Thursday, December 22, 2011

குப்பைகளை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை முன்பு கொட்டும் போராட்டம் : அன்புமணி

சென்னை: குப்பை உருவாகாமல் தடுப்பதற்கும், குப்பை அளவை குறைப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக செய்யத் தவறினால், பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை நகரின் குப்பைகளை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை முன்பு கொட்டும் போராட்டம் நடத்துவோம் என்று அந்த அமைப்பின் தலைவரும் பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பூஜ்யக் குப்பை' எனும் வழியை பின்பற்றி குப்பை உருவாகாமல் தடுப்பதற்கும், குப்பை அளவை குறைப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சென்னை மாநகரை தூய்மை மாநகராக மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

உடனடியாக இதை செய்யத் தவறினால், பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை நகரின் குப்பைகளை ரிப்பன் மாளிகை முன்பு கொட்டும் போராட்டம் நடத்த நேரிடும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை நகரில் குப்பை ஒரு பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. தினமும் சுமார் 4,500 டன் குப்பை மாநகர அளவில் உருவாகிறது. ஒவ்வொரு நாளும் சராசரியாக நபர் ஒருவருக்கு தலா 600 கிராம் வீதம் குப்பை தூக்கி எறியப்படுகிறது. புதிய பகுதிகள் இணைக்கப்பட்டு மாநகரம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் சென்னை நகரில் தேங்கும் குப்பையின் அளவு இன்னும் அதிகமாகியுள்ளது. ஆங்காங்கே, குப்பை மலைப்போலத் தேங்கிக் கிடப்பதால் கொசு, ஈ, எலி போன்றவை அதிகமாகி விட்டன. இதனால் மக்கள் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்களால் தாக்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

இந்த அவல நிலையை மாற்றிட போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநகர குப்பை பெருங்குடியிலும், கொடுங்கையூரிலும் நாள்தோறும் கொட்டப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதிகளின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான குப்பையும் ஒன்றாகக் கலப்பதுதான் குப்பைச் சிக்கலுக்கு முதன்மையான காரணமாகும். எனவே, குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரிப்பதை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பிரிக்கப்பட்ட மக்காத குப்பையை மறுசுழற்சிக்கு அனுப்பவும், மக்கும் குப்பையை மக்க வைக்கவும், மாநகராட்சியின் மண்டலம்- வட்ட அளவிலேயே முயற்சிக்க வேண்டும். பாலிதீன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் சட்டத்தை சென்னை மாநகரில் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்கும் நிறுவனமே அதனால் உருவாகும் குப்பைக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பதே உற்பத்தியாளர் பொறுப்புணர்வுக் கொள்கை ஆகும்.

மத்திய அரசின் அரசாணையில் மிக முக்கியமாக, நகராட்சிகள், மாநகராட்சிகள் அளவில், உற்பத்தியாளரே பொறுப்பேற்கும் கொள்கையை செயல்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது பசுமைத் தாயகம் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கை ஆகும் என்று கூறியுள்ளார் அன்புமணி.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: