Thursday, May 13, 2010

திமுகவுடன் நல்லுறவு- கருணாநிதியை மீண்டும் முதல்வராக்குவோம்: கூறுகிறார் காடுவெட்டி குரு

ஜெயங்கொண்டம்: திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையிலான உறவு இப்போது நன்றாக உள்ளது. கருணாநிதி யை அழைத்து மாநாடு நடத்தி, அவரிடம், நீங்கள்தான் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்வீர்கள் என்று கூறப் போகிறோம் எனக் கூறியுள்ளார் வன்னியர் சங்கத் தலைவரான காடு வெட்டி குரு.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்னரே திமுகவினருக்கும், பாமகவினருக்கும் இடையே இடையில் உறவு கசந்து போனது.

மத்திய அமைச்சர் ராஜா குறித்தும், முதல்வர் கருணாநிதி குறித்தும் மிகக் கடுமையாக பேசியதாகக் கூறி காடுவெட்டி குருவை குண்டர் சட்டத்தில் கைது செய்தது திமுக அரசு. இதைத் தொடர்ந்து கூட்டணியிலிருந்து பாமகவை நீக்கியது திமுக.

அதன் பின்னர் வந்த மக்களவைத் தேர்தலில் காடுவெட்டி குருவின் மிகக் கடுமையான வற்புறுத்தலின் காரணமாக அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார் டாக்டர் ராமதாஸ்.

ஆனால் இன்று அதே காடுவெட்டி குரு, கருணாநிதியை மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர வைப்போம் என முழங்கியுள்ளார்.

இதுகுறித்து ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

எதிர்கால தேர்தலை கருத்தில் கொண்டு வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை வேலைகளை திட்டமிட்டு தொடங்கியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 120 தொகுதிகளை தேர்வு செய்து பென்னாகரத்தில் திட்டமிட்டு வேலைகள் செய்ததுபோல் உறுப்பினர்கள் சேர்க்கை, கிளைகள் அமைத்தல், கொடியேற்றுதல் என்று வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.

ஒவ்வொரு தொகுதிகளிலும் 60 ஆயிரம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க உள்ளோம்.

வரும் ஜுலை 18ம் தேதி பூம்புகாரில் 10 லட்சம் பெண்களை திரட்டி மகளிர் திருவிழா நடத்தும் பணியும், ஜுலை 28ம் தேதி கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் மற்றும் தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான பணிகளையும் செய்து வருகிறோம்.

தமிழக முதல்வர் கருணாநிதியை டாக்டர் ராமதாஸ், அன்புமணி, பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ஜி.கே.மணி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் சந்தித்து வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்த உள்ளோம்.

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு சாலை மறியல்கள் நடந்தபோது 120 சாதிகளுக்கு தனி இடஒதுக்கீடாக முதல்வர் கருணாநிதி, 'இந்த கனியை தருகிறேன் சுவைத்து பாருங்கள்' என்று இடஒதுக்கீடு வழங்கினார்.

வன்னியர்களுக்கு முதலில் இடஒதுக்கீடு வழங்கிய முதல்வர் கருணாநிதியை மீண்டும் சந்தித்து 2 கோடி வன்னியர்களுக்காக தனி இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைக்க உள்ளோம்.

முதல்வர் கருணாநிதியை சந்திப்பது வன்னியர்களுக்காக தனி இடஒதுக்கீடு கோரி மட்டுமே. இதற்கு அரசியல் சாயம் பூசவேண்டாம். கூட்டணி என்பது சட்டமன்ற தேர்தல் அறிவித்த பின்னர் டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணியும் தலைமை செயற்குழுவை கூட்டி முடிவு செய்வார்கள்.

ராஜ்யசபா சீட் குறித்து டாக்டர் ராமதாசும், அன்புமணி ஆகியோரும் மற்றும் கட்சி செயற் குழுவும் முடிவு செய்யவர்.

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கருணாநிதி அறிவித்தால் முன்பு மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் மாநாட்டில் கூறியதுபோல் மீண்டும் விழுப்புரத்தில் ஒரு மாநாட்டை கூட்டி இந்த முதல்வர் நாற்காலியில் நீங்கள்தான் (கருணாநிதி) முதல்வராக அமர்வீர்கள் என்று அறிவிப்போம். தற்போது திமுக-பாமக உறவு நன்றாக உள்ளது என்றார் காடுவெட்டி குரு.

எந்த காடுவெட்டி குருவால் திமுகவின் அன்பை இழந்ததோ அதே காடு வெட்டி குருவின் வாயாலேயே திமுகவுடன் நல்லுறவு இருக்கிறது, மீண்டும் கருணாநிதியே முதல்வர் என்று சொல்ல வைத்துள்ளது பாமக என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக- பாமக இடையே மீண்டும் கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: