Sunday, November 30, 2014

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் பற்றி விசாரணை தேவை: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் ரூ.27,147 கோடிக்கு மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம்  திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்காக மின்சார வாரியம் நிர்ணயித்துள்ள விலை பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆண்டுக்கு ரூ.9 ஆயிரம் கோடி முதல் ரூ.12 ஆயிரம் கோடி வரை இழப்பை சந்தித்து வருகிறது. மின்வாரியத்தின் நிர்வாகத் திறமையின்மையும், மின்சாரம் கொள்முதல் செய்வதில் நடக்கும் ஊழலும் தான் இதற்குக் காரணம் என்று தொடர்ந்து குற்றஞ்சாற்றி வருகிறேன். 

ஆனால், தமிழக ஆட்சியாளர்களோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி மின்வாரியத்திற்கு இழப்பை ஏற்படுத்துகின்றனர்; இழப்பு அதிகரிக்கும் போதெல்லாம் மின்கட்டணத்தை பெருமளவில் உயர்த்தி மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அடக்கவிலை அலகு (யூனிட்) ஒன்றுக்கு ரூ.3.00 க்கும் குறைவு தான். நெய்வேலி அனல் மின்நிலையம் உள்ளிட்ட மத்திய அரசு மின்நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் விலையும் இதே அளவில் தான் உள்ளது. 

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை அலகு ஒன்றுக்கு ரூ.2.00க்கும் குறைவு தான். தமிழகத்தில் மின்னுற்பத்தி குறைவாக உள்ள நிலையில் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவது தவிர்க்க முடியாதது. எனினும், தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யும் போது, அதற்காக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிகளை மின்வாரியம் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

ஆனால், சாமல்பட்டி மின் நிறுவனம், மதுரை மின் நிறுவனம், பிள்ளைபெருமாள்நல்லூர் மின்நிறுவனம், ஜி.எம்.ஆர். மின் நிறுவனம் ஆகிய 4 தனியார் நிறுவனங்களிடமிருந்து  ஓர் அலகு ரூ.15.14 என்ற விலையில் நடப்பாண்டில் 79 கோடி அலகு மின்சாரத்தை வாங்க மின்சார வாரியம் தன்னிச்சையாக முடிவு செய்திருக்கிறது. மத்திய மின்நிலையங்களில் இருந்து சராசரியாக ஓர் அலகு ரூ.3.00 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. 

வேறு சில தனியார் நிறுவனங்களிடமிருந்து ஓர் அலகு ரூ.4.26 முதல் ரூ.5.14 வரையிலான விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களிடமிருந்து இவ்வளவு அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டியதன் தேவை என்ன? என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கும்போது ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து அனுமதி  பெற வேண்டும்; ஓர் அலகு மின்சாரத்திற்கு ரூ.5.50க்கும் மேல் விலை தரக்கூடாது என்பது ஒழுங்கு முறை ஆணையத்தின் விதியாகும். இந்த விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு மிக அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசு மின்சாரத்தை வாங்கிக் கொண்டிருக்கிறது. 
இந்த 4 தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து வாங்கவுள்ள 79 கோடி அலகு மின்சாரத்தை மத்திய மின் நிலையங்களிடமிருந்து வாங்கினால் ரூ. 237 கோடி மட்டுமே செலவாகும்; மற்ற தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து அதிகபட்ச விலை கொடுத்து வாங்கினாலும் ரூ.406 கோடி மட்டுமே செலவாகும். 

ஆனால், 4 தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ.1205 கோடி கொடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்குகிறது. இதனால் மின்வாரியத்திற்கு கண்ணுக்குத் தெரிந்து ரூ.800 கோடி முதல் ரூ.1000கோடி வரை இழப்பு ஏற்படும். 

தேவையே இல்லாமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து இவ்வளவு அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய அவசியம் என்ன? இந்த மின்சாரக் கொள்முதலின் பின்னணியில் பயனடையப் போகிறவர்கள் யார், யார்? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மொத்த வருமானத்தில் 55% வெளியிலிருந்து மின்சாரத்தை  வாங்குவதற்கே செலவிடப்படுகிறது. இதேநிலை நீடித்தால் மின்வாரியத்தின் இழப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்குமே தவிர குறையாது. 

தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்யும் திராவிடக் கட்சிகள் மின் தேவையை முன்கூட்டியே கணக்கிட்டு அதற்கேற்றவாறு மின்திட்டங்களை நிறைவேற்றியிருந்தால், மொத்த வருவாயில் பெரும் பகுதியை வெளியிலிருந்து மின்சாரம் வாங்குவதற்காக செலவிடும் நிலையை தவிர்த்திருந்திருக்கலாம். 

ஆனால், தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி அதன் மூலம் லாபம் அடைவதில் காட்டிய அக்கறையை மின்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதில் காட்டவில்லை என்பது தான் தமிழகத்தின் சாபக்கேடு ஆகும். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கடந்த 43 மாதங்களில் ஒரு மெகாவாட் அளவுக்கான மின்திட்டங்கள் கூட உருவாக்கி செயல்படுத்தப்படவில்லை என்பது தான் அதிர்ச்சியளிக்கும் கசப்பான உண்மை ஆகும். 

எனவே, வீண் பெருமைகளை பேசுவதை விடுத்து, மின்திட்டங்களைச் செயல்படுத்தி தமிழ்நாட்டை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

Saturday, November 29, 2014

கர்நாடகத்தின் வழியில் தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! ராமதாஸ் கோரிக்கை!


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கர்நாடகத்தில் அடுத்த மாத இறுதியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும் என்று அம்மாநில சமூக நலத் துறை அமைச்சர் எச். ஆஞ்சநேயா தெரிவித்திருக்கிறார். சுதந்திர இந்தியாவின் முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி சமூகநீதிப் புரட்சியை மேற்கொள்ளும் கர்நாடக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றதில் இருந்தே அம்மாநிலத்தில் முழுமையான சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த கர்நாடக அமைச்சரவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே அனுமதி அளித்துவிட்ட நிலையில், நடப்பாண்டின் தொடக்கத்திலேயே இந்தக் கணக்கெடுப்பு தொடங்குவதாக இருந்தது. 

மக்களவைத் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த அப்பணிகள் அடுத்த மாதம் தொடங்கி இரு மாதங்களில் நிறைவடையும் என்று கர்நாடக சமூக நலத் துறை அமைச்சர் கூறியுள்ளார். ரூ.117 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இந்தக் கணக்கெடுப்பில் 1.25 லட்சம் அரசு ஊழியர்களும், ஓய்வு பெற்ற அதிகாரிகளும் பங்கேற்பர் என்றும் அமைச்சர் ஆஞ்சநேயா தெரிவித்துள்ளார். 

இப்பணி  நிறைவடைந்த பின்னர் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் பிராமணர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் கர்நாடகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் மட்டுமே முழுமையான சமூகநீதியை ஏற்படுத்த முடியும் என்று தந்தைப் பெரியார் கூறினார். 

சமூகநீதியின் தொட்டிலான தமிழ்நாட்டில் இத்தகைய கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பகிர்ந்தளிக்க வேண்டும் என 30 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறேன். 

ஆனால், பெரியாரின் வழிவந்தவர்களாக கூறிக் கொள்ளும் திராவிட ஆட்சியாளர்கள் இதற்காக துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டை நிர்ணயிக்கும்படி 2010ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. 

அதனடிப்படையில் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தக் கோரி எனது தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 13.10.2010 அன்று 27 சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த 40&க்கும் மேற்பட்ட தலைவர்களுடன் அப்போதைய முதலமைச்சர் கலைஞரை சந்தித்து சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும்படி வலியுறுத்தினேன். கலைஞரும் அக்கோரிக்கை குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தலைவருடன் பேசி நல்ல முடிவை அறிவிப்பதாக கூறினார். ஆனால் அதன்பின் 7 மாதங்கள் அவர் பதவியிலிருந்த போதிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும்படி கோரிக்கை வைக்கும்போதெல்லாம் அளவுக்கு அதிகமான சலுகையை கேட்பதாக ஆட்சியாளர்களும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தகுதியை பின்னுக்கு தள்ளும் செயல் என்று தங்களை முற்போக்குவாதிகளாக காட்டிக் கொள்ளும் சிலரும் கருதி இதற்கு எதிரான விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் தேவை என்பது பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையா அளித்துள்ள விளக்கமே இவர்களுக்கு சரியான பதிலாக இருக்கும். ‘‘ஒவ்வொரு சமூகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சி நிலையை விடுங்கள்... ஒவ்வொரு சமூகத்திலும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரமே அரசிடம் இல்லை. சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதன் மூலமாக மட்டுமே ஒவ்வொரு சமூகத்திலும் எவ்வளவு பேர் உள்ளனர்; அவர்களின் வளர்ச்சி நிலை என்ன? அவர்களுக்காக செயல்படுத்தப்பட்ட நலத் திட்டங்கள் எந்த அளவுக்கு பயன் அளித்துள்ளன என்பதை அறியவும், இதற்குப் பிறகும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை வகுக்கவும் முடியும்’’ என்பதே சித்தராமையாவின் பதில் ஆகும்.

கர்நாடகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்காக அம்மாநில அரசு கூறியுள்ள காரணங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கும் முழுமையாக பொருந்தும். அதுமட்டுமின்றி, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது என்று தான் அண்மையில் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறதே தவிர, சாதிவாரிக் கணக்கெடுப்பே தேவையில்லை என்று கூறவில்லை. எனவே சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த சட்டப்பூர்வமாக எந்தத் தடையுமில்லை.
ரூ.117 கோடி செலவில், இரு மாத அவகாசத்தில் கர்நாடகத்தில் நடத்தப்படவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பை, அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு தமிழகத்தில் இன்னும் குறைந்த செலவில், குறைந்த கால அவகாசத்தில் நடத்த முடியும். எனவே, முழுமையான சமூகநீதியை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்திலும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த அரசு முன்வர வேண்டும்.

Friday, November 28, 2014

கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கக் கூடாது: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டின் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் நோக்குடன் கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளுக்கு நடப்பு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மனித வள மேம்பாட்டுக்கு தடை போடும் இந்நடவடிக்கை வருத்தமளிக்கிறது.

நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கையில் ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.80,043 கோடியும், கல்வித்துறைக்கு ரூ.77,307 கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ.30,645 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதிஒதுக்கீடுகள் மிகவும் குறைவானவை என்று அப்போதே குற்றச்சாற்றுகள் எழுந்தன. இந்த நிலையில் ஊரக வளர்ச்சித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் சுமார் ரூ.20,000 கோடியும், கல்வித்துறைக்கு ரூ.11,000 கோடியும், சுகாதாரத்துறைக்கு சுமார் ரூ.7,000 கோடியும் குறைக்கப்பட இருப்பதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் சமூகத் துறைகள் கடுமையாக பாதிக்கப்படும்.

2013&14 ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சித்துறைக்கு மொத்தம் ரூ.80,194 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டைவிட 46% அதிகம் ஆகும். ஆனால், நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, கடந்த ஆண்டைவிட சுமார் ரூ.150 கோடி குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மேலும் ரூ.20,000 கோடி குறைக்கப்பட்டால் கிராமப்புற வளர்ச்சி அடியோடு பாதிக்கப்படும். இதேபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியும் ரூ.33,350 கோடியிலிருந்து சுமார் ரூ.9,000 கோடி குறைக்கப்படவுள்ளது. ஏற்கனவே ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிதியும் குறைக்கப்பட்டால் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு குறைந்து வறுமையும், தற்கொலைகளும் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 6 விழுக்காட்டை கல்வித்துறைக்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது தான் கோத்தாரி குழுவின் பரிந்துரை ஆகும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை என்பதுடன், கோத்தாரி குழு அமைக்கப்பட்டதன் 50 ஆண்டு கொண்டாடப்படும் நிலையில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை குறைப்பது சரியா? என மத்திய அரசு சிந்திக்க வேண்டும். 12ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கான இலக்குகளை நிர்ணயிப்பதற்காக, கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை வரும் 2017 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 2.5% ஆக உயர்த்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு கணிசமான அளவில் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்வதற்குப் பதிலாக  2013&14 ஆம் ஆண்டில் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.37,330 கோடி நிதி நடப்பாண்டில் ரூ. 30,645 கோடியாக குறைக்கப்பட்ட நிலையில், இப்போது மேலும்            ரூ. 7,000 கோடியை குறைத்து எதிர்மறையான திசையில் பயணிப்பது மக்கள் நல அரசுக்கு அழகல்ல.

இந்திய பொருளாதாரம் மந்தமான நிலையில் இருப்பதையும், நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருப்பதையும் மறுக்க முடியாது. திட்டமில்லா செலவுகளுக்கு ரூ. 12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சிறு பகுதியை குறைப்பதன் மூலமோ, சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலமோ நிதிப்பற்றாக்குறையை ஓரளவு குறைக்க முடியும். நிதி ஒதுக்கீட்டை குறைப்பதாக இருந்தால் அதனால் எந்த துறையும் கடுமையாக பாதிக்கப்படாத வகையில், அனைத்து துறைகளுக்கும் சீராக நிதி வெட்டு செய்யப்பட வேண்டும். அதை விடுத்து சமூகத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மட்டும் குறைப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் முக்கியம் என்பதால், அத்துறைகளின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்படாது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் உடனடியாக உதவும் என்றால், கல்வி மற்றும் சுகாதாரத்தை உள்ளடக்கிய மனித வளம் தொலைநோக்கில் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். எனவே, ஒரு சார்பான நிதி வெட்டு சரியான அணுகுமுறையல்ல. அதுமட்டுமின்றி, உட்கட்டமைப்பு வசதிகள் நகர்ப்புறங்களை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் நிலையில், சமூகத் திட்டங்கள் கிராமப்புறங்களை மையமாகக் கொண்டவை ஆகும். இத்தகைய சூழலில் சமூகத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மட்டும் குறைப்பது நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்து விடும்.

எனவே, கல்வி, சுகாதாரம், ஊரக வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கும் முடிவை கைவிட்டு, அனைத்து துறைகளும் சம அளவில் வளர்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

Saturday, November 22, 2014

அடுத்த தேர்தலிலும் ரஜினி வாய்ஸ் வேணும் - கேட்கிறார் டாக்டர் ராமதாஸ்

சென்னை: 1996-ம் ஆண்டு தேர்தலைப் போலவே 2016-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கும் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பாமக தலைமைச் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கில் நேற்று நடந்தது.
கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கட்சி நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்பு மணி ராமதாஸ், துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, எம்எல்ஏக்கள் ஜெ.குரு, கணேஷ் குமார், வழக்கறிஞர் பாலு உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:தமிழகத்தில் 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இப்போதும் அதே நிலைதான்.எனவே அன்றைக்குத் தந்தது போலவே இப்போதும் அவர் குரல் கொடுக்கவேண்டும்.பாமக கூட்டணியில் மதிமுக, காந்திய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி, ஐஜேகே, தமிழர் தேசிய முன்னணி, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய 8 கட்சிகள் இணைய வேண்டும்.ஜெயலலிதாவின் நிலைமை யைப் பார்த்து அதிமுக விழி பிதுங்கி நிற்கிறது. 2016 தேர்தல் ஒரு குருஷேத்திரம். இதில் புதிய கீதோபதேசம் எழுத ஊடகங்கள் துணை நிற்கவேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
 

கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டுள்ளதாகவும் பாமகவின் பொதுக்குழுவின் தீர்மானம்

சென்னை: இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டாத இரு திராவிடக் கட்சிகளும், அவற்றை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு துணை போவதில் போட்டி போடுகின்றன என்று பாமக பொதுக்குழு குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமான அளவில் கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டுள்ளதாகவும் பாமகவின் பொதுக்குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விபரம்:"தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த துறைகள் என்னவென்று பட்டியலிட்டால், அவற்றில் முதலிடம் பிடிப்பவை கல்வியாகவோ, சுகாதாரமாகவோ அல்லது விவசாயமாகவோ இருக்காது. மாறாக மக்களைக் கெடுக்கும் மதுவும், சோம்பேறிகளாக்கும் இலவசக் கலாச்சாரமும் தான் பல்கி பெருகியுள்ளன.1967ஆம் ஆண்டில் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது தமிழகத்தில் தரமான கல்வியை இலவசமாக வழங்கும் அரசுப் பள்ளிகள் தான் கல்விக் கோவில்களாக நிறைந்திருந்தன; ஆனால், இன்று அரசுப் பள்ளிகள் தந்திரமாக சீரழிக்கப்பட்டு வேலைவாய்ப்பை வழங்காத கல்வியை அளிக்கும் தனியார் பள்ளிகள் தான் கல்விக் கொள்ளைக் கூடங்களாக நிறைந்திருக்கின்றன.அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவம் இலவசமாக கிடைத்த நிலை மாறி, தனியார் மருத்துவமனைகளில் லட்சங்களைக் கொட்டிக் கொடுத்தால் தான் மருத்துவம் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.8 விழுக்காட்டிற்கும் அதிகமான வளர்ச்சியை எட்டி, லாபம் தரும் தொழிலாக திகழ்ந்த வேளாண் தொழில், இப்போது மைனஸ் 12 விழுக்காடு வளர்ச்சியுடன், விவசாயிகளைத் தற்கொலைக்குத் தூண்டும் துயரமாகிவிட்டது.வேலைவாய்ப்பில் இரு திராவிடக் கட்சி ஆட்சிகளின் சாதனை வேதனை அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் சுமார் ஒரு கோடி பேர், அதாவது வேலைக்கு செல்லக்கூடிய வயதுடைய பிரிவினரில் ஐந்தில் ஒரு பங்கினர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலையில்லாமல் வாடுகின்றனர்.மொத்தத்தில், மக்களின் வளர்ச்சிக்கும், நல்வாழ்வுக்கும் அவசியமான கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய மூன்று துறைகளையும் சீரழித்தது தான் திராவிடக் கட்சி ஆட்சிகளின் சாதனை ஆகும்.இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டாத இரு திராவிடக் கட்சிகளும், அவற்றை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு துணை போவதில் போட்டி போடுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் கொள்ளையடிக்கப்பட்ட கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களின் மதிப்பு மட்டும் ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிரான ஆட்சியைத் தான் இரு திராவிடக் கட்சிகளும் நடத்திக் கொண்டிருக்கின்றன.அண்ணாவால் தொடங்கப்பட்ட கட்சியும், அண்ணாவின் பெயரால் தொடங்கப்பட்ட கட்சியும் அண்ணாவின் கொள்கைகளை அடகு வைத்துவிட்டன. மதுக்கடைகளை திறந்தால் மானியத் திட்டங்களை செயல்படுத்துவதற்குத் தேவையான பணம் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறியபோதிலும், மக்களைக் கெடுப்பதன் மூலம் கிடைக்கும் பணம் தேவையில்லை என்று மறுத்தவர் பேரறிஞர் அண்ணா. ஆனால், அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து பள்ளி மாணவர்களையும் மதுவுக்கு அடிமையாக்கி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி தான் ஆட்சியை நடத்துகின்றன.மக்கள் நலனைக் காப்பதிலும், புரட்சிகரமான திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதிலும், தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதிலும் போட்டிபோட வேண்டிய கட்சிகள், ஊழல் செய்வதிலும், இலவசத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் தான் போட்டிபோடுகின்றன.ஒரு கட்சியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை இன்னொரு கட்சி ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்வது எழுதப்படாத சட்டமாகிவிட்டது.இந்தியா விடுதலை அடைந்தவுடன், ‘‘நாட்டிற்கு காங்கிரஸ் கட்சியின் சேவை இனியும் தேவையில்லை; கட்சியைக் கலைத்துவிடலாம்'' என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார். அதேபோல், பேரறிஞர் அண்ணா இப்போது உயிருடன் இருந்தால்,‘‘ இரு திராவிடக் கட்சிகளும் மாற்றி மாற்றி ஆட்சி செய்ததன் மூலம் தமிழ்நாட்டைக் கெடுத்தது போதும்; இரு கட்சிகளையும் கலைத்துவிடலாம்'' என்று தான் கூறியிருப்பார். அந்த அளவுக்கு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சமூக, பொருளாதார, கலாச்சாரச் சீரழிவுப் பாதையில் தமிழகம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.1967-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா, ‘‘திராவிட இயக்கத்தின் முதல் பாகத்தை நான் எழுதிவிட்டேன், இனி வரும் 50 ஆண்டுகளுக்கு திராவிட இயக்கங்களைத் தவிர வேறு இயங்கங்கள் இந்த மண்ணை ஆளமுடியாது'' என்று சொன்னார்.திராவிட இயக்கத்தின் முதல் பாகத்தை அண்ணா எழுதிய நிலையில், அதன் கடைசி பாகத்தை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் எழுதிக் கொண்டிருக்கின்றன. அண்ணா கூறிய 50 ஆண்டுகள் 2016 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், திராவிடக் கட்சிகளின் ஆட்சியும் முடிவுக்கு வருவது உறுதியாகிவிட்டது.திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் சலித்துப் போயிருக்கும் மக்கள், தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படாதா? என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால், மக்கள் விரும்பும் மாற்றத்தை தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சியாலும் வழங்க முடியவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியும் மக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல் தவறு செய்து விட்டது.இத்தகைய சூழலில், தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டி மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துவதை காலம் இட்ட கட்டளையாக பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. இதற்காக மக்கள் நலனிலும், தமிழகத்தின் வளர்ச்சியிலும் அக்கறைக் கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய அணி ஒன்றை உருவாக்க பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு தீர்மானிக்கிறது.மதுக்கடைகளை மூடி மதுவில்லாத சமுதாயத்தையும், நிம்மதியான குடும்பங்களையும் உருவாக்குதல், அரசின் அனைத்துச் செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துதல், ஊழலை அடியோடு ஒழித்து நேர்மையான நிர்வாகத்தை வழங்குதல் ஆகியவற்றை பா.ம.க. தலைமையிலான அணி செய்து முடிக்கும் என்பதை பிரகடனமாகவே இப்பொதுக்குழு அறிவிக்கிறது.

Thursday, November 20, 2014

பாமக தலைமையில் புதிய அணி உருவெடுக்கும்


சென்னை: அ.தி.மு.க.வை இனி ஊ.தி.மு.க. என்று அழைக்கவேண்டும் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ். 2016ல் பா.ம.க. ஆட்சிதான் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ராமதாஸ், அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு மாற்றாக பாமக தலைமையில் புதிய அணி உருவெடுக்கும் என தெரிவித்தார்.ஊழல் என்ற 3 எழுத்து தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறது. எங்கு பார்த்தாலும் ஊழல். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார். அவர் மீது இருந்த பல்வேறு வழக்குகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விசாரணையின்போதே கைவிடப்பட்டு இருக்கிறது. சில வழக்குகளில் மேல் முறையீட்டில் அவருக்கு விடுதலை கிடைத்து இருக்கிறது.மணல் கொள்ளையில்அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டி போட்டு ஊழல் செய்து இருக்கிறது. கட்டிடம் கட்டப்படுகிறது என்றால், சி.எம்.டி.ஏ.க்கு சதுர அடிக்கு ரூ.50 வழங்கப்பட வேண்டும்.பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகிய 2 துறைகள் தான் ஊழலின் ஊற்று. சத்துணவு அமைப்பாளர் பொறுப்புக்கு இரண்டரை லட்சம் ரூபாய், துணைவேந்தர் பதவிக்கு பல கோடி என்று வரையறை வைத்து கொள்ளையடிக்கிறார்கள்.ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ரூ.8 ஆயிரம் கோடி ஊழல் செய்கிறார்கள்.அ.தி.மு.க.விற்கு நாங்கள் ஊ.தி.மு.க. என்று பெயர் சூட்டுகிறோம்.அதாவது, ஊழல் தி.மு.க. அ.தி.மு.க.வை குறை சொல்வதால் தி.மு.க.வுடன் கூட்டணியா? என்று கேட்பார்கள். இந்தியாவிலேயே ஊழலுக்கு என்று தனி விசாரணை கமிஷன் அமைத்தது தி.மு.க.வுக்கு மட்டும் தான்.அதனால், இந்த இரண்டு ஊழல் கட்சிகளுமே நாம் தள்ளி வைக்க வேண்டும். அதற்கான நேரம் நெருங்கி வந்திருக்கிறது. 2016ல் பா.ம.க. ஆட்சி அமையும். இதை நம்மை தவிர வேறு யார் சொன்னாலும் அது வெற்று கோஷமாக தான் இருக்கும். அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்" என்றார்.இந்த கூட்டத்தில் பேசிய செயற்குழு உறுப்பினர்களும், தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டவர்களும் அன்புமணி ராமதாசை பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளராக அறிவித்து 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும், பா.ம.க. தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இன்று, பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
 

அரசியலுக்கு வர ரஜினிகாந்துக்கு உரிமை உள்ளது!- டாக்டர் ராமதாஸ்

கோவை: இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வர ரஜினிகாந்துக்கு உரிமை உள்ளது என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பூரண மதுவிலக்கு, நீராதார திட்டங்களை போர்க்கால அடிப்படையில் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் கொங்குநாடு ஜனநாயக கட்சி நடத்திய உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்த அவரிடம், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.அதற்கு பதிலளித்த அவர், "இந்தியாவில் யார் வேண்டுமானலும் அரசியலுக்கு ரலாம். அரசியலுக்கு வர ரஜினிக்கு முழு உரிமை உள்ளது.. அவர் வருவதற்கு முன்பே விமர்சனங்கள் தேவையற்றது," என்றார்.மேலும் அவர் கூறுகையில், "2016 ல் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமையும். அப்போது ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாத நிலை வரும்," என்றார்.
 

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: