Wednesday, April 21, 2010

கிராமத்தில் பிறந்தவன் 7 மாதத்திலா பிறந்தான்?: பாமக எம்எல்ஏ

சென்னை: தனியார் மருத்துவமனைகள் கோடிகளை குவிப்பதற்கு உதவும் திட்டமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மாறிவிடக் கூடாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

சட்டசபையில் மக்கள் நல்வாழ்த்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ டாக்டர் காயத்ரி தேவி கூறுகையில்,

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சைக்கு செல்பவர்களிடம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களின் பரிந்துரை கடிதம் கேட்கிறார்கள். அதனால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாதாரண வியாதிகளுக்கும் அசாதாரண கட்டணம்:

இந்த திட்டத்தில் சில தனியார் மருத்துவமனைகளில் சாதாரண வியாதிகளுக்கும் அசாதாரணமான கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். இதற்கு ஒரு கண்காணிப்பு குழுவை அமைத்து எந்தெந்த மருத்துவமனைகள், எந்தெந்த வியாதிகளுக்கு எவ்வகை கட்டணம் பெறுகின்றன என்பதை கண்காணிக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள் கோடிகளை குவிப்பதற்கு உதவும் திட்டமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மாறிவிடக் கூடாது.

இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் பல தனியார் மருத்துவமனைகளில் முறையாக பயிற்சி பெறாத டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், உதவியாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற குறைகளைக் களைய வேண்டும்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது. சிகிச்சைக்கான செலவு ரூ. 1.50 லட்சம் வந்தால், மீதமுள்ள ரூ. 50,000த்தை செலுத்த பலர் தயாராக உள்ளனர். ஆனால், இதுபோன்ற நிலை ஏற்படும்போது தகுதியில்லை என்று கூறி மருத்துவமனைகள் திருப்பி அனுப்பி விடுகின்றன.

பரிசோதனை செய்வதில் ஏற்படும் காலதாமதம், சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக அரசு மருத்துவமனைகளுக்கு பலர் செல்வதில்லை.

மக்கள் எப்படி வருவார்கள்?:

சென்னை அரசு பொதுமருத்துவமனையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட எலக்ட்ரானிக் மைக்ராஸ்கோப் கருவி பழுதுதடைந்துள்ளது. இதுபோன்ற நிலை இருந்தால் அரசு மருத்துவமனைக்கு மக்கள் எப்படி வருவார்கள்?.

எனவே அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை ஒன்றை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் 62,000 செவிலியர்கள் தேவை. ஆனால் 20,000 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். எனவே மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும், செவிலியர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றும் புரியாத மருத்துவ படிப்புகள்:

மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு தொடர்பில்லாத மருத்துவ உதவியாளர் பயிற்சியை (பிசிஸியன் அசிஸ்டெண்ட் கோர்ஸ்) சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடத்துகிறார்கள். அதேபோல மருத்துவ கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் 6 மாத உதவி செவிலியர் பயிற்சியின் நோக்கம் தான் என்ன? நாடித் துடிப்பை பற்றி அறிந்து கொள்ளக் கூட இந்த 6 மாதம் போதாதே? ஏன் இந்த பயிற்சி இதுபோன்ற ஒன்றும் புரியாத பாடப்பிரிவுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

பெங்களூரை நம்பியிருப்பது ஏன்?:

திசு சோதனை, நரம்பு நுண் சோதனை போன்ற அதிமுக்கியமான சோதனைகளுக்கு பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனையை நம்பியிருப்பது ஏன்?. நிமான்சுக்கு இணையாக ஒரு ஆராய்ச்சி நிலையத்தை தமிழகத்தில் இந்திரா காந்தி பெயரில் உருவாக்க வேண்டும்.

தனியார் செவிலியர் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் `சூப்பர் ஸ்பெஷாலிட்டி கேசஸ்' பயிற்சி பெற அனுமதி மறுப்பது ஏன்? அதேபோல தனியார் ஆஸ்பத்திரிகளில் பயிற்சி பெற செவிலியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்க மறுப்பது வேதனைக்குரியதாகும் என்றார் காயத்ரி தேவி.

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் சிகிச்சையா?:

அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் பேசுகையில், தண்ணீரில் கலப்படம், உணவில் கலப்படம், இப்போது மருந்திலும் கலப்படம் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சுகாதாரத் துறையின் நிர்வாக திறமையின்மையே இதற்கு காரணம். இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

(கலைஞர்) காப்பீட்டுத் திட்டமும் சட்டமன்ற கட்டிடம் போல அவசரக் கோலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. எத்தனையோ அரசு காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கும் போது தனியார் நிறுவனத்திற்கு கொடுத்திருப்பது ஒரு சிலர் ஆதாயம் பெறுவதற்காகத் தான்.

71,942 பேருக்கு ரூ.205 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், 1.44 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்காக கொடுத்த பிரீமியத் தொகை எவ்வளவு என்பதை மட்டும் ஏன் சொல்லவில்லை?.

காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்தில் 4 நபர்களுக்கு 4 வருடங்களுக்கு ஒரு முறை காப்பீடு செய்யப்படுகிறது. இதில் 4 வருடங்களில் ஒரு நபர் ரூ.1 லட்சத்துக்கு சிகிச்சை மேற்கொண்டுவிட்டால் மற்ற 3 பேருக்கு திட்ட பலன் கிடைக்காது. அந்த 3 பேர் கதி என்ன?.

இடையில் ஒரு புரோக்கர் ஏன்?:

அதேபோல ஆபரேஷனுக்கு முந்தைய பரிசோதனை, தங்கியிருக்கும் செலவு, தொடர் சிகிச்சை ஆகியவைகளை செலுத்த முடியாமல் பலர் அவதிப்படுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் ஆபரேஷன்களுக்கும் இந்த காப்பீட்டுப் பணம் வழங்கப்படுகிறது. அரசு பணத்தை அரசு மருத்துவமனைக்கு வழங்க இடையில் ஏன் ஒரு புரோக்கர்? என்றார்.

கிராமத்தில் பிறந்தவன் 7 மாதத்திலா பிறந்தான்?:

பாமக எம்எல்ஏ டாக்டர் நெடுஞ்செழியன் பேசுகையில், கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்காக `பேச்சலர் ஆப் ரூரல் மெடிசின் சர்வீஸ்' (பி.ஆர்.எம்.எஸ்.) என்ற மூன்றரை வருட படிப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கிராமத்தில் பிறந்தவன் மட்டும் 7 மாதத்திலா பிறந்தான்?. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: