Friday, April 10, 2015

நீதி விசாரணை கோரி 13-ஆம் தேதி பா.ம.க. போராட்டம்! ராமதாஸ் அறிவிப்பு!

 
ஆந்திராவில் கட்டிட வேலைக்கு சென்ற அப்பாவி தமிழர்கள் 20 பேரை அம்மாநிலக் காவல்துறையினர் கடத்திச் சென்று காட்டில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளனர். இந்தப் படுகொலைகள் தொடர்பாக ஆந்திரக் காவல்துறை சார்பில் அளிக்கப்படும் விளக்கம் ஏற்க முடியாததாகும். இதுகுறித்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றமும் காவல்துறையின் விளக்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளது.

அப்பாவித் தமிழர்களை திட்டமிட்டு படுகொலை செய்திருப்பதால் இதுகுறித்த உண்மைகளை ஆந்திரக் காவல்துறை மூடி மறைக்கவே முயலும். எனவே, இந்த படுகொலைகளின் பின்னணியில் ஒளிந்துள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டுமானால் இதுகுறித்து பணியிலுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது மத்திய புலனாய்வு அமைப்பின் மூலம் விசாரணை நடத்துவதே சரியானதாக இருக்கும். அதுமட்டுமின்றி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் இருமாநில அரசுகளும் இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 13 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை சாலையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்  மாபெரும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: