Monday, April 26, 2010

அதிமுக பந்த்: பா.ம.க. பங்கேற்காது- ஜி.கே.மணி

திருநெல்வேலி: நாளை அதிமுக தலைமையிலான கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டோம் என்று பாமக அறிவித்துள்ளது.

திருநெல்வேலியில் நடந்த யாதவ மகாசபை மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பாமக தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறுகையில்,

நாளை (27ம் தேதி) நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பா.ம.க கலந்து கொள்ளாது.

தமிழ்நாட்டில் சட்டமேலவை வருவதை பா.ம.க முழுமையாக ஆதரிக்கிறது. இதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. பாமக உள்ளிட்ட எல்லாரும் அதில் இடம் பெற வாய்ப்புள்ளது.

மேலவையில் சமூகநீதி, மொழி, பண்பாடு மற்றும் மாநில வளர்ச்சியை உள்ளடக்கி பேசுவோர் அதிகம் இடம் பெற வேண்டும் என்பதே பா.ம.கவின் விருப்பம்.

இது தேர்தல் நேரம் இல்லை. எனவே கூட்டணி குறித்து இப்போது பேச முடியாது. தமிழ்நாட்டில் 120 சட்டமன்ற தொகுதிகளில் பா.ம.க வலுவாக உள்ளது. இதில் 64 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பும் உள்ளது.

தேர்தல் நேரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தனித்து போட்டியா, கூட்டணி அமைத்து போட்டியா என்பது பற்றி முடிவு செய்யப்படும். வரும் தேர்தல்களில் பென்னாகரம் இடைதேர்தல் 'பார்முலா' அடிப்படையில் பணிகளை மேற்கொள்வோம் என்றார்.

புதிய தமிழகம் ஆதரவு:

அதே நேரத்தில் அதிமுக வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் நிருபர்களிடம் கூறுகையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் கட்டமாக உற்பத்தியாகும் 1,000 மெகாவாட் மின்சாரத்தை பழைய ஒப்பந்தத்தை மாற்றி அமைத்து, முழுவதுமாக தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களை மிகவும் பாதித்துள்ளது. விலைவாசி உயர்வை மத்திய-மாநில அரசுகள் கட்டுப்படுத்த தவறிவிட்டன.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாளை நடத்தும் பொதுவேலை நிறுத்தத்துக்கு புதிய தமிழகம் கட்சி தார்மீக ஆதரவை அளிக்கிறது என்றார்.

தமுமுகவும் ஆதரவு:

இந் நிலையில் இந்த பந்துக்கு தமுமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

அக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஐபிஎல் கிரிக்கெட் பிரச்சனையில், முன்னாள் அமைச்சர் சசி தரூர் ராஜினாமா என்பது பெயரளவில் தான் நடந்துள்ளது. இதன் மூலம் கிரிக்கெட்டில் பெரிய சூதாட்டம் நடைபெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிரபாகரன் தாயார் சிகிச்சைக்காக சென்னை வந்து திருப்பி அனுப்பியது தமிழக முதல்வருக்கு தெரியாது என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இது மனித நேயத்திற்கு விரோதமான செயல்.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்காக 27ம் தேதி அதிமுக நடத்தும் பந்துக்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: