சென்னை: நடுநிலையற்று செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை அப்பதவியில் நீடிக்க விடக் கூடாது. அவரை நீக்க வேண்டும். அவர் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
பென்னாகரம் இடைத்தேர்தல் குறித்து நான் வெளியிட்ட சில குற்றச்சாட்டுகளை முதல்வர் அப்படியே ஏற்றுக்கொண்டு வேலியே பயிரை மேயலாமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் நடுநிலை தவறிய போக்கை முதல்வரும் கூறியிருக்கிறார்.
தலைமை தேர்தல் ஆணையர் நடுநிலையாளராக இல்லை. ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படும் நிலையில் இருக்கிறார் என நாங்கள் மட்டும் சொல்லவில்லை.
3 ஆண்டுகள் தலைமை தேர்தல் ஆணையராக பணிபுரிந்த தமிழகத்தை சேர்ந்த கோபால்சாமி குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தில் நவீன் சாவ்லா நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையம் ஒரு நடுநிலையான அமைப்பு. அதன் உறுப்பினர்கள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும். ஆனால் நவீன் சாவ்லா ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறார். இந்த நிலையில் அவர் தேர்தல் ஆணைய அதிகாரியாக நீடிக்கக்கூடாது என புகாரில் தெரிவித்து உள்ளார். இதைவிட வேறு சான்று தேவையில்லை.
நவீன் சாவ்லாவின் நடுநிலையை சந்தேகிக்கும் கடிதம் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவரது நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
2009-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லுகள் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டும் அவரது பெயரில் எழுந்துள்ள நிலையில் அவரை விசாரிக்க வேண்டியது மிக அவசியமாகிறது.
விலைவாசி உயர்வு...
அத்தியாவசிய உணவு பண்டங்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. உற்பத்தி செய்யும் விவசாயிக்கு விலை உயர்வு இல்லை. இடையில் இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் அடைகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு விலைவாசி உயர்வு குறித்து பிரதமர் கலந்துகொண்ட முதல்-அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம், எது காரணம் என்று கண்டறியாமல் மாநாடு கூடி கலைந்து இருக்கிறது.
புதிய பொருளாதார கொள்கையின் நடைமுறை காரணமாக தமிழகத்திலும், நாட்டின் இதர பகுதிகளிலும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளில் ஏற்றமும், முடக்கமும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
தனியார் பெரிய நிறுவனங்கள் நேரடியாக விளைபொருட்களை அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்தும், பிறகு மதிப்பு கூட்டி விற்பனை செய்வதும், அதுவும் சில்லரை விற்பனை மையங்கள் வாயிலாக அனுமதி வழங்கப்பட்டிருப்பதும் உணவு தானிய சந்தையில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளின் குறைபாடுகளே காரணம்.
ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் காலத்திற்கேற்ப புதிய மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை நடைமுறைபடுத்தவில்லை. அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் போதிய முதலீடு செய்யப்படவில்லை. ஒழுங்கு முறை விற்பனை கூடங்களின் செயல்பாடுகளின் பலன்கள் அதன் பங்குதாரர்களான விவசாயிகளை சென்றடையவில்லை.
இத்தகைய தவறான பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளின் காரணமாகத்தான் உணவு, தானியங்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
வேளாண் உற்பத்தி குறைந்து கொண்டே போகிறது. தொழில் வளர்ச்சி என்ற பெயரால் வேளாண்நிலங்கள் கட்டாயமாக பறிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரால் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து பெரும் தொழில் அதிபர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது.
ஒரு புறத்தில் நிலமற்ற தொழிலாளர்களுக்கு இலவசமாக நிலம் வழங்குகிறோம் என்று சொல்லிக்கொண்டு இன்னொரு புறத்தில் விவசாய நிலங்களை பறித்து புதிதாக நிலமற்றவர்களை உருவாக்கி கொண்டிருக்கிறது அரசு.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக எத்தனை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எந்தெந்த நிறுவனங்களுக்கு எத்தனை ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. நிலங்களை பெற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டபோது வாக்குறுதி அளித்தபடி அந்த தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளனவா? வேலைவாய்ப்பு குறித்து அவர்கள் அளித்த உத்தரவாதம் நிறைவேறி உள்ளதா? எத்தனை 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
அதில் நமது மாநில இளைஞர்கள் எத்தனை பேர் பயனடைந்து உள்ளனர். இதன் விவரங்கள் அடங்கிய வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என நான் சொல்லி வந்ததை மேதாபட்கரும் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு சந்தேகங்களை போக்க அரசு முன்வர வேண்டும்.
பிடி கத்திரி...
காடு வளர்ப்பு, புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இவைகளில் தீவிரம் காட்ட வேண்டிய மத்திய அமைச்சர், பி.டி.கத்தரிக்காய் விஷயத்தில் மட்டும் அக்கறை எடுத்துக்கொண்டு பி.டி.கத்தரிக்காய் வணிக ரீதியாக பயிரிடுவதற்கு அரசு அனுமதிக்காது என அறிவித்துள்ளார்.
இந்த பி.டி.கத்தரிக்காய் குறித்து ஏற்கனவே பல போராட்டங்கள், கருத்தரங்கங்களை நான் அறிவித்திருந்தேன். இவ்வாறு அரசு அறிவித்துள்ளதை நான் வரவேற்கிறேன். தற்போது அனுமதியில்லை என்பதை எப்போதும் தேவையில்லை என வலியுறுத்துகிறேன். ஏனெனில் 2,500 கத்தரிக்காய் வகைகள் நம் நாட்டில் உள்ளன என்றார் ராமதாஸ்.
Wednesday, February 10, 2010
நடுநிலையற்று செயல்படும் நவீன் சாவ்லாவை நீடிக்க விடக் கூடாது - ராமதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
No comments:
Post a Comment