லஞ்சம் தராத மருத்துவமனைகளை மிரட்டிய அமைச்சரை பதவி நீக்க வேண்டும்: ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுவதாக கடந்த 6ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாற்றியிருந்தேன். அதற்குப் பிறகும் தனியார் மருத்துவமனைகளிடம் நவீன வடிவத்தில் கையூட்டு பெறுவதும், கையூட்டு தர மறுக்கும் மருத்துவமனைகளை மிரட்டுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 650-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் செயல்படுத்தி வரும் நிலையில் அவற்றில் பெரிய அளவிலான மருத்துவமனைகளின் உரிமையாளர்களை மட்டும் கடந்த 31-ஆம் தேதி சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னைக்கு அழைத்து பேசியுள்ளார். அப்போது, மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்படி ஒவ்வொரு மருத்துவமனையும் கடந்த 4 ஆண்டுகளில் எவ்வளவு வருவாய் ஈட்டியுள்ளதோ, அதில் 10% அளவுக்கு ஆளுங்கட்சியின் ஜெயா தொலைக்காட்சிக்கு விளம்பரம் தரும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். அதாவது ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவக் காப்பீட்டுத் திட்டப்படி 4 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருவாய் ஈட்டியிருந்தால் அது ஜெயா தொலைக்காட்சிக்கு ரூ.1 கோடிக்கு விளம்பரம் தர வேண்டும். இதை ஏற்றுக்கொண்ட பல தனியார் மருத்துவமனைகள் ஆளுங்கட்சித் தொலைக்காட்சிக்கு விளம்பரம் கொடுத்து வருகின்றன.
அமைச்சரின் அழைப்பை ஏற்று சந்திக்க வராத தனியார் மருத்துவமனைகளை இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூன்றாம் நபர் நிர்வாகத்தை (Third Party Administration) கவனித்துக் கொள்ளும் விடால் ஹெல்த் (Vidal Health), எம்.டி. இந்தியா (MDIndia), மெடி அசிஸ்ட் (Medi Assist ) ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டு அமைச்சரின் விருப்பத்தை தெரிவித்து அதை செயல்படுத்தும்படி அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி அதிக அளவில் இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ள அண்டை மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவமனை ரூ.4.00 கோடிக்கு விளம்பரம் தர வேண்டும் என்று அமைச்சர் தரப்பில் அழுத்தம் தரப்பட்டிருக்கிறது. ஆனால், அதை ஏற்க அம்மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல் தமிழகத்திலுள்ள சில மருத்துவமனைகளும் கையூட்டு தர மறுத்துவிட்டன. இதையடுத்து இம்மருத்துவமனைகளை காப்பீட்டுத் திட்டத்திலிருந்து ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு மூன்றாம் தரப்பு நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளும் நிறுவனங்கள் மூலம் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சர் விருப்பத்தை நிறைவேற்றாத மருத்துவமனைகளை முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனைகளின் நிலை இப்படியென்றால் அரசு மருத்துவமனைகளின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட ரூ.764 கோடியில் 15% தொகையை அமைச்சர் மற்றும் ஆளுங்கட்சியின் பல்வேறு நிலைகளில் இருப்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும், அதற்குப் பணிந்து கையூட்டாகத் தரப்பட்ட பணத்தை ஈடுகட்டுவதற்காக தரம் குறைந்த மருந்துகளும், மருத்துவக் கருவிகளும் வாங்கப்படுகின்றன. சேலம் அரசு அதி உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தரம் குறைந்த மருந்துகளை அதிக விலைக்கு வாங்கியதாக வழக்குத் தொடரப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஊழல் நடப்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையில்லை.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நடைபெறும் ஊழலால் சுகாதாரத்துறை அமைச்சரும், அவருக்கு மேல் உள்ளவர்களும் பயனடையும் நிலையில், ஊழல்கள் அம்பலமாகும் போது கீழ்நிலை ஊழியர்கள் மட்டும் சிக்க வைக்கப்படுகிறார்கள். சேலம் அரசு மருத்துவமனை ஊழல் இப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவருக்கு முன் இத்துறையை கவனித்த கே.சி. வீரமணி ஆகியோருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், கண்காணிப்பாளர், உதவியாளர் நிலையிலுள்ள ஊழியர்களை மட்டும் கைது செய்துவிட்டு மேல்மட்டத்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு துடிக்கிறது. அதேபோல், தனியார் மருத்துவமனைகளிடமிருந்து கையூட்டு வாங்குவதற்கு தடையாக இருந்த சுகாதாரப் பணிகள் திட்ட இயக்குனர் சண்முகத்தை மாற்றி விட்டு, தமக்கு சாதகமான அதிகாரிகளின் உதவியுடன் தனது விருப்பத்தை சுகாதாரத்துறை அமைச்சர் நிறைவேற்றிக் கொள்கிறார்.
இதற்கு முடிவு கட்டும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் நடைபெறும் ஊழல்கள் பற்றி விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். விசாரணை நியாயமாக நடைபெற வசதியாக இதில் சம்பந்தப்பட்ட விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதன் மூலம் இந்த ஊழலால் பாதிக்கப்பட்ட, அமைச்சரால் அச்சுறுத்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோரை தற்கொலையிலிருந்து காக்க வேண்டும்.’’
No comments:
Post a Comment