Tuesday, January 22, 2013

உழவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு தர வேண்டும்! ராமதாஸ் அறிக்கை!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வறட்சியால் சம்பா பயிர்கள் கருகுவதை தாங்கிக்கொள்ள முடியாத விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது, வறட்சி காரணமாக விவசாயிகள் எவரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடாததாலும் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி அடியோடு பாதிக்கப்பட்டது. அதன்பின், வடகிழக்கு பருவமழை சற்று முன்பாக தொடங்கியதாலும், உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு ஓரளவு தண்ணீர் கிடைத்ததாலும் விவசாயிகள் சற்று நம்பிக்கையுடன் சம்பா சாகுபடியை தொடங்கினர்.
மத்திய அரசின் மூலமாக கர்நாடக அரசுக்கு நெருக்கடி கொடுத்து தமிழக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை பெற்றுத் தந்திருக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

ஆனால், அந்தக் கடமையைச் செய்ய தமிழக அரசு தவறியதால் தான், தண்ணீரின்றி பயிர்கள் கருகும் அவல நிலை ஏற்பட்டது. கடன் வாங்கி பயிர் செய்த விவசாயிகள் அது கருகுவதை தாங்கிக்கொள்ள முடியாததாலும், அதற்காக வாங்கிய கடனை எவ்வாறு அடைப்பது என்ற கவலையிலும் தான் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த சில வாரங்களில் மட்டும் மொத்தம் 12 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்கள் தற்கொலை செய்துகொள்ள வேறு காரணங்கள் ஏதும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், உழவர் அமைப்புகளும் பலமுறை வலியுறுத்தியுள்ளன. இதை ஏற்று விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு தர வேண்டிய அரசு, இது தொடர்பான வழக்கு உய்ர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது விவசாயிகள் அனைவரும் சொந்த பிரச்சினைகளால் தான் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றும், பயிர்கள் கருகியதால் எவரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் கூறியிருப்பது உழவர் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் ஆகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ஒருபுறம் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாததால் தமிழகத்திற்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதற்காக கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரி உச்ச்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். மற்றொருபுறம் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் எந்த விவசாயியும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று தமிழக அரசு கூறுகிறது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரன்பாடாக உள்ளன.

பயிர்கள் கருகியதால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை ஒப்புக்கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்படவுள்ள வழக்கில் நமக்கு சாதகமாக தீர்ப்பை பெறுவதற்கு உதவியாக இருக்கும். இதை உணர்ந்து, வறட்டு கவுரவம் பார்க்காமல், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் - பயிர்கள் கருகியதால் பாதிக்கப்பட்ட மற்ற விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வரவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: