Thursday, April 3, 2014

அன்புமணி ராமதாஸ் கார் மீது கல்வீசி தாக்குதல்... ஒருவர் கைது

தர்மபுரி: தர்மபுரி அருகே அன்புமணி ராமதாஸ் பிரசார வேன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆசாமியை கைது செய்ய கோரி கட்சி தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று மொரப்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அவர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வியாழக்கிழமை இரவு சுமார் 8 மணி அளவில் தென்கரைக்கோட்டை பகுதியில் பிரசாரத்தை முடித்து விட்டு சந்தப்பட்டி நோக்கி கட்சி நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் பிரசார வேனில் வந்து கொண்டு இருந்தார்.அப்போது பெத்தூர்- பாப்பிசெட்டிப்பட்டி அருகே சந்தப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது இருளில் மறைந்து இருந்த மர்ம ஆசாமி ஒருவன் அன்புமணி ராமதாஸ் சென்ற பிரசார வேன் மீது சரமாரியாக கல்வீசி தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதில் வேனின் முன் பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் வேன் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. டிரைவர் உடனே வண்டியை அந்த இடத்திலேயே நிறுத்தினார். இதில் அன்புமணி ராமதாசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும் இது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. இந்த கல்வீச்சு சம்பவம் குறித்து மொரப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சாலை மறியல்அப்போது அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ‘டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார வேன் மீது கல்வீசி தாக்கிய மர்ம ஆசாமியை கைது செய்ய வேண்டும். அன்புமணி ராமதாசுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்றும், பாதுகாப்பு வழங்காத போலீசாரை கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரூர்- சிந்தல்பாடி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேட்பாளரின் வேன் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் தலைமையில் ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.பி. சமாதானம்இந்த நிலையில் மாவட்ட போலீஸ் எஸ்.பி அஸ்ரா கர்க் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் அன்புமணி ராமதாசிடம் பேசும் போது, கல்வீச்சு சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்து இருக்கிறோம். இந்த கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்வோம் என்று உறுதி அளித்தார்.அன்புமணி வேண்டுகோள்இதைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்களிடம், ‘போலீஸ் அதிகாரிகளின் அறிவுரையை ஏற்று கலைந்து செல்ல வேண்டுகிறேன். வன்முறையில் பா.ம.க.வுக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது. எனவே அனைவரும் கலைந்து செல்லுங்கள்' என்று கூறினார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அன்புமணி ராமதாஸ் வேறு ஒரு கார் மூலம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.ஒருவர் கைதுஇதற்கிடையே, கல்வீச்சு தொடர்பாக பெத்தூர் காலனி பகுதியை சேர்ந்த மதியழகன் (வயது 40) என்பவரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். மேலும், சிலரை தேடி வருகிறார்கள்.
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: