Saturday, November 16, 2013

இன்றும் தமிழகத்தில் 8½ மணி நேர மின்வெட்டு உள்ளது: டாக்டர் ராமதாஸ் பேச்சு

காஞ்சீபுரம் மாவட்டம் சதுரங்கப்பட்டினத்தை சேர்ந்த அருணாசலம்-பாலாமணி தம்பதியின் மகனும், செஞ்சி தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ.வுமான கணேஷ்குமாருக்கும், கடலூர் மாவட்டம் விழமங்கலத்தை சேர்ந்த வக்கீல் அரங்கநாதன்-மாவட்ட நீதிபதி ராஜலட்சுமி தம்பதியின் மகள் டாக்டர் கவிதாவுக்கும், சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.
திருமணத்தை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்-சரஸ்வதி தம்பதியினர் தலைமை தாங்கி நடத்திவைத்தனர். திருமணத்தை நடத்தி வைத்து டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
நீதி தேடிச்செல்லும் ஒவ்வொரு குடிமகனின் கடைசி வாய்ப்பு நீதிமன்றம்தான். இன்னும் நாங்கள் நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை வைத்துள்ளோம். மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு விழாவினை தொடர்ந்து, 134 பா.ம.க.வினர் மீது குண்டர் தடுப்பு சட்டமும், தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. அதன்பிறகு நீதிமன்றம் சென்று, அதில் 133 பேர் தற்போது விடுதலையாகிவிட்டனர். சட்டத்தின்படி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தொடர்ந்து, சட்டத்தின் ஆட்சி நடக்க நாங்கள் வலியுறுத்துகிறோம். ஆனால், அப்படி நடக்கவில்லை. அதனால், நீதித்துறை முற்றிலுமாக ஆட்சியாளர்களின் நேர்முக, மறைமுக, எந்த உத்தரவுக்கும் அடிபணியாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும். நான் எல்லா நீதிபதிகளையும் குறிப்பிடவில்லை.
வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க சமூக ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் ஒரு அணியை அமைத்துள்ளோம். முதற்கட்டமாக 6 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அறிவிக்கப்படக் கூடிய ஒரு வேட்பாளர் (அன்புமணி ராமதாஸ்) இங்கு உள்ளார்.
கடந்த 2½ ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தில் 5100 கொலைகள், 52 ஆயிரம் கொள்ளைகள், 1550 பாலியல் கொடுமைகள் நடந்துள்ளது. இன்றும் தமிழகத்தில் 8½ மணி நேர மின்வெட்டு உள்ளது. இதனால், பல தொழில்கள் பாதிக்கப்பட்டு பலர் வேலை இழந்துள்ளனர். முதலாளிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா அக்டோபர் 26-ந்தேதி பேசும்போது, தமிழகத்தின் மின்தேவை 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என்றும், டிசம்பர் மாதத்திற்குள் மின்மிகை மாநிலம் என்ற நிலைக்கு தமிழகம் முன்னேறும் என்றும் கூறினார்.

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கவும், அதற்கான வழிமுறைகளையும் தொடர்ந்து நான் சொல்லிவருகிறேன். எனவே, தமிழக போலீசார் நாட்டு மக்களுக்கு உற்ற நண்பராக இருந்து சட்ட ஒழுங்கை காப்பாற்றுங்கள். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: