Saturday, November 23, 2013

ஏன் மின்வெட்டு அதிகரித்திருக்கிறது : ராமதாஸ் விளக்கம்



 பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,  ’’தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு மின்வெட்டு மோசமான கட்டத்தை அடைந்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மின்னுற்பத்திப் பிரிவுகளில் தொழில்நுட்பக் குறைபாடு காரணமாக உற்பத்தி முடங்கி விட்டதால்  தமிழகத்தின் பெரும் பகுதி  இருளில் மூழ்கியுள்ளது.
சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப் படுகிறது. எப்போது மின்சாரம் வரும், எப்போது மின்சாரம் போகும் என்பதே தெரியாததால் மக்கள் தங்களின் அன்றாட பணிகளைக் கூட திட்டமிட்டு முடிக்க இயலாத நிலை காணப்படுகிறது.
மோசமான மின்வெட்டால் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழிற்சாலைகள் பெரும்பாலும் பகல் நேரத்தில் தான் செயல்படும். ஆனால் 12 மணி நேர பகல் வேளையில் 8 மணி நேரம் வரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதால் இந்தத் தொழிற்சாலைகளில் உற்பத்தி அடியோடு முடங்கி விட்டது.


இவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையிழந்து வாடுகின்றனர். இரவு நேரங்களிலும் மின்வெட்டு நீடிப்பதால் குழந்தைகள் உறங்க முடியாமல் தவிக்கின்றன; கொசுத்தொல்லை அதிகரித்து டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களும் வேகமாக பரவி வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மொத்தத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் மின்வெட்டால் முடங்கிக் கிடக்கிறது.
வழக்கமாக கோடைக் காலத்தில் தான் ஓரளவு மின்வெட்டு ஏற்படும். ஆனால், தற்போது மழைக் காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 7 மின்னுற்பத்தி நிலையங்களைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மின்னுற்பத்திப் பிரிவுகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கிவிட்டதால் தான் மின்வெட்டு அதிகரித்திருக்கிறது.
சென்னையில் நேற்று நடந்த அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் தமிழகம் முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.


ஆனால், மின்வெட்டை கட்டுப்படுத்த முடியாததன் மூலம் தமிழகத்தை பின்னோக்கி அழைத்துச் செல் கிறார். எனவே, மின்வெட்டைப் போக்க உறுதியான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுக்க வேண்டும்’’ என்று கோரியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: