Saturday, May 31, 2014

அரியலூர் சாலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அளிக்க வேண்டும்: ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் அருகே நேற்று மாலை பேரூந்தும், சரக்குந்தும் மோதிக்கொண்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 10 பேர் அரியலூர் தனியார் மருத்துவமனையிலும் மருத்துவம் பெற்று வருகின்றனர். விபத்தில் 13 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் காயமடைந்த அனைவரும் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 இந்தக் கொடிய விபத்துக்கு சரக்குந்து ஓட்டுனரின் அலட்சியம் தான் காரணம் என கூறப்படுகிறது. ஓர் ஓட்டுனரின் தவறால் 13 பேரின் குடும்பங்கள் தீராத துயரத்துக்கு ஆளாகியிருக்கின்றன.

காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் 18 பேரில் பலரின் நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர  மீதமுள்ளோரில் பலர் உடல் உறுப்புகளை இழந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சிறப்பான மருத்துவம் அளித்து, விரைவாக நலம் பெறச் செய்ய வேண்டும் என தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மருத்துவமனைகளின் மருத்துவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அரியலூர் சாலை விபத்தில் உயிரிழந்த 13 பேரில் ஒரு குழந்தை உள்ளிட்ட 8 பேர் செந்துறை பகுதியையும், 5 பேர் அரியலூர் பகுதியையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவருமே ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
சுரேஷ், ஆனந்தி, ஜெயந்தி, சித்ரா ஆகிய 4 பேரும் பி.எட் தேர்வு எழுதிவிட்டு திரும்பும் வழியிலும், கவிதா என்பவர் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு திரும்பும்போதும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனால் இவர்களை நம்பியிருந்த குடும்பங்களின் கனவுகள் ஒரே நிமிடத்தில் சிதைந்து விட்டன.
இதைக் கருத்தில் கொண்டு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அவரது தகுதிக்கேற்ற அரசு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதேபோல் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான மருத்துவம் அளிப்பதுடன் தலா ரூ 3 லட்சம் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மதுக் குடிப்பதால் ஆண்டுக்கு 33 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு: உடனடித் தேவை மதுவிலக்கு: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுவால் ஏற்படும் தீமைகள் பற்றி  உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. மதுக் குடிப்பதால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 33 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள் என்பது தான் அந்த அதிர்ச்சி தரும் செய்தியாகும்.
‘‘ஆல்கஹால் மற்றும் சுகாதார நிலைமை குறித்த உலக அறிக்கை &2014’’ என்ற தலைப்பில் உலக சுகாதார நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி,  மது குடிப்பதால் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருவர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மதுவால் ஏற்படும் பாதிப்புகள் கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்ததைவிட இப்போது பெருமளவில் அதிகரித்துள்ளது. அப்போது மதுவால் ஆண்டுக்கு 25 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில் இப்போது அந்த எண்ணிக்கை   33 லட்சமாக உயர்ந்துள்ளது. மது குடிப்பதால் 60 வகை நோய்கள் தாக்கும் என இதுவரைக் கூறப்பட்ட நிலையில், இப்போது 200 வகை நோய்கள் தாக்கும் என்று சுகாதார நிறுவன அறிக்கை எச்சரித்துள்ளது. மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி, சிலவகை புற்றுநோய்கள் ஏற்படுவதுடன், நிமோனியா, காசநோய் போன்றவையும் எளிதில் தொற்றுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2010 ஆம் ஆண்டு நிலவரப்படி 15 வயதுக்குட்பட்ட ஆண்களில் 32.1 விழுக்காட்டினரும், பெண்களில் 10.60 விழுக்காட்டினரும் மதுவின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட  32% அதிகமாகும். அதுமட்டுமின்றி, மதுப்பழக்கம் உள்ளவர்கள் சராசரியாக ஆண்டுக்கு 41 லிட்டர் மது அருந்துகிறார்கள். பெண்களில் 10.60 விழுக்காட்டினர் மது அருந்துகிறார்கள் என்பதும், 12 வயதிலேயே சிறுவர்கள் மது அருந்தத் தொடங்கிவிடுகிறார்கள் என்பதும் கவலையளிக்கிறது. மேலைநாட்டு கலாச்சாரத்திற்கு உதாரணமாக காட்டப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைவிட இந்தியாவில் அதிக விழுக்காடு ஆண்களும், பெண்களும் மது அருந்துகின்றனர் என்பதிலிருந்தே மது அரக்கன் இந்தியர்களை எப்படி வளைத்துப் பிடித்திருகிறான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
மதுவின் தீமை அதிகரித்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாசு மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது, மதுக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்குடன் தேசிய ஆல்கஹால் கொள்கையை கொண்டு வருவதற்கான அவசியத்தை வலியுறுத்தியதுடன், அதற்கான முயற்சிகளிலும்  ஈடுபட்டார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் அதற்கான எந்த முயற்சியையும் மத்திய அரசு மேற்கொள்ள வில்லை. இப்போது அத்தகைய கொள்கையை உருவாக்கும்படி உலக சுகாதார நிறுவனமே வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலோ நிலைமை மேலும் மோசமாக உள்ளது. முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறக்கும் நடவடிக்கைகளில்  அ.தி.மு.க. அரசு ஈடுபட்டிருக்கிறது. எலைட் மதுக்கடைகள் என்ற பெயரில் மதுக்கடைகளை திறந்து வணிக வளாகங்களை மகளிர் நடமாட முடியாத பகுதியாக மாற்றிவரும் அரசு அடுத்தகட்டமாக அனைத்து மாநகராட்சிகளிலும் பீர் விற்பனைக்கென தனிக் கடைகளை திறந்து வருவது கண்டிக்கத் தக்கதாகும்.
மதுப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அடித்துள்ள எச்சரிக்கை மணிக்கு பிறகாவது மதுக்கடைகள் மூலம் வருவாய் ஈட்டும் வழக்கத்தைக் கைவிட்டு, மக்கள் நலனில் அக்கறை செலுத்த தமிழக அரசு முயல வேண்டும். குடியால் குடும்பங்கள் சீரழிவதையும், உயிர்கள் பறிபோவதையும் தடுக்க தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Sunday, May 18, 2014

முதல் முறையாக தேர்தலில் வென்ற அன்புமணி.. உச்சி மோர்ந்த ராமதாஸ்...தைலாபுரத்தில் கறிச்சோறு!!

சென்னை: முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ள பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் வெற்றி, அவரது குடும்பத்தினரை உச்சி குளிர வைத்துள்ளது. குடும்பத்தோடு அன்புமணியின் வெற்றியைக் கொண்டாடியுள்ளது டாக்டர் குடும்பம்.அன்புமணி வெற்றியைத் தொடர்ந்து கட்சியினருக்கு தைலாபுரம் தோட்டத்தில் கறிச்சோறு போட்டு விருந்தும் கொடுத்து மகிழ்வித்துள்ளனர்.டாக்டர் அன்புமணி இதற்கு முன்பு ராஜ்யசபா தேர்தலில் மட்டுமே போட்டியிட்டுள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிட்டது இதுவே முதல் முறையாகும். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அவர் தர்மபுரியில் வென்று விட்டார்.

தர்மபுரியில் மட்டும் பிரசாரம் எல்லாம் சரியாகி தொகுதிப் பங்கீடு முடிவடைந்த நிலையில் பாமக வேட்பாளர்களுக்காக அதுவரை பிராசரம் செய்து வந்த டாக்டர் ராமதாஸ், கடைசியில் தனது மகன் போட்டியிட்ட தர்மபுரியில் மட்டுமே தீவிரமாகப் பிரசாரம் செய்தார். மற்ற தொகுதிகளுக்கு அவர் போகவில்லை.

முதல் வெற்றி இத்தொகுதியில் மட்டுமே பாமக இந்தத் தேர்தலில் வென்றுள்ளது. மற்ற தொகுதிகளில் கோட்டை விட்டு விட்டது. பாமக தலைமையும் கூட மற்ற தொகுதிகளைப் பற்றிக் கவலைப்பட்டது போலத் தெரியவில்லை.
உச்சிமோர்ந்த ராமதாஸ் வெற்றிப் பெருமிதத்துடன் தனது தந்தையைச் சந்திக்க தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி வந்தபோது அவரது தந்தை ராமதாஸ் மகனை உச்சிமோர்ந்து உற்சாகத்துடன் வரவேற்றார். அவரது தாயார் மற்றும் குடும்பத்தினரும் அன்புமணிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கறிச்சோறு போட்டு விருந்து இதையடுத்து அன்புமணியின் வெற்றிக்காக உழைத்த அத்தனை பேருக்கும் தைலாபுரம் தோட்டத்திலேயே கறிச்சோறுடன் விருந்து படைக்கப்பட்டது. அனைவரும் சந்தோஷமாக விருந்தை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
 

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பணம் ஆறாக ஓடியது: தருமபுரியில் வெள்ளமாக பாய்ந்தது: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 18.05.2014 ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு 77 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். பா.ம.க. போட்டியிட்ட மற்ற தொகுதிகளின் முடிவுகள் மன நிறைவளிக்கும் வகையில் இல்லாவிட்டாலும், தருமபுரி தொகுதி முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது.
மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தின் மற்ற தொகுதிகளில் பணம் ஆறாக ஓடியது என்றால், தருமபுரியில் மட்டும் வெள்ளமாக பாய்ந்தது. மருத்துவர் அன்புமணி இராமதாசு வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதையே முக்கிய இலக்காக கொண்டு செயலாற்றிய ஆளுங்கட்சியினர்  அதற்காக எந்தளவுக்கு விதிகளை மீறி செயல்பட முடியுமோ, அந்த அளவுக்கு விதிகளை மீறினார்கள். ஓட்டுக்குப் பணம் , அரசு எந்திரத்தின் தவறான பயன்பாடு, பாட்டாளி மக்கள் கட்சியினரை பணி செய்யவிடாமல் தடுத்தது என எத்தனையோ வழிகளில் பா.ம.க.வின் வெற்றிக்கு அணை போட அ.தி.மு.க முயன்றாலும், அவை அனைத்தையும் முறியடித்து அன்புமணி இராமதாசுவை  வெற்றி பெறச் செய்த தருமபுரி தொகுதி வாக்காளர்களுக்கு எந்த வகையில் நன்றிக்கடன் செலுத்துவது என்றே தெரியவில்லை.
கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே தருமபுரி தொகுதி மக்கள் பா.ம.க.வுக்கு ஆதரவாகவே இருந்து வந்திருக்கிறார்கள். தருமபுரி மக்களையும், பா.ம.க.வையும் ஒருபோதும் பிரிக்க முடியாது என்பதும், தருமபுரி தொகுதி பா.ம.க.வின் இரும்புக் கோட்டை என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியிருக்கும் தருமபுரி மாவட்டத்தை தமிழகத்தின் முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி,  பா.ம.க மீது தருமபுரி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம்; நன்றிக்கடன் செலுத்துவோம் என்று கூறி தருமபுரி தொகுதி வாக்காளர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருஷ்ணகிரி, சிதம்பரம், ஆரணி, அரக்கோணம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய தொகுதிகளிலும் பா.ம.க.வுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், அவர்களின் நம்பிக்கையை முழுமையாக பெறும் வகையில், இனிவரும் காலங்களில் பாட்டாளி மக்கள் கட்சி பணியாற்றும் என்றும் வாக்குறுதி அளிக்கிறேன். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Saturday, May 17, 2014

மத்திய அரசில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம்-ராஜ்நாத்! அப்ப அன்புமணி அமைச்சர்!!!

டெல்லி: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் மத்திய அரசில் பங்கேற்கும் என்று அக்கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதனால் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரே எம்.பி.யான அன்புமணி ராமதாஸுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையைத் தாண்டி கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளது. இருப்பினும் பாரதிய ஜனதாவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்ட அனைத்து கூட்டணிக் கட்சிகளும் மத்திய அரசில் பங்கேற்கும். இந்த நாட்டை பாஜக வழிநடத்தி செல்ல யார் ஆதரவு அளித்தாலும் அதையும் ஏற்போம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.ராஜ்நாத் சிங்கின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகளில் தமிழகத்தில் வென்ற ஒரே கட்சியான பாமகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்று தெரிகிறது.என்.ஆர். காங்கிரஸ்?அதே நேரத்தில் புதுவையில் பாஜகவின் கூட்டணியில் இடம்பெற்றதாக சொல்லப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் என்.ஆர். காங்கிரஸும் வேட்பாளரையும் நிறுத்தியது. பாட்டாளி மக்கள் கட்சியும் வேட்பாளரை தேர்தலில் நிறுத்தியது.தற்போது பாமகவை என்.ஆர். காங்கிரஸ் வீழ்த்தியுள்ளது. இதனால் மத்திய அமைச்சரவையில் என்.ஆர்.எஸ்.காங்கிரஸுக்கு வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா என்ற புதிய குழப்பமும் உருவாகியுள்ளது.

 

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்: தேர்தல் ஆணையம் வெளியீடு



நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளை, இந்திய தேர்தல் ஆணையம்  அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

கட்சிகள் பெற்ற வாக்குகளும், அதன் சதவீதமும் (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-
அ.தி.மு.க. - 1,79,83,168 (44.3 சதவீதம்)

தி.மு.க. - 95,75,850 (23.6)

பா.ஜனதா - 22,22,090 (5.5)

தே.மு.தி.க. - 20,79,392 (5.1)

பா.ம.க. - 18,04,812 (4.4)

காங்கிரஸ் - 17,51,123 (4.3)

ம.தி.மு.க. - 14,17,535 (3.5)

சுயேச்சைகள் - 8,66,509 (2.1)

விடுதலை சிறுத்தைகள் - 6,06,110 (1.5)

புதிய தமிழகம் - 2,62,812 (0.6)

மனிதநேய மக்கள் கட்சி - 2,36,679 (0.6)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2,05,896 (0.5)

ஆம் ஆத்மி - 2,03,175 (0.5)

இந்திய கம்யூ. - 2,19,866 (0.5)

மார்க்சிஸ்ட் கம்யூ. - 2,20,614 (0.5)

பகுஜன் சமாஜ் - 1,55,964 (0.4)

நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) 5,82,062 (1.4)

Wednesday, May 14, 2014

ஈழத் தமிழ் அகதிகளை இன்டர்போல் கைது செய்ய அனுமதிக்கக் கூடாது : ராமதாஸ்



 பாமக நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கையில் சிங்கள இராணுவத்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துள்ள நிலையில், உயிர் பிழைப்பதற்காக கடந்த 5 ஆம் தேதி தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்திற்கு வந்த ஐந்து குழந்தைகள் உள்ளிட்ட 10 அகதிகளை தமிழக காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். மனித உரிமையை மீறிய இந்நட வடிக்கையையே அப்போதே கண்டித்திருந்தேன்.
இதைத்தொடர்ந்து தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்ட அகதிகளில் கதிர்வேலு தயாபரராஜா, உதயகலா ஆகிய இருவரையும் சர்வதேச காவல்துறையான இன்டர்போல் உதவியுடன் கைது செய்ய இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் இருவரும் இலங்கை யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் பண மோசடி செய்திருப்பதாகவும், அதற்காகவே அவர்களை இன்டர்போல் உதவியுடன் இலங்கை அரசு கைது செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பி வந்த அப்பாவி அகதிகளை நிரூபிக்கப்படாத புகாரின் அடிப்படையில் துரத்தி, துரத்தி கைது செய்ய சிங்கள அரசு துடிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை தடை செய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி கொடூரமான முறையில் கொன்றொழித்துவிட்டு அதற்கான சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள மறுக்கும் இராஜபக்சே, நிரூபிக்கப்படாத பொருளாதார குற்றச்சாற்றுக்காக அகதிகளாக வந்த இருவரை சர்வதேச காவல்துறையை பயன்படுத்தி கைது செய்ய முயல்வது முரண்பாட்டின் உச்சம் ஆகும். இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் தவிர மீதமுள்ள தமிழர்களையும் ஏதேனும் ஒரு வகையில் சித்திரவதை செய்வது அல்லது படுகொலை செய்வது தான் இராஜபக்சேவின் நோக்கமாகும். அதன் ஒருகட்டமாகத் தான் அகதிகளை சர்வதேச காவல்துறை மூலமாக கைது செய்ய இலங்கை முயல்கிறது.
இலங்கையின் இந்த சதிக்கு இந்தியா துணை போனால், அடுத்தகட்டமாக உரிமைகளுக்காக போராடி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்று கொடுமைகளுக்குள்ளாக்க இராஜபக்சே அரசு முயலும். 1951 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அகதிகளின் அந்தஸ்து தொடர்பான ஒப்பந்தத்தில், ‘அகதிகள் எனப்படுபவர்கள் எல்லா சூழல்களிலும் அகதிகளாகவே கருதப்படுவார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒரு நாட்டில் இன அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ ஒருவரின் உயிருக்கோ அல்லது சுதந்திரத் திற்கோ அச்சுறுத்தல் ஏற்படுமென்றால், அந்த நாட்டிற்கு எந்த காலகட்டத்திலும் அவர் தஞ்சம் புகுந்துள்ள நாட்டின் அரசு திருப்பி அனுப்பக்கூடாது என்று இந்த ஒப்பந்தத்தின் 33 ஆவது பிரிவில் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல், ஒரு நாட்டில் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து இருப்பதாக தெரிந்தால் அவரை அந்த நாட்டிற்கு அனுப்பக் கூடாது சித்திரவதைக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தத்தின் 3 ஆவது பிரிவில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழ் அகதிகள் எவரேனும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால், அவர்களை இலங்கை அரசு தலைவாழை இலை போட்டு உபசரிக்காது; கடுமையான சித்திரவதைக்குத் தான் உள்ளாக்கும் என்பது உலகமறிந்த இரகசியம் ஆகும். ஈழத்தமிழருக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு  மவுனசாட்சியாக இருக்கும் இந்திய அரசுக்கு இந்த உண்மை இன்னும் நன்றாகவே தெரிந்திருக்கும்.
எனவே, தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களை சர்வதேச காவல்துறை மூலம் நாடு கடத்த முயலும் இலங்கையின் திட்டத்திற்கு இந்தியா ஒருபோதும் துணை போகக்கூடாது. தமிழகத்திலுள்ள அகதிகளை அவர்களின் விருப்பமில்லாமல் அவர்களின் நாட்டிற்கு அனுப்ப சம்மதிக்க மாட்டோம் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்டுள்ள 10 ஈழத்தமிழ் அகதிகளையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: