க முடியாது. இப்படி ஒரு விளம்பரம் வெளியிட்டதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த விளம்பரத்திற்காக செலவிடப்பட்ட தொகையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் இந்த அதிகாரிகளிடமிருந்து வசூலிக்க தமிழக ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: