Monday, April 13, 2015

போக்குவரத்து ஊழியர் கோரிக்கையை நிராகரித்து துரோகம் இழைப்பதா?: ராமதாஸ்


 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுடன் 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்திய தமிழக அரசு, ஊதிய உயர்வு குறித்த தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிராகரித்து  தன்னிச்சையாக ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. இதை ஏற்க பெரும்பான்மை தொழிற்சங்கங்கள் மறுத்து விட்ட நிலையில் அரசு ஆதரவு சங்கங்களுடன் மட்டும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான 11 ஆவது ஊதிய ஒப்பந்தம் 2013&ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. அதற்குள் 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 01.09.2013 முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், புதிய ஊதிய ஒப்பந்தத்திற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் தமிழக அரசு கால தாமதம் செய்தது. கடைசியாக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கடந்த திசம்பர் மாதம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி, கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுக்களில், 50% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்திய நிலையில், அதை ஏற்காத தமிழக அரசு 5.5% ஊதிய உயர்வு வழங்குவதாக தன்னிச்சையாக முடிவெடுத்து தொழிற்சங்கங்கள் மீது திணித்திருக்கிறது. 

இந்த ஊதிய உயர்வின்படி போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் அனைவருக்கு  அதிகபட்சமாக ரூ.1350 மட்டுமே ஊதிய உயர்வு கிடைக்கும். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு   2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் ஊதிய உயர்வு அறிவிக்கப்படும் நிலையில், வெறும் ரூ.1350 மட்டுமே ஊதிய உயர்வு வழங்குவது அநியாயத்தின் உச்சமாகும். இது கண்டிக்கத்தக்கதாகும்.

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் இடையே இது வரை 11 முறை ஊதிய உயர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட 11-ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் போது 14% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. அதற்கு முன்பும் தொழிலாளர்கள் மன நிறைவடையும் அளவுக்கு  ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை விலைவாசி சுமார் 60% அதிகரித்துள்ள நிலையில், கடந்த முறை வழங்கப்பட்டதில் பாதிக்கும் குறைவாக 5.5% ஊதிய உயர்வு அளிப்பது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய துரோகம் ஆகும். அ.தி.மு.க. அரசின் இந்த துரோகத்தை ஒரு போதும் ஏற்க முடியாது.

தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை, பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட 42 சங்கங்களில் பாட்டாளி தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்து விட்டன. ஆனால், இதைப்பற்றிக் கவலைப்படாத அரசு, தங்களுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட ஆளில்லாத 25 தொழிற்சங்கங்களுடன் புதிய ஊதிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. அதேபோல், ஓய்வூதியம் தொடர்பான தொழிலாளர்களின் கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை.

 இதைக் கண்டித்து தொழிலாளர்கள் நாளை வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தால் சித்திரைத் திருநாளான நாளை அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.  எனவே, தமிழக அரசு சர்வாதிகாரப் போக்கையும், தொழிலாளர் விரோதப் போக்கையும் கைவிட்டு, ஊதிய உயர்வு தொடர்பான தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். ’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: