Saturday, January 26, 2013

விஸ்வரூபம் திரைப்படத்திற்கான தடையை நீக்க வேண்டும்: ராமதாஸ்

நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்கான தடையை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் நேற்று வெளியிடப்படுவதாக இருந்த நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு திடீரென தடை விதித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளிலும் இப்படத்தை வெளியிடுவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாயத்தினரின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக பல்வேறு அமைப்புகள் புகார் அளித்திருப்பதாகவும், அதனால் சட்டம்&ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்பதால் தான் இப்படத்திற்கு தற்காலிக தடை விதிக்கப் பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தின் கதை பற்றியோ அல்லது காட்சி அமைப்புகள் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது என்பதாலும், இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாலும் இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
ஆனால், நடிகர் கமலஹாசன் மதங்களைக் கடந்த கலைஞர். எந்த மதத்தினர் எந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர். 1992&ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அதை கடுமையாக கண்டித்ததுடன், அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவை நேரில் சந்தித்து , இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தியவர். இந்து மற்றும் முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் முக்கியப் பொறுப்பில் இருந்து பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இப்படிப்பட்ட கமலஹாசன் இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் திரைப்படம் எடுத்திருக்க மாட்டார் என்று நம்பலாம். அதுமட்டுமின்றி , விஸ்வரூபம் திரைப்படம் நடுநிலையான இஸ்லாமியர்களை பெருமையடையச் செய்யும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று கமலஹாசன் கூறியுள்ள நிலையில், இதை பொதுவான இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ரசிகர்களின் முடிவுக்கே விட்டுவிடுவது தான் சரியானதாக இருக்கும். மாறாக படத்தை முடக்க முயல்வது எதிர்மறையான எண்ணத்தையே ஏற்படுத்தும்.
இத்திரைப்படத்திற்கு தமிழக அரசு திடீரென தடைவிதித்ததன் பின்னணியில் அரசியலும் கலந்திருப்பதாக கருதுகிறேன். விஸ்வரூபம் படத்திற்கு தணிக்கை வாரியம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் , தமிழக அரசு தலையிட்டு, யாருடைய கருத்தையும் கேட்காமல் தடை விதித்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகும். அண்மைக்காலமாகவே தமிழக அரசு கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல்களில் ஈடுபட்டுவருகிறது. சட்டம் ஒழுங்கிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்றால், அதை சமாளிக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்; இதற்காக திரைப்படத்திற்கு தடை விதிப்பது முறையல்ல.
எனவே, விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு உடனடியாக நீக்கவேண்டும். எனது அன்பிற்குரிய இஸ்லாமிய அமைப்புகளும் இந்தப் பிரச்சினையை உணர்ச்சி வேகத்தில் அணுகாமல் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி யதார்த்தமான தீர்வை எட்ட முன்வரவேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Thursday, January 24, 2013

கள் நாயகத்தின் போதனைகள் பின்பற்றுவோம்: ராமதாஸ்





நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்றுவதே அவருக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள மிலாது நபி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாது நபி திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்தக்களை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்றுவதே அவருக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்

கடலூரில் ராமதாஸ் நுழைய தடை இல்லை… கலெக்டர் அறிவிப்பு



கடலூர்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடலூர் மாவட்டத்தில் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் கிர்லோஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை வடலூரில் அனைத்து சமுதாய கூட்டம் நடத்துவதற்காக பாமக சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.இந்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.
சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, கடலூர் மாவட்டத்தில் நுழைவதற்கும், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குரு ஆகியோருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் 21-1-2013 முதல் வருகிற 20-3-2013 முடிய உள்ள காலத்திற்கு ஆணையிடப்படுகிறது என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
இதனை எதிர்த்து பாமகவினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கும், பாமக வினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய தடியடியில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ராமதாஸ் கடலூர் மாவட்டத்தில் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமகவினரைக் காண டாக்டர் ராமதாஸ் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, January 22, 2013

உழவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு தர வேண்டும்! ராமதாஸ் அறிக்கை!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வறட்சியால் சம்பா பயிர்கள் கருகுவதை தாங்கிக்கொள்ள முடியாத விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது, வறட்சி காரணமாக விவசாயிகள் எவரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடாததாலும் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி அடியோடு பாதிக்கப்பட்டது. அதன்பின், வடகிழக்கு பருவமழை சற்று முன்பாக தொடங்கியதாலும், உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு ஓரளவு தண்ணீர் கிடைத்ததாலும் விவசாயிகள் சற்று நம்பிக்கையுடன் சம்பா சாகுபடியை தொடங்கினர்.
மத்திய அரசின் மூலமாக கர்நாடக அரசுக்கு நெருக்கடி கொடுத்து தமிழக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை பெற்றுத் தந்திருக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

ஆனால், அந்தக் கடமையைச் செய்ய தமிழக அரசு தவறியதால் தான், தண்ணீரின்றி பயிர்கள் கருகும் அவல நிலை ஏற்பட்டது. கடன் வாங்கி பயிர் செய்த விவசாயிகள் அது கருகுவதை தாங்கிக்கொள்ள முடியாததாலும், அதற்காக வாங்கிய கடனை எவ்வாறு அடைப்பது என்ற கவலையிலும் தான் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த சில வாரங்களில் மட்டும் மொத்தம் 12 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்கள் தற்கொலை செய்துகொள்ள வேறு காரணங்கள் ஏதும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், உழவர் அமைப்புகளும் பலமுறை வலியுறுத்தியுள்ளன. இதை ஏற்று விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு தர வேண்டிய அரசு, இது தொடர்பான வழக்கு உய்ர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது விவசாயிகள் அனைவரும் சொந்த பிரச்சினைகளால் தான் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றும், பயிர்கள் கருகியதால் எவரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் கூறியிருப்பது உழவர் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் ஆகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ஒருபுறம் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாததால் தமிழகத்திற்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதற்காக கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரி உச்ச்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். மற்றொருபுறம் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் எந்த விவசாயியும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று தமிழக அரசு கூறுகிறது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரன்பாடாக உள்ளன.

பயிர்கள் கருகியதால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை ஒப்புக்கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்படவுள்ள வழக்கில் நமக்கு சாதகமாக தீர்ப்பை பெறுவதற்கு உதவியாக இருக்கும். இதை உணர்ந்து, வறட்டு கவுரவம் பார்க்காமல், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் - பயிர்கள் கருகியதால் பாதிக்கப்பட்ட மற்ற விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வரவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Sunday, January 20, 2013

திருமாவளவனுடன் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை: ராமதாஸ்


 

ஈரோட்டில் நடைபெற்ற அனைத்து சமுதாய பேரியக்க ஆலோ சனை கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.அப்போது அவர், ‘’விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சமாதானம் என்ற பேச்சு க்கே இடமில்லை.சாதியை ஒழிக்க கலப்புத் திருமணம் ஒன்றே வழி என்ற தவறா ன பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது. இத்த கைய பிரச் சாரங்களில் குறிப்பிட்ட கட்சியினர் மட்டுமே ஈடுபடுகின்றனர்’’ என்று தெரிவித்தார்.

Saturday, January 19, 2013

தமிழக கட்சிகள் ஒன்றுபட வேண்டும்!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், ஒரு லட்சத்திற்கும் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இன்று வரை நீதி வழங்கப்படவில்லை. இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கைகளை இலங்கை அரசு தட்டிக் கழித்து வருகிறது.

கடந்த ஆண்டு ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அரசே விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.



ஆனால், அதன்பின் ஓராண்டாகிவிட்ட நிலையில், இலங்கையின் மனித உரிமைச் சூழலில் எந்த ஒரு முன்னேற்றமும் தென்படவில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணையக்குழு இலங்கை சென்ற போது, அதன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த ராஜபக்சே அரசு, மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளையின் இலங்கைப் பயணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தர மறுத்து வருகிறது.

அதுமட்டுமின்றி, போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கவும், மனித உரிமைகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய இலங்கை அரசு, அதை செய்யாமல் மனித உரிமைகளுக்கு எதிரான செயல்களிலும், தமிழர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைதியான முறையில் மாவீரர்நாள் நிகழ்ச்சிகளை நடத்திய தமிழ் மாணவர்களை கைது செய்து கொடுமைப்படுத்துதல், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துதல், தமிழ் பெண்களை கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்த்து அடிமைகளைப் போல நடத்துதல், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் 10 மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற விகிதத்தில் படையினரை நிறுத்தி தமிழர்களின் சுதந்திரத்தைப் பறித்தல், தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் சட்டத்திற்கு அனுமதி மறுத்ததற்காக இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்தது, தமிழர்கள் வாழும் பகுதிகளை சிங்களமயமாக்குவது என இலங்கை அரசு தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது.

இலங்கை அரசின் இந்த போக்கை ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளையும், மற்ற உலகத் தலைவர்களும் கடுமையாக கண்டித்திருக்கின்றனர். ஆனால், இந்திய அரசு இதை இன்று வரை கண்டிக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் 25&ஆம் தேதி முதல் மார்ச் 23&ஆம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 22&ஆவது கூட்டத்தில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் , இந்தக் குற்றச்சாற்றுகள் மீது கடந்த ஓராண்டு காலத்தில் இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படவிருக்கிறது.

அப்போது போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து இலங்கை அரசு முறையாக விசாரணை நடத்தாததால், இது குறித்து சர்வதேச விசாரணைக்கு ஆணையிடக்கோரும் தீர்மானத்தை இந்தியா கொண்டுவரவேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் வலியுறுத்தவேண்டும்.

கடந்த ஆண்டு மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்க மத்திய அரசு தயங்கியது.அப்போது, தமிழக அரசியல் கட்சிகள் கொடுத்த நெருக்கடியால் தான், வேறுவழியின்றி தீர்மானத்தை ஆதரிக்க ஒப்புக்கொண்டது. அதேபோல், இப்போதும் மத்திய அரசை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படவைக்க தமிழக கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Wednesday, January 9, 2013

விழுப்புரம், கடலூரில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள ஆறுகளிலிருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருப்பதால் அதையே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த தடையை நீக்கக்கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாட்டு வண்டித் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் சரக்குந்துகள் மூலம் மணல் எடுத்துச் செல்லப்படுவதைப் போலவே, மாட்டுவண்டிகள் மூலம் மணல் எடுத்துச் செல்லப்படுவதும் ஒரு தொழிலாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 5 ஆயிரம் குடும்பங்களாவது இத்தொழிலை நம்பியுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்பணித்துறை அனுமதியுடன் மாட்டு வண்டிகள் மணல் எடுத்து வந்த நிலையில், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மட்டும் இதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கான காரணம் எதையும் மாவட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கவில்லை. எனினும், மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பசுமை வீடுகள் திட்டம் போன்ற சிறிய அளவிலான பணிகளுக்கும், பொங்கல் நேரத்தில் வீடுகளை பழுது பார்க்கும் பணிகளுக்கும் மணல் தேவைப்படுகிறது. இவற்றுக்கு குறைந்த மணல் போதுமானது.

மேலும், இந்தப் பணிகளை மேற்கொள்பவர்கள் அடித்தட்டு மக்கள் என்பதால் அவர்களால் அதிக விலை கொடுத்து சரக்குந்து மணலை வாங்க முடியாது. இவர்களுக்கு குறைந்த விலையில் மணல் கொடுத்து உதவி வந்தவர்கள் மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் தான். மாட்டு வண்டிகளில் மணல் அள்ளத் தடை விதித்திருப்பதால் சிறிய அளவில் வீடு கட்டுதல், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை செய்து வந்த அடித்தட்டு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 100 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இவர்களிடம் அபராதம் என்ற பெயரில் ரூ.5 ஆயிரம் வரை பணம் பறிக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் பணித்துறை மூலம் உரிமம் அளிக்கப்பட்டு மாட்டுவண்டிகளில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது சரியல்ல. இது பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதை கருத்தில் கொண்டு இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும்.

மற்ற மாவட்டங்களில் நடை முறையில் இருப்பதைப் போலவே விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒரு வண்டிக்கு ரூ.60 என்ற கட்டணத்தில் எந்த வித நிபந்தனையுமின்றி தொடர்ந்து மணல் அள்ள மாட்டு வண்டிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Monday, January 7, 2013

பொங்கல் பரிசுக்காக மக்களை கையேந்த வைத்திருப்பது

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தில் உள்ள 1.84 குடும்பங்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.100 அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார்.
ரூபாய்க்கு 3 படி அரிசி தருவதாக வாக்குறுதி அளித்து 1967ல் ஆட்சியைப்பிடித்த திராவிடக் கட்சிகள், ஒருபுறம் மக்களை முன்னேற்றுவதாகக் கூறிக்கொண்டு, இலவசங்களைக் கொடுத்து மக்களைச் சீரழித்து வருகின்றன.

கடந்த ஆண்டு வெளியிட்ட தொலைநோக்குத் திட்டம் 2023 அறிக்கையில் தமிழகத்தில் தனிநபர் வருமானத்தை ஆண்டுக்கு 5.5 லட்சமாகவும், 4 பேர் கொண்ட குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை ரூ.22 லட்சமாகவும் உயர்த்தப் போவதாக உறுதி அளித்த முதலமைச்சர்,

அடுத்த ஆண்டிலேயே வெறும் ரூ.160 மதிப்புள்ள பொங்கல் பரிசுக்காக மக்களை கையேந்த வைத்திருப்பது அவமான கரமானதாகும். இத்திட்டத்திற்காக செலவிடப்படும் ரூ.300 கோடியை பயன்படுத்தி சமச்சீர் கல்வித் திட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்தலாம்’’ என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Sunday, January 6, 2013

நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூட முடிவு: பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளிலும், அதை ஒட்டிய பகுதிகளிலும் உள்ள அரசு மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வருகின்ற செய்திகள் பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி என்று பா.ம.க தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Saturday, January 5, 2013

சிகரெட்டுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பதா?-

முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புகைபிடித்தல் ஒரு கொடிய உயிர்க்கொல்லும் பழக்கம். இந்தியா முழுவதும் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் புகைபிடித்தலால் கொலை செய்யப்படுகின்றனர். தமது வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே இறந்து போவதால் புதிய வாடிக்கையாளர்களைப் பிடிப்பதற்காக சிகரெட் நிறுவனங்கள் பலவிதமான சட்டவிரோத விளம்பர தந்திரங்களை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிகரெட் வாங்கினால் தங்கக்காசு பரிசு என்கிற விளம்பரத்துடன் தமிழர் பண்பாட்டை அவமானப்படுத்தும் அவலம் சென்னை நகரில் நடந்து வருகிறது. இந்த சட்ட விரோதச் செயலை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.

காவண்டர் ஸ்பெஷல் சிகரெட்- இந்த பொங்கல் திருநாளில் வெல்லுங்கள் தங்கம் என்கிற விளம்பரம் சென்னையில் ஏராளமான சிகரெட் விற்கும் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது. அந்தக் கடைகளில் ஹாப்பி பொங்கல் எனும் பொங்கல் வாழ்த்துடன் காவண்டர் சிகரெட் விற்கப்படுகிறது. அதற்குள் பொங்கல் சலுகை தங்கக்காசு, வெள்ளிக்காசு, கடிகாரம், பணப்பரிசு என்கிற பரிசுக் கூப்பன் இணைக்கப்பட்டுள்ளது. பரிசுக் கூப்பனில் உள்ளபடி பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

புகையிலைப் பொருட்களை எந்த வடிவிலும் விளம்பரப் படுத்தக்கூடாது. புகையிலைப் பொருட்களுடன் இலவச இணைப்புகள் எதையும் அளிக்கக் கூடாது என இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விளம்பரம் செய்வோர், பரிசுகள் அளிப்போர் மீது ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் அச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும், தமிழ்நாட்டில் சிகரெட் நிறுவனங்கள் விளம்பரம் செய்வதும், மிகத் துணிச்சலாக பொங்கல் திருநாளுக்கு தங்கக்காசு பரிசு அளிப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த அநியாயத்தை தமிழ்நாடு அரசு இனிமேலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

சிகரெட்டுடன் இலவசப் பரிசுகள் எதையும் அளிக்கக்கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை பொங்கல் பரிசாக அளிப்பது மிகக்கொடுமையான செயல். தமிழ் பண்பாட்டை இழிவுபடுத்தும் இக்கொடிய குற்றத்தைச் செய்தவர்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சிகரெட்டை தயாரிக்கும் காட்பிரே பிலிப் இந்தியா நிறுவனத்தினர், அதன் முகவர்கள், விற்பனை யாளர்கள் மீது இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கடைகளில் ஒட்டப்பட்டுள்ள இத்தகைய சிகரெட் விளம்பரங்களை முற்றிலுமாக அகற்றுவதுடன், பொங்கல் வாழ்த்துடன் விற்பனை செய்யப்படும் காவண்டர் சிகரெட் பாக்கெட்டுகளை கைப்பற்றி அழிக்கவும் வேண்டும். இதன் மூலம் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Friday, January 4, 2013

கலைஞர் கூறுவதை மக்கள் நம்பமாட்டார்கள் :

வன்கொடுமை தடுப்பு சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதையும் நாடக காதல் திருமணங்களால் அப்பாவி பெண்கள் குடும்பத்தினர் பாதிக்கப்படுவதையும் தடுப்பதற்கு அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் சங்கம் ஓட்டலில் இன்று நடந்தது. பா.ம.க. நிறுவனர் டாக் டர் ராமதாஸ் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
அதன்பிறகு நிருபர்களுக்கு ராமதாஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர், ’’தர்மபுரி சம்பவத்தை தொடர்ந்து காதல் நாடங்களால் பெண்கள் பெற்றோர் பாதிக்கப்படுவதை தடுக்க அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை தொடங்கி உள்ளோம். சென்னை, மதுரையை தொடர்ந்து திருச்சியில் இன்றும் அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் நடத்துகிறோம். எங்கள் அமைப்புக்கு அனைவரிடமும் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.

சில கட்சிகள் இந்த கூட்டத்தை நடத்த கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்கள். அதற்கு பதில் அவர்களை படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர்கள் கூற வேண்டும்.


எங்கள் அமைப்பின் கோரிக்கைகள் உடனே நிறைவேறும் என்று கூறமுடியாது. இது மத்திய அரசின் கையில் உள்ளது. எனவே இது தொடர்பாக முதலமைச்சர், பிரதமர் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்து பேசுவோம்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம். காதல் திருமணம் எதிர்ப்பு வன்கொடுமை தடுப்பு சட்டம் திருத்தம் போன்ற நடவடிக்கைகளால் பா.ம.க. விற்கு எந்த பின்னடைவும் ஏற்படாது. அதைப்பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை.
மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் பா.ம.க.வுக்கு ஓட்டு கிடைக்காது என்றார்கள். அதையும் மீறித்தான் போராடுகிறோம். தாழ்த்தப்பட்டவர்களுக்கு நான்தான் பாதுகாப்பு அரண் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறுவதை மக்கள் நம்பமாட்டார்கள். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசுவதில் வல்லவர். நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த அமைப்பை ஏற்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’’ என்று கூறினார்

Thursday, January 3, 2013

உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட தடை விதித்த நீதிபதி: ராமதாஸ் அதிர்ச்சி

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியே தெரியாத நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமை நீதிபதியாக இருந்தபோது, வழக்கறிஞர்களின் உணர்வுகளை மதித்து தமிழ் மொழியில் வாதிடலாம் என அனுமதி அறித்த நிலையில் தமிழ் மொழி தெரிந்த நீதிபதி ஒருவர் தமிழில் வாதிடுவதற்கு நேற்று தடை விதித்திருப்பது தான் அதிர்ச்சி அளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நேற்று ஒரு வழக்கில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பாரி கோரிக்கை விடுத்தார். ஆனால், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். இது குறித்து மேலும் பல வழக்கறிஞர்களும் சேர்ந்து விடுத்த கோரிக்கையையும் அவர் ஏற்க மறுத்தார். இந்த வழக்கை மேலும் தான் விசாரிக்க விரும்பவில்லை என்றும், வேறு நீதிபதிக்கு இதை மாற்றுமாறும் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை வைத்துவிட்டு, விசாரணையிலிருந்து விலகி விட்டார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதிடலாம் என வாய்மொழியாக அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் போதிலும், தமிழில் வாதிடுவதற்கான உரிமை வழக்கறிஞர் ஒருவருக்கு நேற்று மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியே தெரியாத நீதிபதி எம்.ஒய்.இக்பால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது, வழக்கறிஞர்களின் உணர்வுகளை மதித்து தமிழ் மொழியில் வாதிடலாம் என அனுமதி அறித்த நிலையில் தமிழ் மொழி தெரிந்த நீதிபதி ஒருவர் தமிழில் வாதிடுவதற்கு தடை விதித்திருப்பது தான் அதிர்ச்சி அளிக்கிறது.

தாய்மொழியில் வாதங்களை முன்வைக்கும் போது அது தெளிவாகவும், வலிமையாகவும் இருக்கும் என்ற அடிப்படையில் தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது.

உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் அமைவதை இந்திய அரசியல் சட்டமும் அனுமதிக்கிறது.

உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அம்மாநில மொழிகள், குடியரசுத் தலைவரின் ஆணைப்படி உய ர்நீதிமன்ற வழக்கு மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இருக்கும் போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க மத்திய அரசு ஏன் தயங்குகிறது என்பது தெரியவில்லை.

ஒரு மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் அம்மாநிலத்தின் தாய் மொழியில் வாதிடுவதற்கு அரசியல் சட்டம், மரபு, நடைமுறை என எந்த பெயரால் தடை விதிக்கப்பட்டாலும் அதைவிட பெரிய மோசடி இருக்க முடியாது. எனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நெருக்கடி தர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: