Saturday, June 29, 2013

மக்கள் மீதான மனிதாபிமானமற்ற தாக்குதல்: அன்புமணி ராமதாஸ்



ஒரே மாதத்தில் மூன்று முறை பெட்ரோல் விலை உயர்த்துவதென்பது மக்கள் மீதான மனிதாபிமானமற்ற தாக்குதல் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்ததைக் காரணம் காட்டி பெட்ரோல் விலை மீண்டும் லிட்டருக்கு ரூ.2.32 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் சென்னையில் ரூ. 69.39 ஆக இருந்த  ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இப்போது ரூ.71.71 ஆக அதிகரித்திருக்கிறது.
கடந்த ஜூன் முதல் தேதியன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 95 பைசா உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் கடந்த 16&ஆம் தேதி மீண்டும் ரூ.2.54 உயர்த்தப்பட்டது. இப்போது மூன்றாவது முறையாக லிட்டருக்கு ரூ.2.32 உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரே மாதத்தில் மூன்று முறை பெட்ரோல் விலையை உயர்த்துவதென்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றாகும். பெட்ரோல் விலை நிர்ணய கொள்கையின் படி 15 நாட்களுக்கு ஒரு முறைதான் பெட்ரோல் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற நிலையில், 12 நாட்களில் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களின் வயிற்றில் தீயை வார்த்திருக்கிறது மத்திய அரசு. நடப்பு ஜூன் மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5.85 , அதாவது , சுமார் 10 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது. இது மக்கள் மீதான மனித நேயமற்ற தாக்குதல் ஆகும். இவ்வளவு கடுமையான விலை உயர்வை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் தாங்கிக்கொள்ள இயலாது. அடுத்தகட்டமாக, ஓரிரு நாட்களில் டீசல் விலையையும் கடுமையாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்து விட்டதால் மக்களின் அன்றாட வாழ்க்கையே பெரும் போராட்டமாகியிருக்கிறது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களைக் கூறி பெட்ரோல், டீசல் விலைகளை மாதம் இரண்டு முறை அல்லது மூன்று முறை உயர்த்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ரூபாய் மதிப்பு ஏறுவதும், இறங்குவதும் வழக்கமாக நடைபெறும் ஒன்று தான். இதன் தாக்கம் தற்காலிகமானதே. மத்திய அரசு வசூலிக்கும் சுங்க வரி, கலால்வரி, மாநில அரசு வசூலிக்கும் மதிப்பு கூட்டு வரி ஆகியவற்றில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம்  இதை சமாளிக்க முடியும். அதை விடுத்து இந்த சுமையை மக்கள் மீது சுமத்தியதன் மூலம் மக்கள் நலனில்  அக்கறை இல்லை என்பதை மத்திய அரசு நிரூபித்திருக்கிறது. ஏழை, எளிய மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக அவதிப்பட்டு வருவதால், அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

Friday, June 21, 2013

மாநிலங்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: புறக்கணிப்பதாக பாமக அறிவிப்பு



 


மாநிலங்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து 21.06.2013ல் சென்னையில் நடக்கும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று பாமக தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிப்பதில்லை. மாநிலங்களவை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக பாமக அறிவித்துள்ளது.

பாமகவின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் கோ.க.மணி தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, அரங்க.வேலு, மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பாமக எம்எல்ஏக்கள் மா.கலையரசு, கணேஷ் குமார் உட்பட முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 550 செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மரக்காணம் கலவரத்திற்கு நீதிகேட்டு போராடிய ராமதாசை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமகவினர் மீது பொய் வழக்குப்போட்டு குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவதற்கும், சிறையில் இருக்கும் பாமக எம்எல்ஏ ஜெ.குருவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிப்பதில்லை. தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

மலிவு விலை காய்கறி கடைகளை திறந்து மக்களை ஏமாற்ற முயற்சி: தமிழக அரசுக்கு பாமக கண்டனம்



பாமகவின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் கோ.க.மணி தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து விட்டன.  தரமான அரிசியின் விலை, வரலாறு காணாத வகையில் கிலோ ரூ.50 என்ற அளவுக்கு உயர்ந்து விட்டது. ஒரு லிட்டர் நல்லெண்ணெயின் விலை ரூ.300 ஆக அதிகரித்திருக்கிறது. காய்கறிகளின் விலைகளோ ஏழைகளால் எட்டிப்பிடிக்கவே முடியாத உயரத்திற்கு சென்று விட்டன.

ஒரு கிலோ இஞ்சி ரூ.250, வெங்காயம் ரூ.130, பீன்ஸ் ரூ. 125 என உயர்ந்துள்ளன. தக்காளியும், பச்சை மிளகாயும் கூட கிலோ ரூ.60 என்ற அளவைத் தாண்டி விட்டன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கூட உண்ண முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், தமிழக அரசோ இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருக்கிறது.
யானைப்பசிக்கு சோளப் பொறியை போடுவதைப் போல தமிழகத்தில் ஏழரை கோடி மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெயரளவில் சில மலிவு விலை காய்கறி கடைகளை திறந்து மக்களை ஏமாற்ற முயல்வதையும், ஏழைகளின் நலனில் அக்கறையின்றி  இருப்பதையும் பா.ம.க. கண்டிக்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது

பாமக மாநில செயற்குழு கூட்டம் ( படங்கள் )



பாமகவின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் கோ.க.மணி தலைமையில் சென்னையில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது.

பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் முன்னி லையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, அரங்க.வேலு, மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பாமக எம்எல்ஏக்கள் மா.கலையரசு, கணேஷ் குமார் உட்பட முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 550 செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

 
 

என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்



பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான 93.56 % பங்குகளில் 5 விழுக்காட்டை தனியாருக்கு விற்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது.
நெய்வேலி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய கடந்த 17 ஆண்டுகளாகவே மத்தியில் உள்ள அரசுகள் முயற்சி செய்து வருகின்றன. இம்முடிவை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருக்கிறது ; மற்ற கட்சிகளும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் பங்கு விற்பனை முடிவை மத்திய அரசு தற்காலிகமாக கைவிட்டிருந்தது.
இம்மாத தொடக்கத்தில் நெய்வேலி பழுப்பு நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தீர்மானித்த போதும், தமிழக மக்களின் எதிர்ப்பு காரணமாக அம்முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. என்.எல்.சி பங்குகளை விற்கும் முடிவை நிரந்தரமாக கைவிட வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் வலியுறுத்தி வரும் நிலையில், அதை நிராகரித்து விட்டு  பங்குகளை விற்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
என்.எல்.சி. நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பதால் அரசுக்கு ரூ. 466 கோடி தான் கிடைக்கும். ஆனால், என்.எல்.சி.  கடந்த ஆண்டில் வரிக்கு முந்தைய இலாபமாக ரூ. 2045 கோடியை ஈட்டியுள்ளது.  லாபத்தில் மத்திய அரசின் பங்குக்கான ஈவுத் தொகையாக கடந்த ஆண்டில் ரூ. 440 கோடியை என்.எல்.சி செலுத்தியிருந்தது. நடப்பாண்டில் ரூ. 500 கோடிக்கும் அதிக தொகையை செலுத்தவுள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் தொகை பெரிதல்ல; இதனால் எந்த பயனும் ஏற்பட்டுவிடாது. மாறாக என்.எல்.சி. நிறுவனத்திலிருந்து மத்திய அரசுக்கு இவ்வளவு வருவாய் கிடைத்து வரும் நிலையில், ரூ. 466 கோடிக்கு ஆசைப்பட்டு பங்குகளை விற்பது  பொன் முட்டையிடும் வாத்தை அறுப்பதை போன்றதாகும்.

பொதுத்துறை நிறுவனங்களின் 10% பங்குகள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும்  என்ற இந்திய பங்கு மற்றும் பரிமாற்ற வாரியத்தின் (செபி) நிபந்தனைப்படி தான் பங்குகளை விற்கும் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசு நினைத்தால்,  இந்த நிபந்தனையிலிருந்து என்.எல்.சி.க்கு விதிவிலக்கு வழங்க முடியும். என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டால் அது தமிழகத்திற்கும், என்.எல்.சி.யில் பணியாற்றும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி விடும். எனவே, என்.எல்.சி பங்கு விற்பனை முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
என்.எல்.சி. நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்ய அனுமதித்தால், அது மீதமுள்ள பங்குகளையும் படிப்படியாக விற்பனை செய்து, நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க வகை செய்து விடும். எனவே, என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு போராட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Wednesday, June 19, 2013

மாநிலங்களவைத் தேர்தல்: ஆதரவு குறித்து வெள்ளிக்கிழமை முடிவு: அன்புமணி ராமதாஸ்



தருமபுரியை அடுத்துள்ள சோம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாடகக் காதல் திருமணம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்து எந்தக் கட்சியும் குரல் கொடுக்காத நிலையில், பாமக மட்டும் அதற்காக குரல் கொடுத்தது. மேலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அனைத்து சமுதாயத் தலைவர்களையும் அணி திரட்டியது.
இதன் காரணமாகவும், தமிழகத்தின் அடுத்த ஆட்சி வன்னியர் ஆட்சி எனக் கூறியதாலும் பாமகவை முடக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக தருமபுரி, மரக்காணம் வன்முறைச் சம்பவங்களைக் காரணமாகக் கூறி, 120  பேர் தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில்கூட 2 மாதங்களில் இத்தனை பேர் மீது இத்தகையச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அன்புக்கு மட்டுமே பாமக அடி பணியும். அராஜகத்துக்கும், அதிகாரத்துக்கும் அடி பணியாது. அதிமுக, திமுக உள்ளிட்ட எந்தக் கட்சியும் பாமக-வுக்கு வேண்டாம். வரும் மக்களவைத் தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம். மாநிலங்களவைத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடைபெறும் பாமக செயற்குழுக் கூட்டத்தில் விவாதித்து முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

2016-ல் பாமக ஆட்சி: அன்புமணி ராமதாஸ்



தருமபுரியை அடுத்துள்ள சோம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகி
இல்லத் திருமண விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தை திராவிடக் கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்தது போதும். மாற்றம் வராதா என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்றமாக பாமகவை மக்கள் தேர்வு செய்வர்.
2016-ல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும். பாமக தலைமையில் ஆட்சி அமைந்தால் முதலில் இடப்படும் கையெழுத்து பூரண மதுவிலக்கு அமலுக்காக இருக்கும். கல்வி, மருத்துவம் மட்டும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். விவசாயிகளுக்கான அனைத்துப் பொருள்களும் இலவசமாக வழங்கப்படும். வேறு இலவசங்களே கிடையாது என அறிவிக்கப்படும்.
தருமபுரி, மரக்காணம் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பாமகவிடம் ரூ.50 கோடி வசூலிக்க வேண்டும் என வழக்குத் தொடரப்படுகிறது. இந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயாராகவுள்ளோம் என்றார்.

பொய்வழக்கு போடுவதாக கூறி போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது பா.ம.க,வினர் வழக்கு



கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா.ம.க, வினர் மீது பொய் வழக்குப் போடுவதாகக் கூறி, காவல் ஆய்வாளர்கள் இரண்டு பேர் மீது அந்தக் கட்சியின் சார்பில் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்குத் தொடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக பாமக மாநில இளைஞரணி துணைத் தலைவர் சுப.குமார், கிருஷ்ணகிரி குற்றவியல் நீதிமன்றம் எண் 2-இல் தொடர்ந்த வழக்கு விவரம்:
பாமக நிறுவனர் ராமதாஸ் கைதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸார் தொடர்ந்து பாமகவினரை மிரட்டி வருகின்றனர். பொய்யாக வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்து வருகின்றனர். உறவினர் வீட்டுக்குச் சென்று வரும் போது, பர்கூர் காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் மகாராஜகடை காவல் ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் என்னை வழிமறித்து, தகாத வார்த்தையால் திட்டி, கடுமையாகத் தாக்கினர்.
எனவே, எண்ணை தொந்தரவு செய்த போலீஸார் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது

Saturday, June 15, 2013

செயற்குழுவைக் கூட்டுகிறது பாமக - ஜி.கே.மணி அறிவிப்பு

சென்னை: பாமகவின் தலைமை செயற்குழுக் கூட்டம் ஜூன் 21ல் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் வருகிற ஜூன் 21-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது. சென்னை தியாகராயர் பேருந்து நிலையத்தை அடுத்த மேற்கு மாம்பலத்தில் உள்ள சந்திர சேகரன் திருமண அரங்கில் இக் கூட்டம் நடைபெறுகிறது.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தலின்படி நடைபெறவிருக்கும் இந்த செயற்குழு கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை ஏற்கிறார். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர், செயலாளர், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.கட்சியின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன' என்று தெரிவித்துள்ளார்.

 

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: