Tuesday, November 27, 2012

சம்பா பயிர்கள் கருகும் நிலைக்கு தமிழக அரசின் மெத்தனம் தான் காரணம்: ராமதாஸ்

சென்னை: காவிரி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிரை காப்பாற்ற கர்நாடக அணைகளிலிருந்து போதிய அளவு தண்ணீர் திறந்து விடும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிடும் என்று தமிழக விவசாயிகள் நம்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால் உச்ச நீதிமன்றமோ இந்த வழக்கில் உறுதியான தீர்ப்பை அளிப்பதற்கு பதில் இரு மாநில முதல்வர்களும் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என்ற பிற்போக்கான ஆலோசனையை அளித்திருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. காவிரி பிரச்சினைக்கு பேச்சு மூலம் தீர்வு காண்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்றாகும்.
வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கிய பின்னர் இந்த விசயத்தை தமிழக அரசு கண்டுகொள்ளாமல்விட்டதன் விளைவுதான் காவிரி பாசன மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர் கருகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கர்நாடக அணைகளைப் பொறுத்தவரை நடப்பாண்டில் தேவைக்கும் அதிகமாகவே தண்ணீர் இருந்து வந்திருக்கிறது.
காவிரி பிரச்சினை உச்சகட்டத்தை எட்டியிருந்த அக்டோபர் 15ம் தேதி வாக்கில் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளில் மொத்தமாக 105 டி.எம்.சி தண்ணீர் இருந்தது. தற்போது கர்நாடகத்தில் இரண்டாம் பருவ சாகுபடி முடிவுக்கு வரவிருக்கும் இன்றைய நிலையில்கூட கிருஷ்ண ராஜ சாகரில் 23.6 டி.எம்.சி, ஹாரங்கியில் 30.47 டி.எம்.சி, ஹேமாவதியில் 13.7 டி.எம்.சி, கபினியில் 8.15 டி.எம்.சி என மொத்தம் 76 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. கர்நாடகத்திற்கு இனி தண்ணீர் தேவைப்படாது என்ற நிலையில் கோடை சாகுபடிக்காக இந்த தண்ணீரை பயன்படுத்திக்கொள்ள அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இது காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும்.
எனவே, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு, கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரில் பாதியையாவது தமிழகத்திற்கு திறந்துவிடும்படி ஆணையிட வேண்டும். அதற்கு கர்நாடக அரசு மறுத்தால் அரசியல் சட்டத்தின் 365வது பிரிவை பயன்படுத்தி கர்நாடக அணைகளை மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டில் எடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: