Saturday, January 5, 2013

சிகரெட்டுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பதா?-

முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புகைபிடித்தல் ஒரு கொடிய உயிர்க்கொல்லும் பழக்கம். இந்தியா முழுவதும் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் புகைபிடித்தலால் கொலை செய்யப்படுகின்றனர். தமது வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே இறந்து போவதால் புதிய வாடிக்கையாளர்களைப் பிடிப்பதற்காக சிகரெட் நிறுவனங்கள் பலவிதமான சட்டவிரோத விளம்பர தந்திரங்களை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிகரெட் வாங்கினால் தங்கக்காசு பரிசு என்கிற விளம்பரத்துடன் தமிழர் பண்பாட்டை அவமானப்படுத்தும் அவலம் சென்னை நகரில் நடந்து வருகிறது. இந்த சட்ட விரோதச் செயலை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.

காவண்டர் ஸ்பெஷல் சிகரெட்- இந்த பொங்கல் திருநாளில் வெல்லுங்கள் தங்கம் என்கிற விளம்பரம் சென்னையில் ஏராளமான சிகரெட் விற்கும் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது. அந்தக் கடைகளில் ஹாப்பி பொங்கல் எனும் பொங்கல் வாழ்த்துடன் காவண்டர் சிகரெட் விற்கப்படுகிறது. அதற்குள் பொங்கல் சலுகை தங்கக்காசு, வெள்ளிக்காசு, கடிகாரம், பணப்பரிசு என்கிற பரிசுக் கூப்பன் இணைக்கப்பட்டுள்ளது. பரிசுக் கூப்பனில் உள்ளபடி பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

புகையிலைப் பொருட்களை எந்த வடிவிலும் விளம்பரப் படுத்தக்கூடாது. புகையிலைப் பொருட்களுடன் இலவச இணைப்புகள் எதையும் அளிக்கக் கூடாது என இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விளம்பரம் செய்வோர், பரிசுகள் அளிப்போர் மீது ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் அச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும், தமிழ்நாட்டில் சிகரெட் நிறுவனங்கள் விளம்பரம் செய்வதும், மிகத் துணிச்சலாக பொங்கல் திருநாளுக்கு தங்கக்காசு பரிசு அளிப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த அநியாயத்தை தமிழ்நாடு அரசு இனிமேலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

சிகரெட்டுடன் இலவசப் பரிசுகள் எதையும் அளிக்கக்கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை பொங்கல் பரிசாக அளிப்பது மிகக்கொடுமையான செயல். தமிழ் பண்பாட்டை இழிவுபடுத்தும் இக்கொடிய குற்றத்தைச் செய்தவர்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சிகரெட்டை தயாரிக்கும் காட்பிரே பிலிப் இந்தியா நிறுவனத்தினர், அதன் முகவர்கள், விற்பனை யாளர்கள் மீது இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கடைகளில் ஒட்டப்பட்டுள்ள இத்தகைய சிகரெட் விளம்பரங்களை முற்றிலுமாக அகற்றுவதுடன், பொங்கல் வாழ்த்துடன் விற்பனை செய்யப்படும் காவண்டர் சிகரெட் பாக்கெட்டுகளை கைப்பற்றி அழிக்கவும் வேண்டும். இதன் மூலம் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: