Saturday, May 31, 2014

அரியலூர் சாலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அளிக்க வேண்டும்: ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் அருகே நேற்று மாலை பேரூந்தும், சரக்குந்தும் மோதிக்கொண்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 10 பேர் அரியலூர் தனியார் மருத்துவமனையிலும் மருத்துவம் பெற்று வருகின்றனர். விபத்தில் 13 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் காயமடைந்த அனைவரும் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 இந்தக் கொடிய விபத்துக்கு சரக்குந்து ஓட்டுனரின் அலட்சியம் தான் காரணம் என கூறப்படுகிறது. ஓர் ஓட்டுனரின் தவறால் 13 பேரின் குடும்பங்கள் தீராத துயரத்துக்கு ஆளாகியிருக்கின்றன.

காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் 18 பேரில் பலரின் நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர  மீதமுள்ளோரில் பலர் உடல் உறுப்புகளை இழந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சிறப்பான மருத்துவம் அளித்து, விரைவாக நலம் பெறச் செய்ய வேண்டும் என தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மருத்துவமனைகளின் மருத்துவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அரியலூர் சாலை விபத்தில் உயிரிழந்த 13 பேரில் ஒரு குழந்தை உள்ளிட்ட 8 பேர் செந்துறை பகுதியையும், 5 பேர் அரியலூர் பகுதியையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவருமே ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
சுரேஷ், ஆனந்தி, ஜெயந்தி, சித்ரா ஆகிய 4 பேரும் பி.எட் தேர்வு எழுதிவிட்டு திரும்பும் வழியிலும், கவிதா என்பவர் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு திரும்பும்போதும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனால் இவர்களை நம்பியிருந்த குடும்பங்களின் கனவுகள் ஒரே நிமிடத்தில் சிதைந்து விட்டன.
இதைக் கருத்தில் கொண்டு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அவரது தகுதிக்கேற்ற அரசு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதேபோல் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான மருத்துவம் அளிப்பதுடன் தலா ரூ 3 லட்சம் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: