Sunday, September 13, 2009

கிராமங்கள்தோறும் நர்சரிப் பள்ளிகளை அரசு தொடங்க வேண்டும் :ராமதாஸ்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்க ஒருவழியாக அப்பாயின்மெண்ட் தரப்பட்டதையடுத்து அவரை சந்தித்தார் பாமக தலைவர் ஜி.கே. மணி.

மக்களவைத் தேர்தலுக்குப் பின் அதிமுக- பாமக தலைவர்களிடையே எந்த சந்திப்பும் நடக்கவில்லை.

அதே போல நாங்கள் சந்திக்கும் இடத்தில் அதிமுக தலைமை இல்லை என்று ஏற்கனவே இடதுசாரிகள் வெளிப்படையாகக் கூறியுள்ளன. அதாவது சந்திக்க முயன்றும் முடியவில்லை என்பதையே அந்தக் கட்சிகள் இவ்வாறு கூறியுள்ளன.

இந் நிலையில் பாமகவின் முக்கிய கோரிக்கைகளான சமச்சீர் கல்வி, வேளாண்மை சட்டத் திருத்தம் ரத்து ஆகியவற்றை முதல்வர் கருணாநிதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து முதல்வரை பாராட்ட ஆரம்பித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அவரை நேரில் சந்தித்து தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கவுள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந் நிலையில் தான் இதுவரை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரையும் சந்திக்காமல் இருந்து வந்த ஜெயலலிதா, தன்னை சந்திக்க ஜி.கே.மணிக்கு அப்பாயின்மெண்ட் கொடுத்தார்.

இதையடுத்து நேற்று கொடநாடு சென்ற மணி ஜெயலலிதாவை சந்தித்து அரை மணி நேரம் பேசிவிட்டுத் திரும்பினார். இச்சந்திப்பின்போது பா.ம.க. முன்னாள் எம்.பி. கோ.தன்ராஜும் உடனிருந்தார். இது மரியாதை நிமித்தமாக நடைபெற்ற சந்திப்பு என்று அதிமுகவும், பாமகவும் கூறியுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்குப் பின் அதிமுக - பாமக தலைவர்களிடையே எந்த சந்திப்பும் நடக்காத நிலையில் 4 மாதங்களுக்குப் பின் திடீரென இந்தச் சந்திப்பு நடந்துள்ளதற்கு ஜெயலலிதா வின் பயமே காரணம் என்று கருதப்படுகிறது.
பாமக மீண்டும் திமுக பக்கமாக போய்விடுமோ என்ற அச்சம் காரணமாகவே இச் சந்திப்பு நடந்ததாகத் தெரிகிறது.

அரசு குழு அமைத்தால் பாமக பங்கேற்கும்:

இந் நிலையில் தமிழகத்தில் கிராமங்கள்தோறும் நர்சரிப் பள்ளிகளை அரசு தொடங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் கல்வியாண்டு முதல் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படும் என்றும் 2011-12-ம் ஆண்டில் மற்ற வகுப்புகளுக்கு இது விரிவுபடுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய 3 ஆண்டு பள்ளி முன்பருவக் கல்வியை வசதி படைத்தவர்களின் குழந்தைகள் பெறுகின்றனர். எனவே மழலையர் பள்ளிகளை கிராமங்கள்தோறும் அரசாங்கமே தொடங்கி நடத்த வேண்டும்.

1999ல் தமிழ் பயிற்று மொழி குறித்த முத்துக்குமரன் குழுவின் அறிக்கையை அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும். இது குறித்து அனைத்துக் கட்சி, கல்வியாளர்கள் குழுவை அரசு அமைத்தால் பாமக அதில் பங்கேற்கும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: