கடந்த செவ்வாய்க்கிழமை வடலூரில் அனைத்து சமுதாய கூட்டம் நடத்துவதற்காக பாமக சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.இந்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.
சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, கடலூர் மாவட்டத்தில் நுழைவதற்கும், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குரு ஆகியோருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் 21-1-2013 முதல் வருகிற 20-3-2013 முடிய உள்ள காலத்திற்கு ஆணையிடப்படுகிறது என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
இதனை எதிர்த்து பாமகவினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கும், பாமக வினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய தடியடியில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ராமதாஸ் கடலூர் மாவட்டத்தில் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமகவினரைக் காண டாக்டர் ராமதாஸ் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment