Friday, November 8, 2013

நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் ஜனநாயகத்தை சீர்குலைத்து விடும்: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீதிபதிகள் நியமன முறையில் மாற்றம் செய்வதற்காக 120 ஆவது அரசியல் சட்டத் திருத்த முன் வரைவையும், நீதிபதிகள் நியமன ஆணைய சட்ட முன்வரைவையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்ட இந்த இரு சட்ட முன்வரைவுகளையும் அடுத்த மாதம் தொடங்கும் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது மக்களவையில் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் தற்போது உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் 5 பேரைக் கொண்ட குழு தேர்வு செய்து வருகிறது. இந்த முறையில் சில குறைபாடுகள் உள்ளன என்பதும், நீதிபதிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதும் உண்மை தான். ஆனால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மாற்றம் நோயை அழிப்பதற்குப் பதிலாக நோயாளியையே அழித்துவிடும் தன்மை கொண்டதாகும்.

இந்திய ஜனநாயகத்தின் 3 தூண்களாக கருதப்படுபவை நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவை ஆகும். இந்த மூன்றும் ஒன்றின் அதிகாரத்தில் மற்றொன்று குறுக்கிடாமல், அதேநேரத்தில்  ஒன்றையொன்று ஒழுங்குபடுத்தும் வகையில் செயல்பட்டால் தான் ஜனநாயகம் தழைத்தோங்கும். ஆனால், மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தின்படி அமைக்கப்படும் 6 பேர் கொண்ட நீதிபதிகள் நியமன ஆணையத்தில் நீதித்துறைக்கு இணையாக நிர்வாகத்துறைக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப் பட்டிருப்பதால், நீதிபதிகள் தேர்வில் நிர்வாகத்துறையின் ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும்.  இதனால் அத்துறையினருக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டிய நெருக்கடி நீதிபதிகளுக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது.  இது நீதித்துறை  சுதந்திரத்தை பறிப்பதுடன், ஜனநாயக அமைப்பையும் சீர்குலைத்துவிடும்.
120 ஆவது திருத்தத்தின் வழியாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 124(ஏ) என்ற பிரிவு புதிதாக சேர்க்கப்படுவதன் மூலம்  நீதிபதிகள் நியமன ஆணையம் அரசியல் சட்ட பாதுகாப்பை அனுபவிக்க முடியாது என்பதுடன், சாதாரண சட்டத்திருத்தத்தின் மூலம் அதன் தன்மையை மாற்றிவிட முடியும். இதனால், இனிவரும் காலங்களில் நீதிபதிகள் நியமன ஆணையத்தை தங்களது விருப்பம்போல ஆட்சியாளர்கள் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். இது நீதிபதிகள் நியமன நடைமுறையை கேலிக்கூத்தாக்கி விடும்.

நீதிபதிகள் நியமன முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசு துடித்துக் கொண்டிருப்பதன் நோக்கம், நீதித்துறையை சீரமைக்க வேண்டும் என்பதல்ல; மாறாக துடிப்பான தீர்ப்புகளை கொடுத்து அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் நீதித்துறையின் சிறகுகளை வெட்ட வேண்டும் என்பது தான். நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்த சட்டமுன்வரைவுகள் மீது நடைபெற்ற விவாதத்தில் மத்திய அமைச்சர்கள் ஆற்றிய உரைகள் தான் இதற்கு உதாரணம் ஆகும்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களை எதிரியாக மத்திய அரசு பார்க்கக்கூடாது; மாறாக தறிகெட்டு ஓடும் குதிரையை கட்டுப்படுத்துவதற்கான கடிவாளங்களாகத் தான் பார்க்க வேண்டும். எனவே, நீதிபதிகள் நியமன ஆணைய சட்ட முன்வரைவு, 120ஆவது அரசியல் சட்டத்திருத்த முன்வரைவு  ஆகியவற்றை  மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். அவற்றுக்கு மாற்றாக நீதிபதிகள் நியமன முறையில் ஆக்கபூர்வமான மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: