Sunday, February 21, 2010

முல்லைப் பெரியாறு: திமுக நிலைக்கு ராமதாஸ் ஆதரவு

சென்னை: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள ஐவர் குழுவில் தமிழகத்தின் சார்பில் யாரும் இடம்பெறத் தேவையில்லை என திமுக எடுத்துள்ள நிலைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முல்லைப் பெரியாறு வழக்கின் தன்மையை திசை திருப்பும் வகையில், அணையின் பாதுகாப்புத் தன்மையை மீண்டும் ஆராய வேண்டும் என்றும், அதற்காக ஐவர் குழுவை அமைப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

இந்தப் பிரச்சனை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் "ஐவர் குழுவில் தமிழகம் இடம்பெறத் தேவையில்லை'' என்று திமுக பொதுக்குழுவில் முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள்.

இதை அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுவும் ஒரு வழி என்ற வகையில் அதனை பாமக ஏற்றுக் கொள்கிறது.

முல்லைப் பெரியாறு பிரச்சனை மட்டுமல்ல, பல்வேறு ஆற்று நீர் பிரச்சனைகளில் தமிழகத்துக்கு கேரளம் உதவ மறுத்து வருகிறது. குமரி மாவட்டத்துக்குப் பயன்தரும் நெய்யாற்று தண்ணீரில் புதிதாகப் பிரச்சனை கிளப்புகிறது.

அரிசி, காய்கறிகள், மின்சாரம், மணல் போன்ற ஜீவாதாரப் பிரச்சனைகளில் தமிழகத்தை நம்பியுள்ள கேரளம், ஆற்று நீர் பிரச்சனையில் தமிழகத்துக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும். இந்தக் கடமையை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: