Wednesday, December 28, 2011

இடுக்கியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்: ராமதாஸ்

சேலம்: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில், நிரந்த தீர்வு ஏற்பட, இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும். இதை சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். சேலத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு குழுவில் இடம்பெற்றிருந்த பணிக்கர் என்னும் கேரள அதிகாரியின் சதியால் இடுக்கி மாவட்டம் கேரளாவுடன் இணைக்கப்பட்டதாக கூறினார். முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமெனில், இடுக்கியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், முல்லைப்பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக போராட்டம் நடத்தும் மக்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கிவருவதாகவும் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

அதிமுக, திமுகவால் சீரழிந்துவிட்டோம்: நிர்வாகிகள் மத்தியில் ராமதாஸ் கண்ணீர்

சேலம்: திராவிடக் கட்சிகளால் நாம் சீரழிந்துவிட்டோம் என்று கூறி பாமக தலைவர் ராமதாஸ் தனது கட்சி நிர்வாகிகள் மத்தியில் கண்ணீர் விட்டார்.

பாமகவின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது,

அதிமுக, திமுகவுடன் மாறி, மாறி கூட்டணி வைத்து தான் சீரழிந்துவிட்டோம். இது தவிர போயஸ் தோட்டத்திற்கும், கோபாலபுரத்திற்கும் மாறி, மாறி ஓடி நீங்கள் தான் முதல்வர், நீங்கள் தான் முதல்வர் என்று அவர்களுக்கு காவடி எடுத்து தான் இந்த நிலையில் உள்ளோம். அதனால் இனிமேல் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. 25, 25 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தது போக தற்போது இந்த அவல நிலையில் உள்ளோம்.

இனி வரும் காலத்தில் பாமகவின் தனித்தன்மையைக் காப்போம் என்று கூறி கண்ணீர்விட்டார்.

இதைப் பார்த்த நிர்வாகிகள் தலைவர் இவ்வளவு வேதனைப்படுகிறாரா என்று உருகிவிட்டனர்.

Saturday, December 24, 2011

தைலாபுரம் தோட்டத்தில் பெரியார் சிலைக்கு ராமதாஸ் மரியாதை

பெரியாரின் 38ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் அவரது உருவச் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாமக பொதுச்செயலாளர் வடிவேல் இராயவணன், இணை பொதுச்செயலாளர் இசக்கி படையாட்சி, துணைப் பொதுச்செயலாளர் சண்முகம், திருஞானம் மற்றும் பேராசிரியர் செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Friday, December 23, 2011

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக பாராளுமன்றக் குழு அமைப்பு - ராமதாஸ் வரவேற்பு

சென்னை: பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காக பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டு இருப்பதை வரவேற்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை பாதுகாப்பதற்காக தனி நாடாளுமன்ற குழுவை மத்திய அரசு அமைத்து உள்ளது. இதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டு உள்ளது. பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

எனினும் பிற பிறபடுத்தப்பட்டோரின் நலன்களை பாதுக்காக்க இது மட்டுமே போதுமானது அல்ல. பிற்படுத்தப்பட்டோரின் நலன்களை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமானால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளை மத்திய அரசை கட்டுபடுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இதற்காக அரசியல் சட்ட அதிகாரம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்திற்கும் வழங்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மத்திய அரசு பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை இன்னும் 5 சதவீதம் கூட தாண்டவில்லை. உயர் பதவிகளில் இருக்கும் உயர் ஜாதியினர் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்து கொள்வது தான் இதற்கு காரணம்.

இந்த குறையை போக்கி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இடஒதுக்கீ்ட்டில் தொகுப்பு ஒதுக்கீட்டு முறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இதனை உடனடியாக செயல்படுத்தவும், வன்னிய சமுதாய மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் 2 விழுக்காடு தனி ஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
[

Thursday, December 22, 2011

குப்பைகளை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை முன்பு கொட்டும் போராட்டம் : அன்புமணி

சென்னை: குப்பை உருவாகாமல் தடுப்பதற்கும், குப்பை அளவை குறைப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக செய்யத் தவறினால், பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை நகரின் குப்பைகளை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை முன்பு கொட்டும் போராட்டம் நடத்துவோம் என்று அந்த அமைப்பின் தலைவரும் பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பூஜ்யக் குப்பை' எனும் வழியை பின்பற்றி குப்பை உருவாகாமல் தடுப்பதற்கும், குப்பை அளவை குறைப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சென்னை மாநகரை தூய்மை மாநகராக மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

உடனடியாக இதை செய்யத் தவறினால், பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை நகரின் குப்பைகளை ரிப்பன் மாளிகை முன்பு கொட்டும் போராட்டம் நடத்த நேரிடும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை நகரில் குப்பை ஒரு பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. தினமும் சுமார் 4,500 டன் குப்பை மாநகர அளவில் உருவாகிறது. ஒவ்வொரு நாளும் சராசரியாக நபர் ஒருவருக்கு தலா 600 கிராம் வீதம் குப்பை தூக்கி எறியப்படுகிறது. புதிய பகுதிகள் இணைக்கப்பட்டு மாநகரம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் சென்னை நகரில் தேங்கும் குப்பையின் அளவு இன்னும் அதிகமாகியுள்ளது. ஆங்காங்கே, குப்பை மலைப்போலத் தேங்கிக் கிடப்பதால் கொசு, ஈ, எலி போன்றவை அதிகமாகி விட்டன. இதனால் மக்கள் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்களால் தாக்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

இந்த அவல நிலையை மாற்றிட போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநகர குப்பை பெருங்குடியிலும், கொடுங்கையூரிலும் நாள்தோறும் கொட்டப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதிகளின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான குப்பையும் ஒன்றாகக் கலப்பதுதான் குப்பைச் சிக்கலுக்கு முதன்மையான காரணமாகும். எனவே, குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரிப்பதை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பிரிக்கப்பட்ட மக்காத குப்பையை மறுசுழற்சிக்கு அனுப்பவும், மக்கும் குப்பையை மக்க வைக்கவும், மாநகராட்சியின் மண்டலம்- வட்ட அளவிலேயே முயற்சிக்க வேண்டும். பாலிதீன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் சட்டத்தை சென்னை மாநகரில் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்கும் நிறுவனமே அதனால் உருவாகும் குப்பைக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பதே உற்பத்தியாளர் பொறுப்புணர்வுக் கொள்கை ஆகும்.

மத்திய அரசின் அரசாணையில் மிக முக்கியமாக, நகராட்சிகள், மாநகராட்சிகள் அளவில், உற்பத்தியாளரே பொறுப்பேற்கும் கொள்கையை செயல்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது பசுமைத் தாயகம் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கை ஆகும் என்று கூறியுள்ளார் அன்புமணி.

Wednesday, December 21, 2011

தமிழர் உணர்வு புரியாமல் தாக்குதல் நடத்த உத்தரவிடும் ஏடிஜிபி ஜார்ஜ், ஐஜி ராஜேஷ் தாஸ்-ராமதாஸ் கண்டனம்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களின் உணர்வு புரியாமல் தாக்குதல் நடத்த உத்தரவிடும் ஏடிஜிபி ஜார்ஜ், ஐஜி ராஜேஷ் தாஸ் ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நேற்று தேனி மாவட்டத்தில் லட்சக்கணக்கில் திரண்டு கேரள அரசுக்கு் எதிராக போராட முயன்ற பொதுமக்களையும், விவசாயிகளையும், பெண்களையும் போலீஸார் திடீரென கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தி ஓட ஓட விரட்டியும் கலைத்துள்ள செயல் மக்களை அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கம்பம் நகரிலிருந்து குமுளி நோக்கி பேரணி நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியுள்ளனர். இதனால் சிதறி ஓடிய பொதுமக்கள் கூடலூரில் மறியல் போராட்டம் நடத்தியபோது அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் காவல்துறையினர் விரட்டி அடித்திருக்கின்றனர்.

காவல்துறையினரின் தாக்குதலில் பெண்கள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடுதல் தலைமை இயக்குநராக இருக்கும் ஜார்ஜ் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதால் இப்போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே முயன்று வருகிறார். தென்மண்டல காவல்துறை தலைவராக இருக்கும் ராஜேஷ் தாசும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர். இவர்கள் மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறார்கள். எனவே இந்த அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக அங்கிருந்து மாற்ற வேண்டும்.

பொதுமக்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு பாதுகாப்பும், ஒத்துழைப்பும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

Tuesday, December 20, 2011

ஜி.கே.மணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம்

முல்லைப் பெரியாறு பிரச்சனையை தொடர்ந்து கேரளாவில் தமிழக அய்யப்ப பக்தர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், தமிழக வாகனங்கள் நொறுக்கப்படுவதை கண்டித்தும் பா.ம.க. சார்பில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் படி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி- திருச்சூர் ரோடு திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தங்கவேல் பாண்டியன், மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்ணப்பன், ராமு ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கேரள அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் பொள்ளாச்சி நகர பா.ம.க. செயலாளர் பாலாஜி, ஆனைமலை ஒன்றிய செயலாளர் முருகேசன், பசுமை தாயகம் வெங்கடேஷ், சக்கரவர்த்தி, மன்னூர் ராமர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Sunday, December 18, 2011

பாமக 20-ம் தேதி போராட்டம்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி பாமக சார்பில் டிசம்பர் 20-ம் தேதி பொள்ளாச்சியில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்

அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை : ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,



’’கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

மக்களின் போராட்டத்தை அமைதி வழியில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 வாரங்களில் மின்உற்பத்தி தொடங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருப்பதும், போராட்டக்காரர்கள் வரம்பு மீறி செயல்படுகிறார்கள் என்று கூறி மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தியிருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது.









கூடங்குளம் பகுதி மக்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல, அவர்களின் போராட்டமும் வளர்ச்சிக்கு எதிரானது அல்ல. கூடங்குளம் அணுமின் நிலையத்தால், தங்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் காரணமாக அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை.



இதற்காக 15 உறுப்பினர்கள் கொண்ட மத்திய அரசின் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ள போதிலும், இதனால் இதுவரை எந்தப் பயனும் ஏற்படவில்லை.



இக்குழுவினர் மாநில அரசு குழுவை 3 முறை சந்தித்துள்ள போதிலும், மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து எதுவும் பேசப்படவில்லை. மக்களை நேரடியாக சந்தித்து பேசவும் மத்தியக் குழு முன்வரவில்லை.



மக்களின் அச்சத்தைப் போக்க எதுவும் செய்யாமல் அணுமின் நிலையம் உடனடியாக தொடங்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருப்பது சரியல்ல. கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை, அணுமின் நிலைய பணிகளை தொடங்கக்கூடாது என்று தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் பிரதமர் மதித்ததாக தெரியவில்லை.



பிரதமரின் பேச்சுக்கள் கூடங்குளம் பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. ஜனநாயகத்தில் மக்களை மிரட்டி பணிய வைக்க மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சியும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.

கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க மத்திய அரசு தவறிவிட்ட நிலையில், அடக்கு முறைகளின் மூலம் மக்கள் போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்யக்கூடாது.



அது தமிழ்நாட்டிலும் நந்தி கிராமங்களையும், சிங்கூர்களையும் உருவாக்கி விடும். எனவே, மக்களின் உணர்வுகளை மதித்து கூடங்குளம் அணு மின்நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்.



அதே போல் வடதமிழகத்து மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கல்பாக்கம் அணுமின் நிலையமும் 2020-ஆம் ஆண்டிற்குள் மூடப்படும் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இவற்றுக்கு மாற்றாக ஆபத்து இல்லாத மரபுசாரா மின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, December 14, 2011

அப்துல்கலாம் கூறியது நல்ல யோசனை : ராமதாஸ்

தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘’முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறேன். பெரியாறு அணை அமைந்துள்ள தேவிகுளம், பீர்மேடு, உறுமண்சோலை ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பதுதான் இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வாகும்.

1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன்பு இந்த அணை தமிழகத்தில்தான் இருந்தது. ஆனால் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மாநில எல்லைக்குழு உறுப்பினராக கேரளாவை சேர்ந்த டி.என். பணிக்கர் இருந்தார். அவருக்கு சொந்தமான சொத்துக்கள் இடுக்கி மாவட்டத்தில் இருந்தன.

அவை தமிழக பகுதிக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக அந்த பகுதிகளை கேரள மாநிலத்துடன் இணைத்துவிட்டார். அப்போது தமிழர்கள் அதிகம் வாழும் இந்த 3 பகுதிகளையும் தமிழகத்துடன் இணைத்திருந்தால் முல்லை பெரியாறு அணை விவகாரம் ஏற்பட்டிருக்காது.







அந்த பகுதி மக்கள் தற்போது தமிழகத்துடன் இணைய வேண்டும் என போராடி வருகிறார்கள். முல்லை பெரியாறு அணை பிரச்சனை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் நாளை கூடுகிறது.



இதில் பீர்மேடு, தேவி குளம், உறுமண் சோலை ஆகிய பகுதிகளை கேரளத்தில் இருந்து பிரித்து தமிழகத்துடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மேலும் கேரள மாநிலத்துக்கு பொருளாதார தடை ஏற்படும் வகையில் தமிழகத்தில் இருந்து கேளாவுக்கு செல்லும் 10 வழிகளையும் ஒரு வாரத்துக்கு அடைத்து வைத்து அத்தியாசிய பொருட்கள் அங்கு செல்வதை தடை செய்ய தீர்மானமும் நிறைவேற்ற வேண்டும்.

அப்போதுதான் கேரள மக்கள் உண்மை நிலையை உணர்வார்கள். மேலும் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்கு தடையாக இருக்கமாட்டார்கள்.

இந்த 3 பகுதிகளையும் தமிழகத்துடன் இணைக்க தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பறிபோனதற்கு திராவிட கட்சிகள் செய்த துரோகம்தான் காரணம்.

உச்சநீதிமன்றம் 27-2-2006ல் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தது. அப்போது அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வரத்தும் இருந்தது.



அ.தி.மு.க. அரசு முனைப்புடன் செயல்பட்டிருந்தால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியிருக்கலாம். பின்னர் ஆட்சிக்கு வந்த தி.மு.க.வுக்கும் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தி.மு.க. ஆட்சியின்போது கிடைத்த 3 வாய்ப்புகளை தவறவிட்டு விட்டனர். அப்போது கேரள அரசுடன் தேவையின்றி பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த பிரச்சினையில் தமிழக அரசின் நிலை பலவீனமடைந்தது.

மீண்டும் ஒருமுறை அணையின் வலிமை தொடர்பாக தொழில்நுட்பங்கள் குறித்து எதுவும் தெரியாத உச்சநீதிமன்ற நீதிபதி ஆனந்து தலைமையில் குழு அமைக்க ஒப்புக்கொண்டிருக்க கூடாது. ஏற்கனவே மத்திய அரசு அமைத்த தொழில்நுட்ப நிபுணர் குழுவினர் இந்த அணை வலிமையாக உள்ளது என தெரிவித்திருந்தனர்.



மீண்டும் குழு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் தமிழகத்தின் உரிமை பாதிக்கப்பட்டது. இல்லையெனில் உச்சநீதி மன்றம் மூலம் எப்போதோ இந்த பிரச்சனை தீர்க்கப் பட்டிருக்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக இருந்த நிலையில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியிருக்கலாம்.

இந்த பிரச்சனையில் தேனி மாவட்டத்தில் தினந்தோறும் 50 ஆயிரம், 1லட்சம் என மக்கள் வீராவேசத்தோடு தன்னிச்சையாக போராடி வருவது ஒவ்வொரு தமிழனை யும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

எந்த அரசியல் கட்சிகள் அமைப்புகளின் தூண்டுதல் இல்லாமல் தமிழக மக்கள் தன்னிச்சையாக நடத்தும் இந்த போராட்டம் தமிழக வரலாற்றில் பதிவாகும்.



தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இந்த பிரச்சனையில் உரிய தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும்.

போராடுகிற தமிழர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகத்தில் முக்கிய ஆறுகளின் நீர்பிரச்சினையில் திராவிட கட்சிகள் செய்த துரோகம் மன்னிக்க முடியாதது.



அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கரும்புக்கு டன்னுக்கு ரூ.2500 தருவதாக ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால் தற்போது 1950 ரூபாய் தான் வழங்கப்படுகிறது. எனவே ஏற்கனவே கூறிய தொகையை வழங்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அனைத்து அணைகளிலும் ராணுவத் தினரை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என கூறியுள்ளது நல்ல யோசனைதான்.

கேளராவில் அனைத்து கட்சிகளும் இந்த பிரச்சனையில் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன. அங்கு அடிக்கடி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. அதே போல் தமிழகத்திலும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

அப்போது தான் சட்டசபையில் இடம் பெறாத அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க முடியும்

Saturday, December 10, 2011

வானம் உள்ளவரை... இந்த பூமி உள்ளவரை...: ராமதாஸ் பேட்டி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,


கடந்த 46 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்து விட்டன. திராவிட கட்சிகளுக்கு மாற்றான ஒரு திட்டத்தை விரைவில் அறிவிப்பேன். வானம் உள்ளவரை இந்த பூமி உள்ளவரை திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது.



பள்ளிக் கூட கட்டிடங்கள் ஒழுகிகொண்டிருக்கிறது. அரசு புதிது புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கிறது. டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தை ஏற்கனவே அறிவித்தபடி விரைவில் நடதுவோம் என்றார்.

Friday, December 2, 2011

தமிழ் திரைத்துறையினருக்கு அன்புமணி வேண்டுகோள்

புகைபிடிக்கும் காட்சிகளில் மத்திய அரசின் விதிகளை கடைபிடியுங்கள் என்று முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி அன்புமணி விடுத்துள்ள அறிக்கையில்,

’’திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு நவம்பர் 14 முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் வெளிவந்துள்ள புதிய திரைப்படங்கள் மத்திய அரசின் உத்தரவினை பின்பற்றாத நிலையே இன்னமும் நீடிக்கிறது.

இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழ் திரைப்படத் துறையினர் சட்டத்தை மதித்து நடக்க முன்வர வேண்டும். தமிழக அரசும் இதனை கட்டாயப்படுத்த வேண்டும்.

சமீபத்தில் வெளிவந்துள்ள `மயக்கம் என்ன' எனும் திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெற்று ள்ளன.

மத்திய அரசின் புதிய உத்தரவு செயலுக்கு வந்த நாளுக்கு பின்னரே தணிக்கைத் துறை சான்று பெற்றிருந்தும் சட்டவிதிமுறைகள் இதில் பின்பற்றப்படவில்லை.


``திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடிக்கும் கதாநாயகர், படம் தொடங்கும் போது புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகளை விளக்கி பேச வேண்டும், புகைபிடிக்கும் காட்சியின் போது கீழே எச்சரிக்கை வாசகத்தை ஓடவிட வேண்டும்' என்கிற அரசு உத்தரவு இந்த திரைப்படத்தில் இடம்பெறவில்லை.


இந்த முக்கியமான விதிகள் தமிழ்நாட்டின் திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் இன்னமும் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே தமிழ் திரைப்படத் துறையினர் இனியும் தாமதிக்காமல் மத்திய சுகாதார அமைச்சகத்தின் புதிய விதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கட்டுப்பாடுகளை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

அணு உலைகள் பற்றிய வெள்ளை அறிக்கை தேவை – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

NewsletterIts Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்கல்பாக்கம்: கல்பாக்கம் அணு உலைகளால் காஞ்சிபுரம், சென்னை, மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த அணுமின்நிலையத்தினால் கல்பாக்கம் சுற்றுவட்டார மக்கள் பல்வேறு ஆபத்துக்களை அனுபவித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினம் கிராமத்தில் பா.ம.க. சார்பில் அணு உலைகள் ஆபத்தானவை என்ற தலைப்பில் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்று கல்பாக்கம் பகுதி மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:

கூடங்குளத்தில் அணுஉலையை மூட கோரி அங்குள்ள பெண்கள் 47-வது நாளாக போராடி வருகிறார்கள். இங்கும் இந்த கலந்தாய்வுக்கு ஆண்களுக்கு நிகராக சரிபாதி பெண்கள் வந்திருக்கிறீர்கள். கல்பாக்கம் அணு உலைகளை நாங்கள் எதிர்ப்பதுகூட கூடங்குளம் மக்களை பார்த்து நடத்தவில்லை. ஏற்கனவே இப்பகுதி பொதுமக்களுடன் 2 நாட்கள் கலந்தாய்வு நடத்தி உள்ளோம்.

அணு உலைகளால் ஆபத்து

அணு உலைகளால் காஞ்சிபுரம், சென்னை, மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. ஏற்கனவே அணுமின் நிலையம் உள்ள பகுதி மக்கள் பல்வேறு ஆபத்துக்களை அனுபவித்து வருகிறார்கள்.

அணு உலை வேண்டாம்

ஆபத்து இல்லாத அணு உலையே கிடையாது. இப்போது கல்பாக்கத்தில் அதிவேக அணு உலை அமைக்க போகிறார்களாம். அமெரிக்காவில் இந்த அதிவேக அணுஉலை தொழில்நுட்ப முயற்சி கைவிடப்பட்டு விட்டது. உலகம் முழுவதும் கைவிடப்பட்ட அதிவேக அணுஉலையை கல்பாக்கம் மக்களின் தலையில் கட்ட முயற்சிக்கிறார்கள். இதில் பாதிக்கப்பட போவது தமிழர்கள்தான்.

இந்தியாவில் அண்மையில் நடந்த மிகப்பெரிய எழுச்சி போராட்டம் கூடங்குளம் போராட்டம்தான். இதற்கு ஆதரவாக சென்னையில் நாங்களும் போராட்டம் நடத்தி உள்ளோம். அணு உலை வேண்டுமா? வேண்டாமா? என்றால் எங்கள் பதில் வேண்டாம் என்பதுதான்.

இங்குள்ள ஆபத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதற்குதான் இந்த கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. கல்பாக்கத்தில் புதிய அணு உலைகளை கட்டகூடாது. இதை வலியுறுத்தி ஒவ்வொரு கிராமத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.அணு உலையை எதிர்த்து பெண்கள் போராட வேண்டும்.

வெள்ளை அறிக்கை தேவை

கல்பாக்கத்தில் அணு உலைகளால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து நடுநிலையான மருத்துவர் குழு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும்,

அணுஉலை பற்றி வெளிப்படையான விவாதம் நடத்த அரசு முன் வரவேண்டும். அதிவேக அணுஉலை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: