Tuesday, March 11, 2014

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள்: கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு  அமைக்கப்பட்டிருந்த 10 குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். பல இடங்களில் எந்திரங்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவும் மாவட்டங்களில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்த மாவட்டங்களில் வாழும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதை அறிந்த அப்பகுதி மக்களும், பா.ம.க. நிர்வாகிகளும் உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம் கொண்டு வந்து, அனுமதி பெற்று 10 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை அமைத்தனர். இதன்மூலம் இந்த இரு மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையான மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், அவற்றை தமிழக அரசு அதிகாரிகள் கடந்த இரு நாட்களுக்கு முன் அவசர, அவசரமாக அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால், இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள மக்கள் குடிப்பதற்கு தூய்மையான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த குடிநீர் எந்திரங்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அவற்றை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். உண்மையில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் அமைக்கப்பட்டதில் எந்தவிதமான விதிமீறல்களும் இல்லை.10 இடங்களிலுமே தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே குடிநீர் எந்திரங்கள் அமைக்கப்பட்டு விட்டன. தேர்தல் அட்டவணை மார்ச் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே  ஆரணியில் பிப்ரவரி 9 ஆம் தேதியும், கண்ணமங்கலத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதியும், போளூரில் 17 ஆம் தேதியும், செஞ்சியில் 20 ஆம் தேதியும், மேல்மலையனூர் மற்றும் ரெட்டணையில் பிப்ரவரி 25 ஆம் தேதியும், மயிலத்தில் 27 ஆம் தேதியும், செய்யாறில் பிப்ரவரி 28 ஆம் தேதியும் தெள்ளாறில் மார்ச் ஒன்றாம் தேதியும்,  வெள்ளிமேடு பேட்டையில் மார்ச் 2 ஆம் தேதியும் குடிநீர் எந்திரங்கள் திறக்கப்பட்டன. குடிநீர் எந்திரங்கள் திறக்கப்பட்டது குறித்து ஊடகங்களில் வெளிவந்த செய்திகளே இதற்கு சாட்சியாகும்.
அதுமட்டுமின்றி, மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தான் இவை அமைக்கப்பட்டனவே தவிர, வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல. பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும்,  அவர்களின் விருப்பம் மற்றும் உணர்வுகளை மதிக்கும் வகையிலும் இது போன்ற பல்வேறு உதவிகளை அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கின்றன.
பள்ளிகள் இல்லாத ஊர்களில் பள்ளிகளை அமைத்து நடத்துவது, அரசுப் போட்டித்தேர்வுகள் முதல்  இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகள் வரை அனைத்துத் தேர்வுகளுக்குமான தனிப் பயிற்சி வகுப்புகளை நடத்துவது, மருத்துவம் மற்றும் கல்வித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வசதியில்லாத மக்களுக்கு அறக்கட்டளைகள் மூலம் மாதம் தோறும் நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட உதவிகளை அரசியல் கட்சியினரும், தனி மனிதர்களும் செய்து  வருகின்றனர். இத்தகைய உதவிகளை செய்பவர்களில் பலர் தேர்தல்களில் போட்டியிட்டு பல்வேறு உயர் பதவிகளையும் அடைந்துள்ளனர். இன்னும் சில கட்சித் தலைவர்கள் மக்களால் வணங்கப்படும் தலைவர்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து தங்கக் கவசம் சாத்துவது உள்ளிட்ட சடங்குகளையும் மேற்கொள்கின்றனர். இவற்றுக்கெல்லாம் நோக்கம் மக்களின் உணர்வுகளையும், தேவைகளையும் நிறைவேற்றுவது தானே தவிர, அரசியல் இலாபம் தேடுவது அல்ல.
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்வது தொடரும் நிலையில், அடிப்படைத் தேவையான  குடிநீர் வழங்க அமைக்கப்பட்ட எந்திரங்களை ஆளுங்கட்சி  தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் அகற்றியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். தேர்தல் அறிவிப்பு வெளியானதும் குடிநீர் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் வரையப்பட்டிருந்த தலைவர்களின் படங்கள் மறைக்கப்பட்டுவிட்டன. குடிநீர் எந்திரங்களுக்கு  தேர்தல் ஆணையமும்  எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஆனால், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை அதிகாரிகள் மூலம் ஆளுங்கட்சியினர் அகற்ற வைத்திருப்பதைப் பார்க்கும் போது, மக்கள் அவதிப்பட்டாலும் பரவாயில்லை; மற்றவர்களுக்கு பெயர் கிடைத்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் செயல்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டால், தேர்தல்கள் நியாயமாக நடைபெற வாய்ப்பில்லாமல் போய்விடும். எனவே, தேர்தல் விதிகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி, மக்களுக்கு  பாதிப்பு ஏற்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது. அகற்றப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை மீண்டும் அதே இடங்களில் அமைக்க ஆணையிடுவதுடன், இதற்கு காரணமான அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: