பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசுவின் சித்திரைத் திருநாள் வாழ்த்துச் செய்தி :
’’உழைப்புடனும், கொண்டாட்டத்துடனும் நெருங்கிய தொடர்புள்ள சித்திரை திருநாளை கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தை திங்கள் முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்பதற்கு எத்தனையோ வரலாற்று சான்றுகள் உள்ளன. அதன்படி தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம். அதே நேரத்தில் சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரை முழுநிலவு நாளில்தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவார்கள். அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும் காலம் என்பதால் சித்திரை திருநாள் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பர். ஆனால் ஊழல் நிறைந்த ஆட்சியில் தமிழக மக்களால் கனவில் கூட மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை.
சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடைய விழா ஆகும். எனவே, தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் ஊழல்களும், தீமைகளும் அகன்று உண்மையும், நன்மையும் துணை சேரும் என்று நம்பலாம். உலகுக்கே உணவு படைக்கும் உழவர் வாழ்விலும், உழைக்கும் தமிழர் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் சூழ வேண்டும் என்பதற்காக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள நாம் நமது இலக்கை அடைவதற்காக அயராது உழைப்போம் என்று இந்த நன்நாளில் உறுதி ஏற்போம்.’’
No comments:
Post a Comment