Sunday, December 16, 2012

இன்று பாமகவின் பூட்டு போராட்டம்... விடிய விடிய கடைகளிலேயே தங்க வைக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள்

சென்னை: பாமகவின் டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டம் இன்று நடப்பதையொட்டி தமிழகம் முழுவதும் மதுக் கடைகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கையாக பல பாமகவினரை நேற்றே போலீஸார் கைது செய்தனர். மேலும், கடை ஊழியர்களையும் நேற்று இரவே கடைகளில் தங்க வைத்தனர் போலீஸார்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மது கடைகளுக்கு இன்று பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்து 823 மதுக்கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு ரோந்து போலீசாரையும் டாஸ்மாக் கடை பகுதியில் ரோந்து செல்லும்படி உயர் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கையாக நேற்று இரவு கடை வர்த்தகம் முடிந்ததும் கடைகளிலேயே ஊழியர்களைத் தங்க வைத்தனர் போலீஸார். இதற்கு ஊழியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இரவில் வந்து பாமகவினரோ அல்லது சமூக விரோதிகளோ தாக்குதல் நடத்தினால் யார் பொறுப்பு ஏற்பது என்று அவர்கள் புலம்பினர்.

Saturday, December 15, 2012

திட்டமிட்டப்படி மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்: கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்

முன்னெச்சரிக்கை என்ற பெயரில் பாமகவினரை கைது செய்தாலும், மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரும் தங்களது போராட்டத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே முன்னெச்சரிக்கை என்ற பெயரில் பாமகவினர் கைது செய்யப்படுவதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தால் போக்குவரத்திற்கோ அல்லது பொது அமைதிக்கோ பாதிப்பு ஏற்படாது. இரவு நேரத்தில் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடப்போவதாக காவல்துறை தவறான தகவல்களை பரப்பி முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்ட பாமகவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் திட்டமிட்டப்படி மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் 17.12.2012 அன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

புகைப்பழக்கத்தை கைவிட வேண்டுகோள்:

பாமக இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 63ஆவது பிறந்த நாள் விழா 13.12.2012 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் "சிகரெட் பிடித்தனால் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.
நுரையீரல் பாதிப்பைத் தொடர்ந்து கிட்னியில் பிரச்சனை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் நான் ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது இதுதான். தயவு செய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டுவிடுங்கள்" என்று கோரியுள்ளார்.
பல லட்சக்கணக்கான இளைஞர்களை ரசிகர்களாகக் கொண்டுள்ள நண்பர் ரஜினிகாந்த் அவர்களின் இந்த கோரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதே பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் பேசிய நண்பர் ரஜினிகாந்த், முன்பு அவர் ''பாபா' படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்தற்கு மருத்துவர் இராமதாசு எதிர்ப்பு தெரிவித்ததை சூசகமாகக் குறிப்பிட்டு "அவர் சொன்ன கருத்து ரொம்ப நல்ல கருத்து. அதற்குப் பிறகு நான் நடிக்கின்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிகரெட், பீடி, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பயன்பாடு ஒரு மிகப்பெரிய கேடாகும். இத்தீமையால் இந்தியாவில் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே இறக்கின்றனர். இந்திய அளவில் ஆந்திராவுக்கு அடுத்தபடியாக மிக அதிகமானோர் புகைபிடிக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இங்கு சிறுவர்கள் புகையிலைத் தீமைக்கு அடிமையாகும் போக்கு ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் தமிழ்நாட்டில் மேற்கொண்ட ஆய்வில் '2000 ஆம் ஆண்டில் பள்ளிக்குழந்தைகளில் 7 சதவீதத்தினர் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தினர். இதுவே 2009 ஆம் ஆண்டில் 15 சதவீதமாக அதிகரித்துவிட்டது' என்று தெரியவந்துள்ளது.

புகைபிடிக்கும் பழக்கம் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் இடம்பெரும் புகைபிடிக்கும் காட்சிகளும் ஒரு காரணமாக உள்ளன. சிகரெட் நிறுவனங்கள் திரைப்படங்களை பயன்படுத்தி புகைப்பழக்கத்தை திணித்து வருகின்றன. உரிய வயதாகும் முன்பே இறந்து போகும் வாடிக்கையாளர்களை ஈடுகட்டவே சிகரெட் நிறுவனத்தினர் திரைப்படங்களில் மறைமுகமாக விளம்பரம் செய்கின்றனர். இப்பேராபத்து உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.
இந்த சூழலில் நண்பர் ரஜினிகாந்த் "புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்" என்று ரசிகர்களுக்கு துணிச்சலாக வேண்டுகோள் விடுத்துள்ளதை மனமார வரவேற்கிறேன். அவரது இந்த முன் உதாரணத்தை தமிழ்நாட்டின் மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டும்.

தமிழ் திரைப்பட நடிகர்களில் கமலஹாசன், சூர்யா, விஜய், விக்ரம் ஆகியோர் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளனர். அவர்கள் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுடைய வழியில் புகையிலைத் தீமைக்கு எதிராக குரல் கொடுக்கவும் முன்வர வேண்டும். மேலும் திரைப்படங்களில் தொடர்ந்து புகைபிடிக்கும் காட்சிகளில் இப்போதும் நடித்துவரும் மற்ற நடிகர்கள் அதனை உடனடியாகக் கைவிட வேண்டும்.
'மது பழக்கத்தைக் கைவிட வேண்டும். முதலில் பெற்றோரைக் கவனிக்க வேண்டும். குடும்பத்தைக் கவனிக்க வேண்டும்' என்று நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் குறிப்பிட்டுள்ள கருத்துகள் மிக உயர்வான கருத்துகளாகும். இதே கருத்துகளைத்தான் எங்களது நிறுவனர்மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என குறிப்பிட விரும்புகிறேன்.
இளைஞர்கள் மதுபானத்திற்கும் புகையிலைக்கும் அடிமையாகக் கூடாது. இளம்வயதில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பம் வேலைக்கு பின்னர்தான் அரசியல் என வலியுறுத்தும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி.
இந்த தருணத்தில், தமிழ் நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை நலமாக அமைக்கும் வகையில் புகையிலை மற்றும் மதுபானத் தீமைகளுக்கு எதிராக நண்பர் ரஜினிகாந்த் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அழைப்பு விடுக்கிறேன். இந்த உன்னதமான நோக்கத்திற்காக பாட்டாளி மக்கள் கட்சியும் பாட்டாளி இளைஞர் சங்கமும் அவருக்கு துணையாக நின்று தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் வளமாக அமைய பாடுபடுவோம் என்றும் தெரிவித்துக் கோள்கிறேன்.

இதே போன்று, தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்வைச் சீரழித்து, நாட்டின் எதிர்காலத்தையே சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் கொடூரமான மதுபான பழக்கத்திற்கு எதிராக மற்ற நடிகர்களும், நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களும் குரல் கொடுக்க, போராட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் என்றென்றும் நலமோடு வாழவேண்டும் என எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, December 11, 2012

மது விலக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு 5 கோரிக்கைகள்: நிறைவேற்றாவிட்டால் போராட்டம் என ராமதாஸ் எச்சரிக்கை

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 11.12.2012 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பெற்ற குழந்தைக்கு தாயே நஞ்சு கொடுப்பது எவ்வளவு கொடுமையானதோ, அதைவிடக் கொடுமையானது மக்களை காக்க வேண்டிய அரசே மது விற்பனை செய்வதாகும். மது விற்பது தவறு என்று தெரிந்தும், அதை தமிழக அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இந்தத் தவற்றைத் திருத்தி, மக்களைக் காக்கவேண்டும் என்பதற்காக கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தி வந்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி பா.ம.க. சார்பில் நடத்தப்பட்ட மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் அறவழிப் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பின்னர் மதுவிலக்கிற்கு ஆதரவாக தமிழக மக்களிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் முழுமையானமதுவிலக்கை நடைமுறைப் படுத்த வலியுறுத்தி வரும் 17ஆம் தேதி மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்த பா.ம.க. தீர்மானித்துள்ளது. தமிழக அரசும் மக்களின் இந்த உணர்வுகளை மதித்து, படிப்படியாகவாவது மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.
மதுவிலக்கு என்பது நடைமுறைப்படுத்தமுடியாத ஒன்றல்ல. குஜராத், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து ஆகிய 4 மாநிலங்களிலும் காலங்காலமாக மதுவிலக்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மராட்டிய மாநிலத்தில் 1949ஆம் ஆண்டின் பம்பாய் மதுவிலக்கு சட்டத்தின்படி மதுவிற்பனை கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது.
அதன்படி, ஏதேனும் ஒரு நகரிலோ அல்லது கிராமத்திலோ மதுக்கடைகள் தேவையில்லை என அங்குள்ள பெண்களில் 25% பேர் மனு அளித்தால் அதனடிப்படையில் அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்; அதில் பாதிக்கும் மேற்பட்ட பெண்வாக்காளர்கள் மதுக்கடைகளுக்கு எதிராக வாக்களித்தால் உடனடியாக அங்குள்ள மதுக்கடைகள் மூடப்படும். இதேபோன்ற நடைமுறையை தமிழகத்திலும் கொண்டுவரவேண்டும்.
தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களில் பெரும்பாலானோர் காலை முதல் மாலை வரை உழைத்து பெற்ற ஊதியத்தை மாலை வேளைகளில் தான் மதுக்கடைகளில் இழக்கிறார்கள். இதைத் தடுக்க மதுக்கடைகளில் மது விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மொத்தம் 5 மணி நேரம் என குறைக்க வேண்டும். அதேபோல் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் தீப ஒளி , பொங்கல் போன்ற திருநாள்களுக்கு முன்பு 3 நாட்கள், பின்னர் 3 நாட்கள் என மொத்தம் ஒரு வாரத்திற்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். மாநிலம் முழுவதுமுள்ள குடிப்பகங்கள் (பார்கள் ) உடனடியாக மூடப்பட வேண்டும். மாதத்திற்கு குறைந்தது 500 கடைகள் வீதம்மூடி, காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதிக்குள் அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும்.
மது என்னும் அரக்கனின் பிடியில் குடும்பத்தலைவர்கள் சிக்குவதால் அக்குடும்பங்கள் படும் பாடு சொல்லி மாளாது. படிக்க வேண்டிய வயதில் மாணவர்கள் குடிக்க துடித்தல், குடியால் உடல்நலம் பாதிக்கப்பட்டும், விபத்தில் சிக்கியும் குடும்பத்தலைவர்கள் உயிரிழப்பதால் இளம் கைம்பெண்கள் உருவாதல் என எண்ணெற்ற துயரங்களுக்கு குடிப்பழக்கம் தான் அடிப்படையாக அமைகிறது.
குடியால் ஏற்படும் சீரழிவுகள் எத்தகையவை என்பதை குடும்பத்தலைவிகளான பெண்கள் தான் அறிவார்கள் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார். மதுவால் ஏற்படும் தீமைகளை தமிழக முதலமைச்சர் அறிவார் என்பதால் மது விலக்கு தொடர்பான கோரிக்கைகளான.....
1) மராட்டியத்தில் உள்ளதைப் போன்று மக்களின் விருப்பப்படி மதுக்கடைகளை மூட வகை செய்யும் மதுவிலக்கு சட்டத்தை தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும்,
2) மது விற்பனை நேரத்தை 5 மணி நேரமாக குறைக்க வேண்டும்,
3) பண்டிகைக் காலங்களில் ஒரு வாரத்திற்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதுக்கடைகளை மூடவேண்டும்,
4) அனைத்துக் குடிப்பகங்களையும் உடனடியாக மூட வேண்டும்,
5) மாதத்திற்கு குறைந்தது 500 கடைகள் வீதம் மூட வேண்டும் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்றுவதுடன், அக்டோபர் 2ஆம் தேதி காந்தியடிகள் பிறந்த நாள் முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கவேண்டும்.
வரும் 15ஆம் தேதிக்குள் இந்த அறிவிப்பை வெளியிடாவிட்டால், ஏற்கனவே அறிவித்தபடி வரும் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Saturday, December 8, 2012

கருகும் பயிரை காப்பாற்ற 12 டி.எம்.சி தண்ணீர் போதுமா? ராமதாஸ் கேள்வி

சென்னை: தண்ணீர் இன்றி சம்பா பயிர்கள் கருகி வரும் நிலையில் அவற்றை காப்பாற்ற 12 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே திறந்து விடச் சொல்லி உத்தவிடுவது போதுமானதல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி கண்காணிப்புக் குழு, காவிரி பாசன மாவட்டங்களில் கருகி வரும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு டிசம்பர் மாதத்தில் 12 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு இம்மாத இறுதிக்குள் மத்திய அரசிதழில் வெளியிடப்படும் என்றும் அக்குழு அறிவித்திருக்கிறது.

இறுதித் தீர்ப்பு கடந்த 2007ஆம் ஆண்டிலேயே வழங்கியபோதிலும், அத்தீர்ப்பு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அரசிதழில் வெளியிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இப்போது உச்சநீதிமன்றம் கண்டித்தபிறகு, வேறுவழியின்றி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில், சம்பா பயிரை காப்பாற்றுவதற்காக காவிரி கண்காணிப்புக் குழு ஒதுக்கியுள்ள 12 டி.எம்.சி தண்ணீர் போதுமானதல்ல. தமிழகத்தில் சம்பா பயிரை காப்பாற்ற குறைந்தது 60 டி.எம்.சி தண்ணீர் தேவை. டிசம்பர் மாதத்தில் குறைந்தது 30 டி.எம்.சியாவது திறந்து விடபட்டால் தான் பயிர்களை ஓரளவாவது காப்பாற்ற முடியும். ஆனால், 12 டி.எம்.சி மட்டும் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு கண்காணிப்புக் குழு ஆணையிட்டிருப்பது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் ஆகும்.

ஆனால், இந்தத் தீர்ப்பைக்கூட செயல்படுத்த முடியாது என கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இதே நிலை தொடர்ந்தால் காவிரி பாசன மாவட்டங்களில் எலிக்கறி சாப்பிடும் அவலநிலை மீண்டும் ஏற்படக்கூடும். இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் வாடும் நெற்பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக 30 டி.எம்.சி தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Friday, December 7, 2012

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி : பா.ம.க

புதுச்சேரி: புதுச்சேரி மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாமக புதிய கூட்டணியை உருவாக்கிப் போட்டியிடும் என்று அம்மாநில செயலாளர் அனந்தராமன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் வரும் ஜனவரி 4,8,10 ஆகிய நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்கான அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன.
பாமக
புதுவை உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வியாழக்கிழமையன்று பெறப்பட்டன. அப்போது அனந்தராமன் வெளியிட்ட அறிக்கையில், பாமக கூட்டணி அமைத்து போட்டியிடும். யாருடன் கூட்டணி என்பதை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜாதிய கூட்டணி என்று பேசிவரும் பாமக, புதுச்சேரியில் எப்படிப்பட்ட கூட்டணியை அமைக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது
அதிமுக
இதனிடையே புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர்கள் பெயரை அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டிருக்கிறார்.
அவரது அறிக்கையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக புதுச்சேரி மாநிலத்திற்கு (காரைக்கால் நீங்கலாக) எம்.சி.சம்பத் ,(கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், சுற்றுச் சூழல் துறை அமைச்சர்) நா.பாலகங்கா, எம்.பி., (வட சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்) காரைக்கால் மாவட்டத்துக்கு, ஆர்.காமராஜ் (திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர், உணவுத்துறை அமைச்சர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியிட விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களைப் பெறுவதற்கான இடங்களையும் அதிமுக அறிவித்திருக்கிறது. புதுச்சேரி மாநிலம் (காரைக்கால் நீங்கலாக) - உப்பளம் தொகுதியில் உள்ள புதுச்சேரி மாநிலக் கழக அலுவலகம், காரைக்கால் மாவட்டம்-9, பாரதியார் ரோடு, கோட்டுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவோர் கட்டணமாக, நகரசபை தலைவர் -ரூ.10 ஆயிரம், நகரசபை உறுப்பினர் (கவுன்சிலர்) -ரூ.2 ஆயிரம், கொம்யூன் பஞ்சாயத்து மன்ற உறுப்பினர் -ரூ.1000 கட்டணமாகும் என்றும் அறிவிக்கபப்ட்டிருக்கிறது. நாளையும் நாளை மறுநாளும் இந்த விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

Thursday, December 6, 2012

டாக்டர் ராமதாஸ் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு: அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் அறிவிப்பு

அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் தலைவர் பி.டி.அரசகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் நடந்த அனைத்து சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில், வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என வலியுறுத்தி அடுத்த (ஜனவரி) மாதம் 4-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எங்கள் கட்சி முழு ஆதரவு அளிப்பது என, கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு பி.டி.அரசகுமார் கூறி உள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: