பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுவால் ஏற்படும் தீமைகள் பற்றி உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. மதுக் குடிப்பதால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 33 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள் என்பது தான் அந்த அதிர்ச்சி தரும் செய்தியாகும்.
‘‘ஆல்கஹால் மற்றும் சுகாதார நிலைமை குறித்த உலக அறிக்கை &2014’’ என்ற தலைப்பில் உலக சுகாதார நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, மது குடிப்பதால் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருவர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மதுவால் ஏற்படும் பாதிப்புகள் கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்ததைவிட இப்போது பெருமளவில் அதிகரித்துள்ளது. அப்போது மதுவால் ஆண்டுக்கு 25 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில் இப்போது அந்த எண்ணிக்கை 33 லட்சமாக உயர்ந்துள்ளது. மது குடிப்பதால் 60 வகை நோய்கள் தாக்கும் என இதுவரைக் கூறப்பட்ட நிலையில், இப்போது 200 வகை நோய்கள் தாக்கும் என்று சுகாதார நிறுவன அறிக்கை எச்சரித்துள்ளது. மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி, சிலவகை புற்றுநோய்கள் ஏற்படுவதுடன், நிமோனியா, காசநோய் போன்றவையும் எளிதில் தொற்றுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2010 ஆம் ஆண்டு நிலவரப்படி 15 வயதுக்குட்பட்ட ஆண்களில் 32.1 விழுக்காட்டினரும், பெண்களில் 10.60 விழுக்காட்டினரும் மதுவின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட 32% அதிகமாகும். அதுமட்டுமின்றி, மதுப்பழக்கம் உள்ளவர்கள் சராசரியாக ஆண்டுக்கு 41 லிட்டர் மது அருந்துகிறார்கள். பெண்களில் 10.60 விழுக்காட்டினர் மது அருந்துகிறார்கள் என்பதும், 12 வயதிலேயே சிறுவர்கள் மது அருந்தத் தொடங்கிவிடுகிறார்கள் என்பதும் கவலையளிக்கிறது. மேலைநாட்டு கலாச்சாரத்திற்கு உதாரணமாக காட்டப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைவிட இந்தியாவில் அதிக விழுக்காடு ஆண்களும், பெண்களும் மது அருந்துகின்றனர் என்பதிலிருந்தே மது அரக்கன் இந்தியர்களை எப்படி வளைத்துப் பிடித்திருகிறான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
மதுவின் தீமை அதிகரித்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாசு மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது, மதுக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்குடன் தேசிய ஆல்கஹால் கொள்கையை கொண்டு வருவதற்கான அவசியத்தை வலியுறுத்தியதுடன், அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் அதற்கான எந்த முயற்சியையும் மத்திய அரசு மேற்கொள்ள வில்லை. இப்போது அத்தகைய கொள்கையை உருவாக்கும்படி உலக சுகாதார நிறுவனமே வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலோ நிலைமை மேலும் மோசமாக உள்ளது. முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறக்கும் நடவடிக்கைகளில் அ.தி.மு.க. அரசு ஈடுபட்டிருக்கிறது. எலைட் மதுக்கடைகள் என்ற பெயரில் மதுக்கடைகளை திறந்து வணிக வளாகங்களை மகளிர் நடமாட முடியாத பகுதியாக மாற்றிவரும் அரசு அடுத்தகட்டமாக அனைத்து மாநகராட்சிகளிலும் பீர் விற்பனைக்கென தனிக் கடைகளை திறந்து வருவது கண்டிக்கத் தக்கதாகும்.
மதுப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அடித்துள்ள எச்சரிக்கை மணிக்கு பிறகாவது மதுக்கடைகள் மூலம் வருவாய் ஈட்டும் வழக்கத்தைக் கைவிட்டு, மக்கள் நலனில் அக்கறை செலுத்த தமிழக அரசு முயல வேண்டும். குடியால் குடும்பங்கள் சீரழிவதையும், உயிர்கள் பறிபோவதையும் தடுக்க தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment