Sunday, December 18, 2011

அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை : ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,



’’கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

மக்களின் போராட்டத்தை அமைதி வழியில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 வாரங்களில் மின்உற்பத்தி தொடங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருப்பதும், போராட்டக்காரர்கள் வரம்பு மீறி செயல்படுகிறார்கள் என்று கூறி மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தியிருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது.









கூடங்குளம் பகுதி மக்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல, அவர்களின் போராட்டமும் வளர்ச்சிக்கு எதிரானது அல்ல. கூடங்குளம் அணுமின் நிலையத்தால், தங்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் காரணமாக அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை.



இதற்காக 15 உறுப்பினர்கள் கொண்ட மத்திய அரசின் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ள போதிலும், இதனால் இதுவரை எந்தப் பயனும் ஏற்படவில்லை.



இக்குழுவினர் மாநில அரசு குழுவை 3 முறை சந்தித்துள்ள போதிலும், மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து எதுவும் பேசப்படவில்லை. மக்களை நேரடியாக சந்தித்து பேசவும் மத்தியக் குழு முன்வரவில்லை.



மக்களின் அச்சத்தைப் போக்க எதுவும் செய்யாமல் அணுமின் நிலையம் உடனடியாக தொடங்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருப்பது சரியல்ல. கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை, அணுமின் நிலைய பணிகளை தொடங்கக்கூடாது என்று தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் பிரதமர் மதித்ததாக தெரியவில்லை.



பிரதமரின் பேச்சுக்கள் கூடங்குளம் பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. ஜனநாயகத்தில் மக்களை மிரட்டி பணிய வைக்க மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சியும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.

கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க மத்திய அரசு தவறிவிட்ட நிலையில், அடக்கு முறைகளின் மூலம் மக்கள் போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்யக்கூடாது.



அது தமிழ்நாட்டிலும் நந்தி கிராமங்களையும், சிங்கூர்களையும் உருவாக்கி விடும். எனவே, மக்களின் உணர்வுகளை மதித்து கூடங்குளம் அணு மின்நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்.



அதே போல் வடதமிழகத்து மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கல்பாக்கம் அணுமின் நிலையமும் 2020-ஆம் ஆண்டிற்குள் மூடப்படும் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இவற்றுக்கு மாற்றாக ஆபத்து இல்லாத மரபுசாரா மின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: