Monday, September 21, 2009

ஈழத் தமிழர் அவலம் நீடித்தால் மத்திய அரசு இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும்- ராமதாஸ்

சென்னை: ஈழத் தமிழர்கள் மீதான அவலங்கள் இலங்கையில் நீடித்தால், அங்கு முதலீடு செய்ய மாட்டோம் என மத்திய அரசு உறுதியுடன் அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலக தமிழர்களின் ஓர் அங்கமான ஈழத்தமிழர்களின் அவலங்கள் அங்கே போர் முடிந்ததற்கு பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிங்கள பேரினவாத அரசு நடத்திய இனஅழிப்பு போரில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் கொன்று ஒழிக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய தமிழர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டவர்களாக முள் கம்பி வேலிகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சிறுக சிறுக கொல்லப்பட்டு வருகிறார்கள். அங்கிருந்து சிறை முகாம்களுக்கு மாற்றப்பட்டவர்களும் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர்.

மனித உரிமைகள் குறித்தும், இன விடுதலை குறித்தும் உரக்க பேசுகின்ற நாடுகளும், அமைப்புகளும் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் மட்டும் அமைதி காக்கின்றன. அண்டை நாடான இந்தியாவும், இந்தியாவில் உள்ள தமிழர்களும் இந்த அவலங்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.

சிங்கள பேரினவாத அரசின் தமிழின அழிப்பு போரை தடுத்து நிறுத்துவதற்குத்தான் முடியவில்லை. இப்போது அங்கே போர் முடிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போருக்கு பின்னால் தொடர்கின்ற அவலங்களையாவது தடுத்து நிறுத்துவதற்கு முன்வாருங்கள் என்று உலகெங்கும் பரவிக் கிடக்கிற தமிழர்கள் ஏங்கி நிற்கிறார்கள். எங்கேயாவது மனித குலம் துன்புற்றால் துடித்துப் போகிற கிறிஸ்தவர்கள், இப்போது இதற்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.

இலங்கையில் வதை முகாம்களில் ஆடு, மாடுகளை போன்று அடைத்து அடக்கி ஒடுக்கப்பட்டு வரும், ஈழத் தமிழர்கள் உடனடியாக அவர்களது சொந்த இருப்பிடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அவர்களை பின்பற்றி தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஈழத்தமிழர்களின் அவலங்களை துடைக்க குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

மனித உரிமைகளுக்கு எதிராக முகாம்களில் அடைத்து வதைக்கப்பட்டு வருகிற 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை, விடுதலை செய்து சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் இந்தியா கண்டிப்பான குரலில் எச்சரிக்க வேண்டும் என்று, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே நிலையில் வலியுறுத்த வேண்டும்.

இந்திய அரசோ அல்லது இந்திய தொழில் நிறுவனங்களோ இலங்கையில் எத்தகைய தொழில் முதலீடுகளும் செய்யமாட்டோம் என்று அறிவிக்க செய்ய வேண்டும்.

இந்திய அரசு இப்படியெல்லாம் செயல்படுவதற்கு எத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து சிந்தித்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் இந்த கடமையை அவசரகதியில் செயல்பட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: