Wednesday, December 14, 2011

அப்துல்கலாம் கூறியது நல்ல யோசனை : ராமதாஸ்

தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘’முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறேன். பெரியாறு அணை அமைந்துள்ள தேவிகுளம், பீர்மேடு, உறுமண்சோலை ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பதுதான் இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வாகும்.

1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன்பு இந்த அணை தமிழகத்தில்தான் இருந்தது. ஆனால் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மாநில எல்லைக்குழு உறுப்பினராக கேரளாவை சேர்ந்த டி.என். பணிக்கர் இருந்தார். அவருக்கு சொந்தமான சொத்துக்கள் இடுக்கி மாவட்டத்தில் இருந்தன.

அவை தமிழக பகுதிக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக அந்த பகுதிகளை கேரள மாநிலத்துடன் இணைத்துவிட்டார். அப்போது தமிழர்கள் அதிகம் வாழும் இந்த 3 பகுதிகளையும் தமிழகத்துடன் இணைத்திருந்தால் முல்லை பெரியாறு அணை விவகாரம் ஏற்பட்டிருக்காது.







அந்த பகுதி மக்கள் தற்போது தமிழகத்துடன் இணைய வேண்டும் என போராடி வருகிறார்கள். முல்லை பெரியாறு அணை பிரச்சனை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் நாளை கூடுகிறது.



இதில் பீர்மேடு, தேவி குளம், உறுமண் சோலை ஆகிய பகுதிகளை கேரளத்தில் இருந்து பிரித்து தமிழகத்துடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மேலும் கேரள மாநிலத்துக்கு பொருளாதார தடை ஏற்படும் வகையில் தமிழகத்தில் இருந்து கேளாவுக்கு செல்லும் 10 வழிகளையும் ஒரு வாரத்துக்கு அடைத்து வைத்து அத்தியாசிய பொருட்கள் அங்கு செல்வதை தடை செய்ய தீர்மானமும் நிறைவேற்ற வேண்டும்.

அப்போதுதான் கேரள மக்கள் உண்மை நிலையை உணர்வார்கள். மேலும் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்கு தடையாக இருக்கமாட்டார்கள்.

இந்த 3 பகுதிகளையும் தமிழகத்துடன் இணைக்க தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பறிபோனதற்கு திராவிட கட்சிகள் செய்த துரோகம்தான் காரணம்.

உச்சநீதிமன்றம் 27-2-2006ல் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தது. அப்போது அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வரத்தும் இருந்தது.



அ.தி.மு.க. அரசு முனைப்புடன் செயல்பட்டிருந்தால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியிருக்கலாம். பின்னர் ஆட்சிக்கு வந்த தி.மு.க.வுக்கும் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தி.மு.க. ஆட்சியின்போது கிடைத்த 3 வாய்ப்புகளை தவறவிட்டு விட்டனர். அப்போது கேரள அரசுடன் தேவையின்றி பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த பிரச்சினையில் தமிழக அரசின் நிலை பலவீனமடைந்தது.

மீண்டும் ஒருமுறை அணையின் வலிமை தொடர்பாக தொழில்நுட்பங்கள் குறித்து எதுவும் தெரியாத உச்சநீதிமன்ற நீதிபதி ஆனந்து தலைமையில் குழு அமைக்க ஒப்புக்கொண்டிருக்க கூடாது. ஏற்கனவே மத்திய அரசு அமைத்த தொழில்நுட்ப நிபுணர் குழுவினர் இந்த அணை வலிமையாக உள்ளது என தெரிவித்திருந்தனர்.



மீண்டும் குழு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் தமிழகத்தின் உரிமை பாதிக்கப்பட்டது. இல்லையெனில் உச்சநீதி மன்றம் மூலம் எப்போதோ இந்த பிரச்சனை தீர்க்கப் பட்டிருக்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக இருந்த நிலையில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியிருக்கலாம்.

இந்த பிரச்சனையில் தேனி மாவட்டத்தில் தினந்தோறும் 50 ஆயிரம், 1லட்சம் என மக்கள் வீராவேசத்தோடு தன்னிச்சையாக போராடி வருவது ஒவ்வொரு தமிழனை யும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

எந்த அரசியல் கட்சிகள் அமைப்புகளின் தூண்டுதல் இல்லாமல் தமிழக மக்கள் தன்னிச்சையாக நடத்தும் இந்த போராட்டம் தமிழக வரலாற்றில் பதிவாகும்.



தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இந்த பிரச்சனையில் உரிய தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும்.

போராடுகிற தமிழர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகத்தில் முக்கிய ஆறுகளின் நீர்பிரச்சினையில் திராவிட கட்சிகள் செய்த துரோகம் மன்னிக்க முடியாதது.



அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கரும்புக்கு டன்னுக்கு ரூ.2500 தருவதாக ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால் தற்போது 1950 ரூபாய் தான் வழங்கப்படுகிறது. எனவே ஏற்கனவே கூறிய தொகையை வழங்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அனைத்து அணைகளிலும் ராணுவத் தினரை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என கூறியுள்ளது நல்ல யோசனைதான்.

கேளராவில் அனைத்து கட்சிகளும் இந்த பிரச்சனையில் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன. அங்கு அடிக்கடி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. அதே போல் தமிழகத்திலும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

அப்போது தான் சட்டசபையில் இடம் பெறாத அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க முடியும்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: