Monday, November 4, 2013

காமன்வெல்த்: இலங்கையை நீக்குவதும், தண்டிப்பதுமே தமிழர்களின் இலக்கு: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காமன்வெல்த் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கும், அதில் இந்தியா பங்கேற்பதற்கும் எதிராகவே தமிழக மக்களின் உணர்வு இருக்கிறது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்களும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், தமிழக மக்களின் கோரிக்கைகளை ஏற்பது குறித்த தனது முடிவை மத்திய அரசு இன்று வரை அறிவிக்கவில்லை. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கப்போவதாக செய்திகள் வெளியானபோது கூட, அதுபற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தான் மத்திய அரசு கூறியதே தவிர, மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. இந்த நேரத்தில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக்கூடாது என்று தமிழ்நாடு மற்றும் புதுவையைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், வி. நாராயணசாமி ஆகியோர் வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்குப் பிறகும் காமன்வெல்த் மாநாடு தொடர்பான முடிவை இன்னும் அறிவிக்காமல் மத்திய அரசு கள்ள மவுனம் சாதித்து வருகிறது. அதுமட்டுமின்றி, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டியது மிகவும் அவசியம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம், மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மற்றும் ஞானதேசிகன் உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

இவற்றைப் பார்க்கும்போது காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கலாமா? வேண்டாமா? என்ற விவாதத்தை உருவாக்கி, அதன் மூலம் ஈழத்தமிழர்கள் தொடர்பான இன்றைய பிரச்சினை இது மட்டும் தான் என்பது போன்றத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடப்பதாக தோன்றுகிறது. இது பிரச்சினையை திசைத் திருப்பும் நடவடிக்கை ஆகும். இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும் நடத்திய இலங்கை அதிபர் மகிந்த இராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும்; காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்கவேண்டும்; இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை இணைத்து தனித்தமிழீழம் அமைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலம் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் தமிழர்களின் கோரிக்கை ஆகும். இந்தக் கோரிக்கைகளை அடைவதற்கான வழிமுறைகளில் ஒன்று தான் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக்கூடாது என்பதாகும்.

ஆனால், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என்று கூறி வரும் மத்திய அரசு, இன்னொரு புறம் இலங்கை அரசைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் மறைமுகமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. காமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலாளராக இருக்கும் இந்திய அதிகாரியான கமலேஷ் ஷர்மா, அங்கு நடைபெற்ற பல்வெறு மனித உரிமை மீறல்கள் குறித்த காமன்வெல்த் அமைப்பின் விசாரணை அறிக்கைகளை வெளிவரவிடாமல் தடுத்து வருகிறார். அதுமட்டுமின்றி இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவது சாத்தியமல்ல என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறு ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் இலங்கையைக் காப்பாற்றி வரும் மத்திய அரசு, விரைவில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமரை பங்கேற்காமல் இருக்கச் செய்வதன் மூலம் ஈழத் தமிழர் நலனுக்காக மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது. இத்தகைய நடவடிக்கைகளை நம்பி  தமிழர்கள் ஏமாந்துவிடக்கூடாது.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காமல் இருப்பது மட்டுமே போதுமானதல்ல. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் எவரும் பங்கேற்கக் கூடாது; காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும்; இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்தி, அந்நாட்டை தண்டிக்க வேண்டும்; தமிழீழம் அமைப்பது குறித்து உலகம் முழுவதுமுள்ள ஈழத்தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த  இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் தமிழர்களின் விருப்பமாகும். எனவே, இந்தக் கோரிக்கைகளை  மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், இதற்காக தமிழக கட்சிகள் அனைத்தும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: