Sunday, September 16, 2012

போர்குற்ற விசாரணை: இலங்கை வலையில் இந்தியா விழக்கூடாது: ராமதாஸ்

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரின் போது சிங்களப் படையினர் நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பான காலமுறை மதிப்பீட்டாய்வு விசாரணையில் இலங்கை விரிக்கும் வலையில் இந்தியா விழக்கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரின் போது சிங்களப் படையினர் நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கடந்த மார்ச் 22ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஆறு மாதங்கள் ஆன போதிலும், இலங்கையில் நிலவும் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களும், அடக்குமுறைகளும் அதிகரித்திருக்கின்றன.

இதற்காக இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற முழக்கங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் போருக்கு முன்பும், போரின் போதும், போருக்குப் பிறகும் (2008 2012) மனித உரிமைகள் எவ்வாறு மதிக்கப்பட்டன என்பது குறித்த முழுமையான காலமுறை மதிப்பீட்டாய்வு, ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அக்டோபர் 22ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை நடைபெறவிருக்கும் காலமுறை மதிப்பீட்டாய்வு பணிக்குழுவின் 14 வது கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இக்கூட்டத்தின் போது நவம்பர் 1ம் தேதி இலங்கை மீதான குற்றச்சாற்றுகள் குறித்த விசாரணை நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் நவம்பர் 5ம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இந்த விசாரணையை நடத்தும் பொறுப்பு இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல்வெறு நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் தங்களின் கருத்துக்கள், இலங்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்த பரிந்துரைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 46 அறிக்கைகளை ஐ.நா.விடம் அளித்துள்ளன.

இலங்கை அரசும் 30 பக்கங்கள் கொண்ட விளக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்தியாவிலிருந்து பசுமைத் தாயகம் அமைப்பு மட்டுமே அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையரின் கள அலுவலகத்தை இலங்கையில் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

இலங்கை அரசு தாக்கல் செய்த அறிக்கையும், தற்போது இலங்கை சென்றுள்ள ஐ.நா.மனித உரிமை ஆணையக் குழுவிடம் இலங்கை அளித்துள்ள விளக்கமும் ஐ.நாவை திருப்திப்படுத்தவில்லை.

இலங்கை அளித்த அறிக்கையில் பொய்கள் மட்டுமே இருப்பது தான் இதற்கு காரணமாகும். இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வெறு நாடுகளும் வலியுறுத்தி வருவதால்
இலங்கைக்கு எதிராக பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிடப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இதை தடுப்பதற்கான முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டிருக்கிறது. விசாரணைக்குழுவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயினும், பெனினும் ஏற்கனவே மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தவை என்பதால், இம்முறையும் நடுநிலையாக செயல்பட்டு தீர்ப்பளிக்க முடிவு செய்துள்ளன.

ஆனால், கடந்தமுறை தங்களுக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவந்து,அதை நீர்த்துப் போகச்செய்த இந்தியா, இம்முறையும் தங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு தங்களை காக்கும் என்று இலங்கை அரசு நம்புகிறது.

இதற்காக பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து ஆதரவை திரட்டவே இலங்கை அதிபர் இராசபட்சே நாளை மறுநாள் (செப்டம்பர் 18) இந்தியா வருகிறார். போர் முடிந்த பிறகு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டதால் உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்கனவே அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு ஆதரவாக மீண்டும் ஒருமுறை இந்தியா செயல்பட்டால் இனப்படுகொலைகளுக்கு துணை போகும் நாடு என்ற தீராப்பழி ஏற்பட்டுவிடும்.

ஐ.நா. நெருக்கடியிலிருந்து இந்தியாவின் உதவியுடன் தப்பிக்கும் நோக்குடன் இலங்கை விரித்துள்ள வலையில் இந்தியா விழுந்துவிடக்கூடாது. எனவே, இந்தியா வரும் இராஜபட்சவேவை சந்திப்பதை பிரதமர் தவிர்க்க வேண்டும். மேலும், இப்பிரச்சினையில் இந்தியா நடுநிலையுடன் செயல்படும் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்காமல் தடுக்கும் பொறுப்பு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க.வுக்கும் உண்டு.

இதற்கு முன், ஐ.நா. மனித உரிமை ஆணைய வாக்கெடுப்பின்போது, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்திருந்த மத்திய அரசு, தமிழக கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு வலியுறுத்தியதால் தான் கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொண்டு இலங்கைக்கு எதிராக வாக்களித்தது.

அதேபோல், இம்முறையும் இலங்கைக்கு எதிரான விசாரணையின் போது, நடுநிலையாக செயல்பட்டு இலங்கைக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும்படி, மத்திய அரசையும்,பிரதமரையும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

திராவிட கட்சிகளை பாமக விரட்டியே தீரும்: டாக்டர் ராமதாஸ்

சென்னை: திராவிட கட்சிகளை விரட்டியடிப்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் வேலை என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெசப்பாக்கத்தில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான காற்று, நல்ல மருத்துவ வசதி, தரமான சாலை வசதி வேண்டும் என்றுதான் பா.ம.க. போராடுகிறது. ஆனால் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இலவசங்கள், சினிமா, மது ஆகியவற்றை கொடுத்து தமிழகத்தை திராவிட கட்சிகள் சீரழித்துவிட்டன. திராவிட கட்சிகளை விரட்டுவதே என் வேலை. அந்த பணியை பா.ம.க.வால் மட்டும்தான் செய்ய முடியும்.
நாங்கள் தமிழகத்தை வளர்ச்சி அடைய செய்துள்ளோம் என்று மார் தட்டும் திராவிட கட்சிகளுக்கு சவால் விடுக்கிறேன். தனித்து போட்டியிட தயாரா நாங்கள் தனித்து போட்டியிட போவதாக அறிவித்து விட்டோம் இனிமேல் என்றைக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றார்.

Friday, September 7, 2012

முதலமைச்சர் ஜெயலலிதா மக்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிக்கிறார்! ராமதாஸ் குற்றச்சாட்டு!

கூடங்குளம் மக்கள் மீது அடக்குமுறை செய்யாமல், அவர்களுடன் தமிழக முதல்வர் நேரில் பேச வேவண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அனுப்பியுள்ள அறிக்கையில்,

 கூடங்குளம் பகுதி மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்துக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அணுமின்நிலையத்தை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், மத்திய, மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்துவிட்டு அணு உலையை திறப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக அப்பகுதி மக்கள் இடிந்தகரையில் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். இதில் பங்கேற்பதற்காக வந்த அப்பகுதி மக்களை விஜயாபதி என்ற இடத்தில் காவல்துறையினர் தடுத்தி நிறுத்தியுள்ளனர். அந்த பகுதியில் பதற்றம் ஏற்படுவதற்கான எந்த சூழலும் இல்லாத நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களையும், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், கண்ணீர்புகை குண்டுகளை வீசும் ஊர்திகள் ஆகியவற்றையும் நிறுத்தி மக்களை காவல்துறை அச்சுறுத்தியுள்ளது. இடிந்தகரைக்குள் நுழைவதற்கான அனைத்து பாதைகளையும் மணல் மூட்டைகளை அடுக்கி அடைத்துள்ளனர். ஓராண்டிற்கும் மேலாக கூடங்குளம் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் சிறு வன்முறை கூட நிகழாத நிலையில், காவல்துறையினரே வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளனர். காவல்துறையினரின் இந்த அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.

கூடங்குளம் விவகாரம் தொடர்பான பேச்சுக்களின் போது, அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைமுறைப் படுத்தபட்டுள்ள 144 தடை உத்தரவை 2 கி.மீ சுற்றளவுக்குள் குறைப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்து , அது நடைமுறைப்படுத்தபட்டது. ஆனால், எந்தவித முன்னறிவிப்புமின்றி, தடையாணையை 7 கி.மீ தொலைவுக்கு நீட்டித்து மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கும் தமிழக அரசு தடை விதித்திக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலின் போது தூத்துக்குடியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா,"கூடங்குளம் பிரச்சினையைப் பொறுத்தவரை மக்களின் கருத்துக்களுக்கு தமிழக அரசு மதிப்பளிக்கிறது. இப்பிரச்சினையில் நான் உங்களில் ஒருத்தியாக இருப்பேன்'' என்று உறுதியளித்திருந்தார். ஆனால், உள்ளாட்சித் தேர்தலும், சங்கரன்கோவில் இடைத்தேர்தலும் முடிவடைந்த பின்னர், தனது நிலைப்பாட்டை தலை கீழாக மாற்றிக்கொண்டு மக்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிக்கிறார்.

ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு மக்களை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டால், தேர்தலின் போது வாக்குச்சீட்டு என்ற அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதை முதல்வர் உணரவேண்டும். கூடங்குளம் பகுதி மக்களை மிரட்டுவதை விட்டுவிட்டு, முதலமைச்சர் அவர்கள் இடிந்தகரைக்கு நேரில் சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தி, பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண முன்வர வேண்டும். கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் வரும் 9ம் தேதி கூடங்குளத்தில் நடைபெறவிருக்கிறது. அணு உலை முற்றுகைப் போராட்டத்துக்கு  பா.ம.க. முழு ஆதரவு அளிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்படடுள்ளது.

Monday, September 3, 2012

இஸ்ரோவில் கேரளத்தினர் ஆதிக்கம்.. தமிழர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை: ராமதாஸ்

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) கேரள அதிகாரிகளின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. இங்கு பணிபுரியும் தமிழர்களின் ஆராய்ச்சிகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் பாமக சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியை திறந்து வைத்து ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தை இன்று மது அரக்கன் சீரழித்து கொண்டிருக்கிறான். அவனிடம் இருந்து நாட்டை பாதுகாக்க பாமக போராடி வருகிறது. கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
குமரி மாவட்டத்தில் 148 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஒரு நாளைக்கு ரூ.1 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் இங்கு ரூ.584 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இந்த ஆண்டு இதனை ரூ.600 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கேரள அதிகாரிகளின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. இதனால் இங்கு பணிபுரியும் தமிழர்களின் ஆராய்ச்சிகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என பாஆமக ரம்பம் முதலே குரல் கொடுத்து வருகிறது. இப்போது இவர்களுக்காக கருணாநிதி நடத்திய டெசோ மாநாட்டால் எந்த பலனும் இல்லை. அவர் கண் துடைப்புக்காகவே இந்த மாநாட்டை நடத்தினார். இலங்கை தமிழர்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை.
இந்தியாவில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க கூடாது. தமிழக மக்களின் எதிர்ப்பை மத்திய அரசு புரிந்து நடக்க வேண்டும்.
இந்தியாவுக்கு ராஜபக்சேவை அழைத்திருக்கும் பாஜகவுக்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
குமரி மாவட்ட மீனவர்கள் கேரள துறைமுகங்களில் மீன் பிடிக்க படகுகளில் சென்றால் அங்கு உபயோக கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேரள மீனவர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் துறைமுகத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களிடம் தமிழக அரசு கட்டணம் வசூலிப்பது இல்லை.
நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பாராளுமன்றத்தை பாஜக முடக்குவது சரியல்ல. அவர்கள் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த முன் வரவேண்டும். அதில் திருப்தி ஏற்படவில்லை என்றால் மக்கள் மன்றத்தில் தெரிவித்து போராட வேண்டும். அதை விடுத்து நாடாளுமன்றத்தை முடக்குவதை ஏற்க முடியாது என்றார் ராமதாஸ்.

Sunday, September 2, 2012

இந்தியா வரும் ராஜபக்சவை கடுமையான வார்த்தையால் எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: இந்தியாவுக்கு வருகை தர உள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை மிகக் கடுமையான வார்த்தைகளால் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் சுயமரியாதையுடனும், அரசியல் அதிகாரத்துடனும் வாழ்வதற்கு தனித் தமிழீழம் அமைப்பது தான் ஒர் தீர்வு என்ற முழக்கம் உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து சிங்களப் படைகளை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட இலங்கை அரசு, அண்மைக் காலமாக போரில் பாதிக்கப்பட்ட தமிழ்ப்பெண்களையும், போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பெண் போராளிகளையும் விசாரணை என்ற பெயரில் முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் சிங்களப் படையினர் அவர்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்குவதாகவும், இதையெல்லாம் எதிர்த்து கேட்க முடியாத தமிழ்ப்பெண்கள் நடைபிணங்களாக வாழ்ந்து வருவதாகவும், நூற்றுக்கணக்கான பெண்கள் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் இனத்தை அடியோடு அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் திட்டமிட்டு இத்தகைய கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றது இலங்கை அரசு. தமிழகத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழ்ப்பெண்களுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு உண்டு. வரும் 21ந் தேதி இந்தியா வரும் இலங்கை அதிபர் இராஜபக்சேவை கடுமையான வார்த்தைகளால் பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி இம்மாதம் 10ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 21வது கூட்டத்திலும் இதுகுறித்து பிரச்சினை எழுப்பி இலங்கையை உலக நாடுகள் கண்டிக்கவும், எச்சரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Saturday, September 1, 2012

சிறை செல்லும் போராட்டம்: ஜி.கே. மணி


மதுக்கடைகளை மூடக்கோரி டிசம்பர் மாதம் சிறைசெல்லும் போராட்டம் நடத்தப்போவதாக, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி சனிக்கிழமை (01.09.2012) மதுரை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மதுகுடிப்பது மனிதனை அழிக்கும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கூலிப்படை, ஆள்கடத்தல், வன்முறை, தீவிரவாதம் போன்றவை மேலோங்க மதுதான் காரணம். எனவே தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கியது முதல் இன்று வரை, மதுக்கடைகளை மூடவேண்டும் என்று கூறிவருகிறோம். மதுக்கடைகளால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று அரசு கூறுகிறது.

மக்கள் நலன்கருதி மதுவை ஒழிப்பதற்கு மாற்றுத் திட்டத்தை அரசுக்கு சொல்லிவருகிறோம். மதுவை ஒழிக்க வேண்டும், மதுக்கடைகளை மூடவேண்டும் என்று பாட்டாளிமக்கள்கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

டிசம்பர் மாதம் சிறைக்கு செல்லும் போராட்டம் நடைபெறும். மதுரை தானப்பமுதலி தெருவில் உள்ள எஸ்.எம்.எஸ்.மகாலில் வருகிற 4-ந்தேதி மதுஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி, கருத்தரங்கு நடத்தப்படுகிறது. அன்று காலை 10மணிக்கு எனது தலைமையில். நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடங்கி வைக்கிறார் என்றார்.

பாராளுமன்றத்தேர்தலில் 15 இடங்களில் வெற்றி பெறுவோம்: ஜி.கே.மணி நம்பிக்கை

பாராளுமன்றத் தேர்த-ல் 15 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி சனிக்கிழமை (01.09.2012) மதுரை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் மின்வெட்டால் தொழிற்சாலைகள், பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். செயல்படாமல் உள்ள மின்திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும். நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். புதிய மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தக் கூடாது.

மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். வறட்சி மாநிலமாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்தியஅரசு தடுத்திடவேண்டும். கச்சத்தீவை திரும்பப்பெற வேண்டும்.

கிரானைட் முறைகேடுகளில் அனைத்து உண்மைகளையும் கண்டறிய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் குப்கைள் மலைபோல் குவிந்து விடுகின்றன. அதனால் ஏற்படும் சுகாதார கேடுகளை தடுக்க சிறப்புநிதி ஒதுக்கி அதற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி தேர்த-ல் தனித்து போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆட்சி மாற்றம் தேவை என தமிழக மக்கள் விரும்புகிறார்கள். பாராளுமன்றத்தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 15 இடங்களில் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: