Monday, May 10, 2010

போலீஸார் வீட்டுக்கே வந்து புகாரைப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்- பாமக

சென்னை: போன் மூலம் யாரேனும் புகார் கொடுத்தால், புகார் கொடுத்தவர்களின் வீடுகளுக்கேச் சென்று போலீஸார் புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

சட்டசபையில் நேற்று நடந்த உள்துறை மானிய கோரிக்கையின் மீது மணி பேசுகையில்,

இன்றைக்கு குற்றநிகழ்வுகளுக்கு ஏற்பவும், மக்கள் தொகைக்கு ஏற்பவும் போலீசாரின் எண்ணிக்கையை கூடுதலாக்க வேண்டும். 8 மணி நேர பணி வரம்பு, வார விடுமுறை, 8 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

பல இடங்களில் மக்கள் போலீஸ் நிலையத்திற்கு செல்லவே அஞ்சி புகார் செய்யாமலேயே விட்டுவிடுகிறார்கள். புகார் செய்தாலும் வழக்கு பதிவு செய்வதில்லை. புகார் செய்ய சென்றவர் மீதே வழக்கு பதிவு செய்யும் நிலையும் இருக்கிறது.

போன் செய்தால் வீட்டுக்கே சென்று புகாரை பெற்று வழக்கு பதிவு செய்யும் ஒரு சீர்திருத்த முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஏற்று அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாதிரி காவல் சட்டத்தை தமிழ்நாட்டிலும் அமல்படுத்த வேண்டும்.

சோதனைசாவடி, வாகன சோதனை, நெடுஞ்சாலை ரோந்து சமயங்களில் போலீசார் முறைகேடுகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாரையே மிரட்டுகிறார்கள். இதில் தவறான புகார் தரும் வழக்கை பதிவு செய்யாமல் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீரப்பனின் அண்ணன் மாதையன் எந்த குற்றமும் செய்யாமல் 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

போலீஸ் தேர்வில் ஆண்களுக்கு உயரம் 168 செ.மீ என்பதை 170 ஆகவும் பெண்களுக்கு 157 செ.மீ. என்பதை 159 என்றும் உயர்த்தியதை கைவிட வேண்டும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: