சென்னை: அதிமுகவுக்கு ஆதரவாகவும் ஜெயலலிதாவுக்கு மனம் குளிரவும் தான் பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பென்னாகரம் இடைத்தேர்தல் முதலில் ஜனவரி மாதத்தில் தள்ளி வைக்கப்பட்டதும், இப்போது பிப்ரவரி மாதத்தில் மீண்டும் தள்ளிப்போடப்படும் நிலைமை ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்கிறதா? என்கிற பெரும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
பென்னாகரம் இடைத்தேர்தல் ஜனவரி மாதம் 20ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட போது, இடையில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் குறுக்கிடுவதை சுட்டிக்காட்டி தேர்தலை சில நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல் முதலில் பாமக முன் வைத்தது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடமும் நேரில் முறையிட்டு மனுவும் அளிக்கப்பட்டது.
ஆனால், பொங்கல் கொண்டாட்டம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பின்னர் தான் தேர்தல் தேதியை ஆணையம் முடிவு செய்தது என்று கூறி, பாமகவின் கோரிக்கையை நிராகரித்தார்கள்.
பாமகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அடுத்த நாளே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இதே காரணத்தைக்கூறி, பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். அதை தொடர்ந்து அனைத்து கட்சிகள் கூட்டம் என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றி ஜெயலலிதாவின் மனம் குளிரும்படி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்தது.
பிறகு பென்னாகரம் தொகுதியில் திருத்திய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. திருத்திய வாக்காளர் பட்டியலை தயாரிப்பது தொடர்பாக ஜனவரி மாதம் முதல் தேதியன்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தருமபுரிக்கு நேரில் சென்று மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தருமபுரி மாவட்ட பாமக செயலாளர் நரேஷ் குப்தாவை நேரில் சந்தித்து பழைய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த 25,000க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு விட்டன என்பதை கூறி, அது குறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
விடுபட்ட வாக்காளர்களின் பெயர்கள், அவர்களது முகவரி, குடும்ப அட்டைகள், முன்பு பெற்றிருந்த புகைப்பட அடையாள அட்டைகள், முதலான ஆவணங்களை இணைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மனு கொடுத்தார்.
பாமக அளித்த இந்த மனு மீது ஜனவரி மாதம் முழுவதும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விடுபட்ட வாக்காளர்களை சேர்த்து திருத்திய பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளை தலைமை தேர்தல் அதிகாரியோ, தேர்தல் ஆணையமோ அறிவுறுத்தவில்லை.
எனினும், பென்னாகரம் இடைத்தேர்தலை சந்திப்பது என்ற தீர்க்கமான முடிவுடன் பாமக தேர்தல் களத்தில் இறங்கியது.
அதிமுக ஏன் சோம்பி கிடந்தது?:
வேட்பாளரை அறிவித்து முழு மூச்சுடன் தேர்தல் பணியாற்றி வந்தது. ஆளும் திமுகவும் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தது. ஆனால் அதிமுக மட்டும் பென்னாகரத்தில் ஒரு இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்ற எண்ணம் சிறிதும் கூட இல்லாமல், சோம்பிக் கிடந்ததின் ரகசியம் இப்போது தான் புரிகிறது.
வாக்காளர் பட்டியல் தொடர்பாக பாமக கொடுத்த மனுமீது ஜனவரி மாதம் முழுவதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையம், ஜெயலலிதாவின் ஆதரவு கட்சிகள் மனு கொடுத்த அடுத்த சில மணி நேரத்தில் வாக்காளர் பட்டியலின் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்து, அதுவரையில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டாம் என்று தடுத்து விட்டது.
இதனால் பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் சூழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் துணை போயிருக்கிறது.
சோனியா-ஜெவை சந்திக்க வைத்த சாவ்லா:
டெல்லியில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் வைர விழா கொண்டாட்டத்தின் போது, தனி அக்கறையுடன் ஜெயலலிதாவை டெல்லிக்கு அழைத்து, விழா மண்டபம் அருகே உள்ள தனி அறையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி அங்கு வரும் வரையில் திட்டமிட்டு உட்கார வைத்து இருவரையும் சந்திக்க வைத்தார் நவீன்சாவ்லா என்று ஏற்கனவே வெளியான செய்தியையும்,
பென்னாகரம் இடைத்தேர்தலில் இரண்டு முறை ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்த நடவடிக்கைகளை பார்க்கும் போது, தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றாக மதித்து செயல்படுகின்ற நடுநிலையிலிருந்து தவறியிருக்கிறது என்ற குற்றச்சாற்றிலிருந்து தப்பிக்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் இந்த சார்பு நிலை மிகவும் கண்டிக்கத்தக்கது.
பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் சூழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் துணை போயிருக்கிறது. குறிப்பாக நவீன்சாவ்லா துணை போகிறார்.
பென்னாகரத்தில் அதிமுக தேர்தல் பணிகளில் ஈடுபடவில்லை. திடீரென தேர்தல் வைத்தால் அதிமுக 3வது இடத்துக்கு போய்விடும் என்ற பயத்தில் தேர்தலை தள்ளி வைக்க ஜெயலலிதா திட்டம் போடுகிறார்.
தேர்தலை உடனே நடத்த வேண்டும். பென்னாகரம் இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெறுவது உறுதி. அதிமுக டெபாசிட் இழப்பதும் உறுதி என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமகதான் ஜெயிக்கும்:
இந் நிலையில் விழுப்புரத்தை அடுத்த வானூரில் பாமக தொண்டரின் திருமணத்தை நடத்தி வைத்து பேசிய ராமதாஸ்,
கோடிகள் கொடுத்தாலும் கொள்கை மாறாத தொண்டர்கள் உள்ளதால் பாமக மேலும் வளர்ந்து வருகிறது. இதை அழித்துவிட நினைத்தவர்கள் முடியாது என்று திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் மதுவை ஒழிக்க முடியவில்லையே என்று தினம் தினம் கவலைப்படுகிறேன். குடியில்லாத வீடு, தெரு, ஊர், நகரம், நாடு என்று உருவாக வேண்டும். இது சாத்தியமா என்று கேட்கலாம். முடியும். தமிழக மக்கள் ஆட்சியை பாமகவிடம் தரும்போது முதல் கையெழுத்து அதுவாகத்தான் இருக்கும். ஒரு சொட்டு சாராயம் இல்லாமல் ஒரே மாதத்தில் செய்ய முடியும்.
டாடா, அம்பானியின் குழந்தைகளுக்கு கிடைக்கும் தரமான கல்வி, சாதாரண மக்களுக்கும் கிடைக்க வேண்டும். குறைந்தபட்சம் பிளஸ் 2 வரையிலாவது கட்டாய கல்வி அளிக்க வேண்டும்.
விவசாயிகளின் முதுகெலும்பை 63 ஆண்டுகளில் ஒடித்து விட்டார்கள், பாமக ஆட்சியில்தான் விவசாயிகள் தலை நிமிர்ந்து வாழ முடியும். மற்ற தொழில்களில் ரூ.10 முதலீடு செய்து ரூ.100 சம்பாதிக்கிறார்கள், விவசாயிகள் ரூ.100 போட்டு, ரூ.10 தான் சம்பாதிக்கிறார்.
நாங்கள் ரூ.100 முதலீடு போட்டால், குறைந்தபட்சம் ரூ.100 லாபம் கிடைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்துவோம்.
குடிக்கக் கூடாது, புகைக்கக் கூடாது என்று சொல்லும் தலைவர்களை காட்டினால் அவர்கள் சொல்வதற்கு தலைவணங்குகிறேன்.
பென்னாகரம் இடைத் தேர்தலில் பாமக தான் ஜெயிக்கும் என்றார் ராமதாஸ்.
Thursday, February 4, 2010
பென்னாகரம் இடைத் தேர்தலில் பாமக தான் ஜெயிக்கும் -ராமதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
No comments:
Post a Comment