Wednesday, September 7, 2011

திருச்சி இடைத் தேர்தலில் நாங்களும் போட்டியிட மாட்டோம், யாரையும் ஆதரிக்கவும் மாட்டோம்- ராமதாஸ்

டலூர்: திருச்சி இடைத் தேர்தலில் பாமக போட்டியிடாது. யாருக்கும் ஆதரவும் கொடுக்காது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கடலூர் வந்த டாக்டர் ராமதாஸ் அங்கு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

திருச்சி மேற்கு சட்டசபை இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது. அத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்காது. புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை பா.ம.க. ஆதரிக்கும்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடும். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு திராவிடக் கட்சிகளுடனும் இனி கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் வந்தால் பரிசீலிப்போம் என்றார் அவர்.

முன்னதாக திருமண நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில், வன்னியர் சமுதாயம் குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

வன்னியர்கள் அதிகம் நிறைந்த பழைய தென்னார்க்காடு, வடஆர்க்காடு மாவட்டங்களில் 1952ல் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார், மாணிக்கவேல் நாயக்கர் ஆகியோர் தலைமையில் தனித்துப் போட்டியிட்டு, 26 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் 7 எம்.பி. தொகுதிகளையும் பெற்றனர் வன்னியர் சமூகத்தினர்.

ஆனால் அதன் பிறகு 1989ல் பா.ம.க. தொடங்கப்பட்டு பல்வேறு கட்சிகளுடனும் கூட்டணி சேர்ந்து இன்று கிடைத்து இருக்கும் இடங்கள் 3 சட்டப் பேரவைத் தொகுதிகள்தான். இடையில் என்ன நிகழ்ந்தது? அந்த உணர்வு எங்கே போயிற்று?

தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் வன்னியர்களுக்கு ஆளும் உரிமை கிடைத்தும் ஆள விடவில்லை. வாழவும் விடவில்லை. சிலர் அமைச்சர் பதவிக்கும் சிலர் எம்.எல்.ஏ. பதவிக்கும் ஓடினர்.

நான் என்றும் கட்சித் தலைவர் உள்ளிட்ட எந்த பதவிக்கும் வரமாட்டேன். நான் என்றும் பா.ம.க.வின் நிறுவனர்தான். நாம் சென்ற பாதை தவறு என்று மாற்றிக் கொண்டோம். 1952ல் இருந்த நிலை இப்போது உள்ளது. இனி எந்தக் கட்சியுடனும் கூட்டு இல்லை. தேவையும் இல்லை.

இனி வன்னியர்கள் வேறு அரசியல் கட்சிகளுக்குச் செல்லத் தேவையில்லை. அவர்களுக்கு எல்லா பதவிகளும் காத்திருக்கிறது. வன்னியர் கிராமங்களில் இனி பா.ம.க.வும் வன்னியர் சங்கமும்தான் இருக்க வேண்டும். வேறு கட்சிகளுக்கு அங்கு இடமில்லை. வேறு கட்சிக் கொடிகள் பறக்கத் தேவையில்லை. வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. தவிர வேறு எந்தக் கட்சிக் கொடியும் உங்களை உயர்த்தாது.

எந்த இளைஞரைக் கேட்டாலும், நான் பா.ம.க., நான் வன்னியர் சங்கம் என்று சொல்லும் நிலை வரவேண்டும் என்றார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: