Friday, January 9, 2015

சர்வதேச சட்டத்தின் முன் ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும்: ராமதாஸ்

சென்னை: இலங்கையில் மக்களால் தண்டிக்கப்பட்ட ராஜபக்சே சட்டத்தின் முன் தண்டிக்கப்படவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான ராஜபக்சே இலங்கை மக்களால் தண்டிக்கப்பட்டு பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். அதைக் காட்டிலும் மன நிறைவளிக்கும் மற்றொரு விஷயம் இத்தேர்தலின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்தது தமிழர்கள் என்பது தான்.அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்ற போதிலும் சிங்களர்கள் அதிகம் வாழும் பெரும்பாலான மாவட்டங்களில் ராஜபக்சே தான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார். இதனால் ராஜபக்சே பெற்ற முன்னிலையைக் கடந்து மைத்ரிபாலா வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது வடகிழக்கு மாகாண தமிழர்களின் வாக்குகள் தான் என்பதை மறுக்க முடியாது.தமிழர்களுக்கு நன்றிமகிந்த அதிபராவதற்கு காரணமாக இருந்த தமிழர்களே இப்போது அவரை தண்டித்திருப்பது இனிமையான பழிவாங்கல் தான். இதை உணர்ந்து ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் எச்சரிக்கையுடனும், நன்றியுடனும் மைத்ரிபால சிறிசேனா நடந்து கொள்ள வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் விரும்புகின்றனர்.ரணில் விக்ரமசிங்கேஅதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டு அதிபராக்கப்பட்டுள்ள சிறீசேனாவுக்கு தனிப்பட்ட முறையில் எந்த செல்வாக்கும் இல்லை. அதுமட்டுமின்றி, ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி அடுத்த 100 நாட்களுக்குள் இவர் அதிகாரம் இல்லாத பொம்மை அதிபராகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கே அதிகாரம் கொண்ட பிரதமராகவும் மாறிவிடுவார்கள்.சர்வதேச சமுதாயத்தின் கடமைஇத்தகைய சூழலில், தமிழர்களுக்கு நீதியையும், உரிமைகளையும் பெற்றுத்தருவது இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமுதாயத்தின் கடமையாகும். இலங்கை இனப்படுகொலைக்கு காரணமான இராஜபக்சே உள்ளிட்டோரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தரவேண்டும். ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக்குழு இலங்கைக்கு சென்று விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.படைகள் வெளியேற வேண்டும்வடக்கு மாநிலத்திலிருந்து சிங்களப்படைகள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் கண்ணியமாக வாழ வகை செய்யப்பட வேண்டும். இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தனித்தமிழீழம் அமைப்பது குறித்து உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தமிழர்களின் நலன் சார்ந்த அனைத்து கோரிக்கைகளையும் இலங்கையின் புதிய நிர்வாகம் நிறைவேற்றுவதை சர்வதேச சமுதாயம் உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். says-ramadoss-218677.html

ராஜபக்சே தோத்துட்டாரு.. லட்டு எடு கொண்டாடு.. தொண்டர்களுடன் கொண்டாடிய அன்புமணி!

சென்னை: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பா.ம.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.சைதாப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு ஏ.கே.மூர்த்தி தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர்கள் கன்னியப்பன், வி.ஜே. பாண்டியன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொண்டனர்
இதேபோல் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக இளைஞர் தலைவருமான அன்புமணி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.ராஜபக்சே தோல்வியை பல்வேறு கட்சியினர் பட்டாசு வெடித்து தமிழகத்தில் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். விழுப்புரம், உளுந்தூர்ப்பேட்டையில் ஏராளமானோர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் திருக்கோவிலூரிலும் தேமுதிக, திமுக, விசி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
 

Monday, January 5, 2015

ஜெயலலிதா மீது புதிய சொத்து குவிப்பு வழக்கு: கவர்னரிடம் மனு கொடுக்க ராமதாஸ் முடிவு


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானால் நீதி கிடைக்காது என்று ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன். அவரை மாற்ற வேண்டும் என்று இப்போது தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் மனு போட்டு உள்ளார்.

அவரையும் இந்த வழக்கில் இணைத்து கொள்ளும்படியாக மனு செய்து இருக்கிறார். இந்த வழக்கு இயல்பான முடிவை எட்டுவதற்கு அன்பழகனையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானதுதான்.

ஜெயலலிதா எந்த பதவியையும் வகிக்க தகுதியில்லை என்ற நிலையில் தனது மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு என்ன தேவை? என்பதற்கு ஜெயலலிதாதான் விளக்கம் கூற வேண்டும்.

ஜெயலலிதா மீது இன்னொரு சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்து விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக விரைவில் கவர்னரை சந்தித்து மனு கொடுப்போம்.

மத்திய பா.ஜனதா ஆட்சியை விமர்சிப்பதாக கூறுகிறீர்கள். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உண்டு. எதிர்க்கட்சிகளின் கடமை தவறை சுட்டிக் காட்டுவதுதான். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் குறைகளை எடுத்துச் சொல்வோம். அதற்கு தீர்வையும் சொல்வோம்.

வருகிற சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையில் கூட்டணி உருவாக வேண்டும். எங்கள் தலைமையை யார் ஏற்றார்களோ அவர்களை ஏற்றுக் கொள்வோம்.

பா.ஜனதா தலைமையில் கூட்டணி ஏற்படும் என்பது அது அவர்களுடைய கருத்து. ஒருவேளை அவர்கள் தலைமையில் ஒரு கூட்டணி உருவாகலாம். நாங்கள் பா.ஜனதா கூட்டணியில் நீடிப்பது பற்றி விரைவில் பொதுக்குழுவை கூட்டி அறிவிப்போம்.

அன்புமணிக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்காதது பற்றி எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. குறிப்பிட்டு சொன்னால் அவர் அமைச்சர் ஆக கூடாது என்றுதான் நாங்கள் விரும்பினோம்’’கூறினார்.

Sunday, January 4, 2015

சாப்ட்வேர் நிறுவன ஆட்குறைப்பில் அரசு தலையிட்டு முடிவெடுப்பது அவசியம் - ராமதாஸ்

சென்னை: சாப்ட்வேர் நிறுவனத்தின் தொழிலாளர் குறைப்பு நடவடிக்கையை அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவருடைய அறிக்கையில், "ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதால் சுமார் 8 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்தனர். பாக்ஸ்கான் நிறுவனம் இப்போது மூடப்பட்டதால் 2 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாப்ட்வேர் நிறுவன ஆட்குறைப்பில் அரசு தலையிட்டு முடிவெடுப்பது அவசியம் - ராமதாஸ்

இப்போது சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால், அதைவிட பெரிய துரோகத்தை தொழிலாளர் வர்க்கத்திற்கு மத்திய, மாநில அரசுகள் செய்ய முடியாது.
சாப்ட்வேர் நிறுவனங்களில் இருந்து தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதை அந்த நிறுவனங்களின் உள் விவகாரம் என்று கருதி ஒதுங்கியிருக்கக்கூடாது.
ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அதை தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. எனவே, சாப்ட்வேர் நிறுவன தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படும் விவகாரத்தில் மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசுகளும் தலையிட்டு இந்த அநீதியை தடுத்து நிறுத்தவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Thursday, January 1, 2015

பணம் காய்க்கும் மரமா பொதுமக்கள்? மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!


பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று மீண்டும் உயர்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களுக்கு பேரதிர்ச்சி தரும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மத்திய அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, 

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலைக்கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியதன் மூலம் உலக சந்தையில் எப்போதெல்லாம் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததோ, அப்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு மக்கள் மீது சுமை ஏற்றப்பட்டது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்து வரும் நிலையில் அதன் பயன்களை மக்களுக்கு அளிப்பது தான் சரியானதாக இருக்கும். ஆனால், கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு இணையாக உள்நாட்டில் எரிபொருள் விலையை  மத்திய அரசு குறைக்க வில்லை. அதுமட்டுமின்றி, அவ்வப்போது கலால் வரியை உயர்த்துவதன் மூலம், கச்சா எண்ணெய் விலை சரிவின் பயன் மக்களுக்கு கிடைக்காமல் மத்திய அரசு தடுத்து வருகிறது. 

கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் நேற்று முதல் பெட்ரோல் விலை 3.22 ரூபாயும், டீசல் விலை 3.00 ரூபாயும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை குறைக்காத மத்திய அரசு இரு எரிபொருட்களின் மீதான கலால் வரியையும் தலா ரூ.2 உயர்த்தியுள்ளது. கடந்த 50 நாட்களில் கலால் வரி உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே பெட்ரோல் மீதான கலால்வரி லிட்டருக்கு 3.75 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 2.50 ரூபாயும் உயர்த்தப்பட்டது. கலால் வரி உயர்வுக்குப் பிறகும் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய்க்கும் மேல் குறைக்க முடியும் என்ற போதிலும் அதை செய்யாமல் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் குவிக்கின்றன.

கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி நிலவரப்படி உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110.42 அமெரிக்க டாலராக ( ரூ.6636) இருந்தது. நேற்றைய நிலவரப்படி அதில் பாதிக்கும் குறைவாக, அதாவது 53.53 அமெரிக்க டாலராக (ரூ.3390) குறைந்திருக்கிறது. அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.93 ஆகவும், டீசல் விலை ரூ.61.12 ஆகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை பாதியாக குறைந்து விட்டதால் பெட்ரோல் விலை ரூ.38 ஆகவும், டீசல் விலை ரூ.30 ஆகவும் குறைந்திருக்க வேண்டும். ஆனால், இரு எரிபொருட்களையுமே அவற்றின் இயல்பான விலையை விட லிட்டருக்கு ரூ.25 அதிக விலை வைத்து விற்றுக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. ரிலையன்ஸ் போன்ற தனியார் எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு இவ்வாறு செய்கிறது. இதுதான் மக்கள் நலன் விரும்பும் மத்திய அரசுக்கு அழகா?

எரிபொருட்கள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டிருப்பதன் மூலமாக மட்டும் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 68,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். மறைமுகமான விலை உயர்வுகளையும் கருத்தில் கொண்டால், மத்திய அரசு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தனியார் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 3 லட்சம் கோடி வரை கூடுதலாக லாபம் கிடைக்கும். பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, அதை செய்யாமல் ரூ. 3 லட்சம் கோடி லாபம் ஈட்ட மத்திய அரசு துடிக்கிறது. மக்களை பணம் காய்க்கும் மரமாக கருதி அவர்களிடமிருந்து பணம் பறிக்க முயல்வது சரியல்ல.

எனவே, பெட்ரோல், டீசல் மீது தேவையில்லாமல் வரிகளை சுமத்தி மக்களை வதைப்பதை தவிர்க்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை சரிவின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 25 குறைக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

திட்டக் குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக்: ஆபத்தான பாதையில் அரசு செல்லக்கூடாது: ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில்  65 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மத்திய திட்டக்குழு கலைக்கப்படுவதாகவும், அதற்கு மாற்றாக நிதி ஆயோக் எனப்படும் இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் அமைக்கப் படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. சீர்திருத்தம் என்ற பெயரில் செய்யப்படும் இந்த தொலைநோக்கற்ற மாற்றத்தால் ஏற்படும் நன்மைகளை விட பாதிப்புகள் தான் அதிகமாக இருக்கும்.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு வளர்ச்சிக்கான பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்ற வினா எழுந்தபோது, அதற்கான விடையாக 1950 ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேரு தலைமையிலான அப்போதைய அரசு  ஏற்படுத்தியது தான் திட்டக் குழு ஆகும். தொடக்கத்தில் திட்டக் குழு அதன் பணியை சிறப்பாகவே செய்து வந்தது. அதன்பின் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய திட்டக் குழுவை சீரமைக்க வேண்டிய  தேவை ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மை தான். ஆனால்,  திட்டக் குழுவையே அடியோடு கலைத்துவிட்டு புதிய அமைப்பை ஏற்படுத்துவது தேவையில்லாதது.

இதுவரை நடைமுறையில் இருந்த மத்திய திட்டக் குழு வளர்ச்சிக்கு வழி வகுத்தது ஒருபுறமிருக்க, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சமநிலையை பராமரிக்கும் ஒழுங்குமுறை அமைப்பாக செயல்பட்டது. ஆனால், புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள நிதி ஆயோக், வளர்ச்சி மற்றும் கொள்கை தொடர்பான விஷயங்களில் மத்திய அரசுக்கு ஆலோசனை கூறும் அமைப்பாக திகழுமே தவிர முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கும் என்று தோன்றவில்லை. அதுமட்டுமின்றி, கொள்கை வகுக்கும் நடைமுறையில் தனியாரையும் ஈடுபடுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கூறி வருவதால், இந்த அமைப்பின் முழுநேர மற்றும் பகுதி நேர உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் தனியார் நிறுவனங்களை சார்ந்தவர்களாகவே இருப்பதற்கு அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன.

 தனியார் துறையினர் அல்லது பெரு நிறுவனங்களின் வளர்ச்சி தான் இந்தியாவின் வளர்ச்சி என்று கருதும் மெத்தப்படித்த வல்லுனர்கள் நிதி ஆயோக்கில் இடம் பெறும் பட்சத்தில், அவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை சொல்லித் தெரியவில்லை. மேலும் இத்தகைய வல்லுனர்கள் பொதுவாக மானியங்களுக்கு எதிரானவர்களாக இருப்பர் என்பதால், கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்கான மானியங்களையும் குறைக்கும்படி நிதி ஆயோக் நெருக்கடி எழும். அதற்கு அரசு பணிந்தால் அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது. 

மத்திய திட்டக்குழு இருந்தவரை அதன் ஒப்புதல் பெறாமல் மத்திய அரசு திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாது. அதுமட்டுமின்றி, மாநில அரசுகளுக்கான திட்ட ஒதுக்கீட்டை திட்டக்குழு தான் தீர்மானிக்கும். இதில் பாகுபாடு காட்டப்படாமல் இருப்பதற்காக நிலையான விதிகள் வகுக்கப் பட்டிருந்தன. ஆனால், புதிய அமைப்புக்கு அத்தகைய அதிகாரங்கள் எதுவும் இல்லை. எனவே, மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்குவதாக இருந்தாலும், மத்திய அரசின் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதாக இருந்தாலும் பிரதமரின் முடிவு தான் இறுதியாக இருக்கும். அத்தகைய சூழலில் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதியும், மற்ற மாநிலங்களுக்கு குறைவான நிதியும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கெல்லாம் மேலாக எல்லா அதிகாரங்களும் பிரதமரிடம் குவிக்கப்பட்டால், அது நன்மைக்கு வழி வகுக்காது; மாறாக, நாட்டில் சர்வாதிகாரம் பெருகுவதற்குத் தான் வழி வகுக்கும்.

மொத்தத்தில், மத்திய அரசு நிர்வாகத்தில் இதுவரை மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தி வந்த தனியார் பெரு நிறுவனங்கள் இனி நேரடியாக தலையிட வேண்டும்; அனைத்து அதிகாரங்களும் தம்மிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற தமது இரட்டை நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வவே  இப்படி ஒரு மாற்றத்தை பிரதமர் செய்திருக்கிறார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.  மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகளை பாதிக்கும் இந்நடவடிக்கை மிகவும் ஆபத்தானது ஆகும்.

எனவே, மத்திய திட்டக்குழுக்கு மாற்றாக புதிய அமைப்பை உருவாக்கும் அறிவிப்பை இரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே செயல்பட்டு வந்த திட்டக்குழுவை சீரமைத்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

நிலை குலைந்த தமிழக பொருளாதாரம்: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் உள்ள இரு உர ஆலைகளுக்கு மானிய விலையில் தொடர்ந்து நாப்தா வழங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், உண்மையில், தமிழகத்தின் நிதி நிலைமை முதலமைச்சர் குறிப்பிட்டதை விட பல மடங்கு மோசமாக இருப்பதை உணர முடிகிறது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில், ரூ.289 கோடி உபரி நிதி இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய் ரூ.91,835 கோடியாக இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த அரையாண்டில் மாநிலத்தின் வரி வருவாய் ரூ. 45,917.5 கோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதைவிட ரூ.8861.5 கோடி குறைவாக ரூ.37,056 கோடி மட்டுமே தமிழக அரசு வருவாய் ஈட்டியிருக்கிறது.

அதேபோல், வணிக வரி வசூல் 23.35% அதிகரிப்பதற்கு பதிலாக 1.48% மட்டுமே அதிகரித்துள்ளது. மாநில கலால் வரி வசூல் 28.75% என்ற இலக்கிற்கு பதிலாக 10.87% மட்டுமே உயர்ந்திருக்கிறது. முத்திரை மற்றும் பதிவுத்துறை வருவாய் 28.75% அதிகரிக்க வேண்டியதற்கு பதிலாக மைனஸ் 2.49 விழுக்காடாக குறைந்திருக்கிறது. வாகனங்கள் மீதான வரி 39.71% என்ற இலக்கில் 7 விழுக்காட்டைக் கூட எட்டவில்லை. நடப்பாண்டிற்காக நிர்ணயிக்கப்பட்ட எந்த இலக்கையுமே எட்ட்ட முடியாமல் தமிழக அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பது தான் இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மையாகும். மாநில கலால் வரி வருவாய் மட்டும் தான் ஆறுதல்  தரும் வகையில் இருக்கிறது. இதற்குக் காரணம் அரசின் நிர்வாகத் திறமையில்லை; மது விற்பனை தான் என்பது இன்னொரு அவலமான உண்மை.

தமிழக அரசின் இந்த நிலை வரும் மார்ச் மாதம் வரை தொடர்ந்தால், தமிழகத்தின் வரி வருவாய்  சுமார் ரூ.18,000 கோடி குறைவாக இருக்கும். இதை சமாளிக்க கடன் வாங்குவதை விட வேறு எந்த வழியும் இருக்காது. ஏற்கனவே தமிழக அரசு ரூ.1,78 லட்சம் கோடி கடன் வாங்கிக் குவித்துள்ள நிலையில், வரி வருவாய் வீழ்ச்சியை சமாளிக்க வாங்க வேண்டிய கடனையும் சேர்த்தால் தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் தொகை ரூ. 2 லட்சம் கோடியை எட்டிவிடும் ஆபத்து இருக்கிறது. தமிழக அரசின் கடன் தவிர தமிழ்நாட்டு மின்சார வாரியத்திற்கு ரூ. 1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்குள்ள உள்ள மற்ற கடன்களையும் சேர்த்தால் தமிழகத்தின் மொத்தக் கடன் சுமை ரூ. 4 லட்சம் கோடியைத் தாண்டும். இது நடப்பாண்டில் தமிழகத்தின்  ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் (நிஷிஞிறி)  42 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். தமிழகத்தின் இந்த கடன்சுமையில் 60 விழுக்காட்டிற்கும் அதிக அளவை கடந்த 4 ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசு தான் வாங்கிக் குவித்திருக்கிறது. கடன் சுமை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது.

தமிழ்நாட்டின் நிதி நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியிருப்பதற்குக் காரணம் அரசு நிர்வாகத்தில் தலைவிரித்தாடும் ஊழலும், முறைகேடுகளும் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அரசுக்கு வர வேண்டிய வருமானம் ஆட்சியாளர்களுக்கும், சில தனியார் பண முதலைகளுக்கும் சென்று விடுவதால் தான் அரசின் கருவூலம் வறண்டு கிடக்கிறது என்று ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரிகளும். மூத்த பொருளாதார வல்லுனர்களும் எழுப்பியுள்ள குற்றச்சாற்றை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தப் போவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், இப்போது எவ்வளவு அதல பாதாளத்தில் தள்ளியிருக்கிறார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்.  இந்த நெருக்கடியிலிருந்து தமிழ்நாட்டை ஆட்சியாளர்கள் எவ்வாறு மீட்கப் போகிறார்கள்? கடந்த இரு ஆண்டுகளாக தமிழகத்தின் வருவாய் குறைந்து, செலவுகள் அதிகரித்தது ஏன்? என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள். அது அவர்களின் உரிமையும் கூட.

எனவே, தமிழகத்தின் நிதி நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்ததற்கான காரணங்கள் என்ன?  இதை சரி செய்து பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர என்னென்ன செயல்திட்டங்கள் உள்ளன என்பதை விளக்கும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: