Thursday, November 15, 2012

கல்வியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது: ராமதாஸ்





கல்வியியல் படிப்புகளுக்கு நுநுழைவுத் தேர்வை நடத்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புது தில்லியில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் இராஜு தலைமையில் கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் 60ஆவது கூட்டத்தில் கல்வியியல் பட்டயம் (D.T.Ed.), பட்டம் (B.Ed) மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு(M.Ed) நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்வதென முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

ஆசிரியர் கல்வியை மேம்படுத்துவதற்கான நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரைகளை ஏற்று இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பதாக தெரிகிறது. நுழைவுத்தேர்வு நடத்துவதன் மூலம் தரமான மாணவர்களை கல்வியியல் படிப்புகளில் சேர்க்க முடியும் என்றும், அவ்வாறு சேர்த்தால் மட்டுமே தரமான ஆசிரியர்களை உருவாக்க முடியும் என்றும் மத்திய அரசின் தரப்பில் கூறப்படுகிறது.
தரமான ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கான அடித்தளம் பள்ளிக் கல்வியிலிருந்து அமைக்கப்படவேண்டும். பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் தரமானதாகவும், சமச்சீரானதாகவும் மாற்றினால் தான் சிறந்த பட்டதாரிகள் உருவாவார்கள். அவர்களைத் தான் தரமான ஆசிரியர்களாக உருவாக்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதையும் மத்திய அரசோ, மாநில அரசோ மேற்கொள்ளவில்லை. அடிபடை வசதிகளே இல்லாமல் ஐந்து வகுப்புகளுக்கு ஓராசிரியர் மட்டுமே உள்ள அரசு பள்ளிகளில் தான் ஏழை மாணவர்கள் படிக்க வேண்டும்; குளிர்சாதன வசதியுடன் கூடிய, சர்வதேச தரம் கொண்ட, வகுப்புக்கு ஓராசிரியர் உள்ள பள்ளிகளில் பணக்கார மாணவர்கள் படிப்பார்கள் என்ற நிலைதான் இன்று தமிழகத்தில் நிலவுகிறது.


இந்த அவலநிலையை மாற்ற நடவடிக்கை எடுக்காமல், கல்வியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதன் மூலமாக மட்டுமே தரமான ஆசிரியர்களை உருவாக்கிவிட முடியாது. கல்வியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைத்து செய்முறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்தால், கல்வியியலை மனப்பாடம் சார்ந்த படிப்பு என்ற நிலையிலிருந்து பயிற்சி சார்ந்ததாக மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாகவே தரமான ஆசிரியர்களை உருவாக்க முடியும். தரமான ஆசிரியர்களை உருவாக்க 10 சீர்திருத்தங்களை செய்ய வேண்டியிருக்கும் போது, அவை அனைத்தையும் தொடக்கத்தில் இருந்து செய்யாமல், பத்தாவது சீர்தித்தத்தை மட்டும் செய்துவிட்டால் தரமான ஆசிரியர்கள் உருவாகிவிடுவார்கள் என்று மத்திய அரசு கருதினால், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கொள்கை வகுப்பாளர்கள் அறியாமையில் திளைக்கிறார்கள் என்று தான் பொருளாகும்.

அனைத்து மட்டங்களிலும் தரமான, சமச்சீர் கல்வியை வழங்காமல் இது போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்தினால், கிராமப் புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் கடுமையாக

பாதிக்க படுவார்கள். அவர்களின் ஆசிரியர் பணி கனவு கருகிவிடும். மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கூடாது என்பதற்காக தமிழக அரசு முன்வைக்கும் வாதங்கள் அனைத்தும் இதற்கும் பொருந்தும். எனவே, கல்வியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசும் அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: