Monday, September 6, 2010

தமிழகத்தில் பாமக தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது-ராமதாஸ்

திட்டக்குடி: நாடு சுதந்திரம் அடைந்த பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப் புரட்சி என கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகளை திறந்து சாராய புரட்சி நடந்து வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அதை செயல்படுத்தாமல் முதல்வர் காலம் தாழ்த்தி வருகிறார். அதற்கு வெறும் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து கணக்கெடுப்பை எடுக்கலாம். இதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள் கொண்ட ஒரு கமிஷன் அமைக்கலாம்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 18ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளோம். நாங்கள் அனைத்து சாதியினரையும் சேர்த்துதான் கணக்கெடுக்க சொல்கிறோம். இலவசங்களை வழங்குவது மூலம் உண்மையான வளர்ச்சி அடைய முடியாது. எம்ஜிஆர் ஆட்சியின் போது இலவச காலனி, இலவச பல்பொடி என்ற சில திட்டங்களை மட்டும் செயல்படுத்தினார்.

1989ல் 3வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற போது பேசிய கருணாநிதி , இலவசங்கள் என்பது தற்காலிகமாகத்தான் இருக்க முடியும். அது நீடித்தால் சமுதாயத்துக்கு தீங்குதான் ஏற்படும். உண்மையான முன்னேற்றம் என்பது மக்கள் தாங்களுக்கு தாங்களே தேவையானவற்றை வாங்கி கொள்ளக்கூடிய முறையில் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்வதுதான் என்றார்.

இதை நான் இப்போது கூறும்போது கருணாநிதிக்கு கோபம் வருகிறது. அவர் 1989ல் சொன்னதைத்தான் தற்போது நான் திருப்பிச் சொல்கிறேன்.

இலவச டிவி கொடுப்பதால் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உண்மையிலேயே இலவச பொருட்கள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், இலவச கழிவறை கட்டி தர வேண்டும்.

விவசாயிகளுக்கு ரூ. 25,000 பணமாகக் கொடுக்க வேண்டும். தற்போது விவசாய விளை நிலங்களை வெளி மாநிலத்தவர்கள் கைப்பற்றி வீட்டு மனைகளாக மாற்றி வருவது விவசாயத்தை அழித்துவிடும். இதனை தடுத்து நிறுத்த சட்டம் கொண்டுவர வேண்டும்.

இல்லையெனில் 5 ஆண்டுகளில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உணவுக்கு அடுத்த மாநிலத்தை எதிர்பார்க்கும்நிலை உருவாகும்.

நாடு சுதந்திரம் அடைந்த பின் நாட்டின் வளர்ச்சிக்காக பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப் புரட்சி என கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகளை திறந்து சாராய புரட்சி நடந்து வருகிறது.

கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் பாமகவே முன்னின்று தமிழ்நாட்டில் இருந்து எந்தப் பொருளும் கேரளாவிற்கு செல்ல முடியாதபடி தடுத்து நிறுத்தி கேரளாவுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துவோம்.

தேர்தலில் பாமக தனித்து நிற்பதன் மூலம் வேறு கட்சிகள் ஆட்சிக்கு வர வழி வகுப்பதாக கூற முடியாது. இருப்பினும் தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என்றார்.

முன்னதாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பாமக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான பயிற்சி முகாமில் பேசிய ராமதாஸ்,

உலகில் அரசியல் இல்லாமல் ஒரு துரும்பு கூட அசையாது. ஒவ்வொரு குடிமகனின் தலைவிதியை நிர்ணயிப்பது அரசியல்தான்.

வடஆற்காடு மாவட்டம் இரண்டாக பிரிந்து திருவண்ணாமலை மாவட்டம் 30 ஆண்டுகளாக வளர்ச்சி அடையாமல் உள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் வளர்ச்சி அடைந்து எங்கேயோ போய் விட்டார்கள்.

பாமகஅத்திப்பூ என்கிறார்கள். பாமக பூசணி பூ, இது ஆண்ட கட்சி, அத்திமரம், உழைக்கும் மக்களின் கட்சி. தமிழகத்தில் பாமக தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.

பின்னர் பேசிய அன்புமணி, நான் அமைச்சராக இருந்தபோது தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம், 108 அவசர ஊர்தி சேவை திட்டங்களை கொண்டு வந்தேன். இந்தியாவிலேயே ஐ.நாவால் பாராட்டப்பட்ட ஒரே திட்டம் இந்த சுகாதாரத் திட்டம்தான்.

ஒரு பக்கம் இலவசம். மறுபக்கம் டாஸ்மாக் கடை. 1995ம் ஆண்டு மதுபானம் மூலம் அரசுக்கு ரூ. 1,400 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு மதுக்கடை மூலம் ரூ. 13,000 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது.

தமிழகத்தில் மது விற்பனை மூலம் அடுத்த ஆண்டு ரூ.15,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏழைகளின் வயிற்றில் அடித்து, கிடைக்கும் இந்த வருமானம் மூலம் இலவசங்களை வழங்க வேண்டாம். அதற்கு பதிலாக இலவச கல்வி, வேலைவாய்ப்பு வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

சோனியா காந்திக்கு ராமதாஸ் வாழ்த்து:

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தலைவராக 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா காந்திக்கு ராமதாஸ் பேக்ஸ் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

அதில், உங்களது செயல்திறன் மிக்க மற்றும் திறமையான தலைமையின் மூலம் சமூக ரீதியாகவும், கல்வியிலும், பொருளாதார நிலையிலும் மிகவும் பின்தங்கியுள்ள ஏழை, எளிய மக்களின் துயரங்கள் தீர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

Thursday, September 2, 2010

திமுக கூட்டணிக்கு பாமக வர வேண்டும்-திருமாவளவன்

சென்னை: வட மாவட்டங்களில் திமுக கூட்டணி வலிமை பெற பாமக பயன்படும். எனவே திமுக கூட்டணிக்கு பாமக வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெற உள்ளது. இலங்கை தமிழர் பிரச்சனையில் அரசியல் அறியாமையால் சில கட்சிகள் அவதூறானப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரின் இலங்கை பயணத்தால் தமிழர்களுக்கு எந்தவித பயனும் ஏற்படபோவதில்லை.

திமுக கூட்டணியை மேலும் வலிமைப்படுகின்ற வகையில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்களிப்பு அமையும். மீண்டும் திமுக கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும்.

அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக, அதிக அளவு பணத்தைக் கொடுத்து ஆட்களை திரட்டுகிறார்கள். வட மாவட்டங்களில் கூட்டணி வலிமை பெறுவதற்கு பாமக வரவு பயன்படும். எனவே திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும் என்றார்.

Wednesday, September 1, 2010

விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்க்கும் ராகுலை கண்டிப்பாரா கருணாநிதி?: ராமதாஸ்

திருப்பத்தூர்: அஜித்சிங் உள்ளிட்ட தலைவர்களும், ராகுல்காந்தியும் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்க்கிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி விளைநிலங்களை எடுக்காதே! விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே!! என்று டெல்லியிலே முழங்கிய அனைத்துக்கட்சி தலைவர்கள், அதே மாதிரி ஒரிசாவில் மலைசாதி மக்களுக்கு சொந்தமான நிலங்களையும் வளங்களையும் சுரண்டாதே என்று முழக்கமிட்டுள்ள ராகுல்காந்தியையும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று சொல்வதற்கு முதலமைச்சர் முன்வருவாரா? என்று கேட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வந்த டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது தான் 69 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். பாலாறு பிரச்னையில் நீதி மன்றம் தற்போது கொடுத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி தமிழக அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

வேலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க கோரி என் தலைமையில் அக்டோபர் மாதம் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் வன் முறையைத் தூண்டும் அரசியல் கட்சிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கட்டும். தமிழகத்தில் பல்வேறு புரட்சிகள் ஏற்பட்டுள்ளது போல இப்போது போதை புரட்சி ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு 39 வகையான மது வகையை அறிமுகப்படுத்தி உள்ளது. நான்கு புதிய மதுபான ஆலைகள் துவங்கவும் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் மக்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.

வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். இந்த தேர்தலில் பா.ம.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை.

தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களை போராட்டத்தில் கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தும், பணி நீக்கம் செய்வதும் கண்டிக்கத்தக்கது.

ஸ்ரீபெரும்புதூரில் அமையவிருந்த வானூர்தி நிலையத்தை இடம்மாற்றியது ஏன்? விளைநிலங்களை கையகப்படுத்தித்தான் வானூர்தி நிலையம் அமைக்கவேண்டுமென்றால் அது தேவையில்லை. இதனை தெரிவித்தால் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக என் மீது முதலமைச்சர் புகார் கூறுகிறார்.

அஜித்சிங் உள்ளிட்ட தலைவர்களும், ராகுல்காந்தியும் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்க்கிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி விளைநிலங்களை எடுக்காதே! விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே!! என்று டெல்லியிலே முழங்கிய அனைத்துக்கட்சி தலைவர்கள், அதே மாதிரி ஒரிசாவில் மலைசாதி மக்களுக்கு சொந்தமான நிலங்களையும் வளங்களையும் சுரண்டாதே என்று முழக்கமிட்டுள்ள ராகுல்காந்தியையும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று சொல்வதற்கு முதலமைச்சர் முன்வருவாரா?.

இலங்கையில் ஈழ நாடே அறிவிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் நான் உட்பட யாருமே அதைப் பற்றி பேச அருகதை இல்லை. இலங்கைக்கு வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் சென்று ஒன்றும் ஆகப் போவதில்லை. தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை. தமிழ் மக்கள் அங்கு நான்காம் தர குடி மக்களாக உள்ளனர். அவர்களுக்கு உரிய அரசியல், அதிகாரம் மற்ற உதவிகள் கிடைக்க உலக நாடுகள் முன் வந்தால் ஒழிய ஒன்றும் செய்ய முடியாது என்றார் ராமதாஸ்

Thursday, August 26, 2010

பாமகவில் உள்ளவர்கள் மதுகுடித்தால் நடவடிக்கை:

சேலத்தில் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,

கடந்த 2 தினங்களுக்கு முன்பு முதல்அமைச்சரிடம் செய்தியாளர்கள் மீண்டும் மதுவிலக்கு வருமா? என கேட்டுள்ளனர். அதற்கு அவர் பரிசீலனை செய்வோம் என்று தான் கூறினோம். எத்தனை நாள் என்று கூறவில்லை என்று கூறி மக்களை ஏமாற்ற முயற்சி செய்திருக்கிறார். போராட்டங்கள் நடத்திய மதுக்கடை ஊழியர்களை மிரட்டுவதற்கு இந்த அறிவிப்பை ஒரு ஆயுதமாக அவர் பயன்படுத்தி இருக்கிறார் என நினைக்கிறேன்.

வீதிதோறும் மதுக் கடைகளை திறந்து வைத்து, மது குடித்தால் உடலுக்கு கேடு என எழுதி வைத்து விட்டு புதிய புதிய மது ஆலைகளை திறக்க அனுமதி தந்து மது விற்கப்பட்டும் வருகிறது. 13 வயது பள்ளி சிறுவன் கூட குடிக்க ஆரம்பித்துவிட்டான். 1971க்கு பிறகு பல தலைமுறை குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்தில் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதை தமிழக முதல்வர் தட்டிகழித்து வருகிறார். யாரும் கேட்காமலே புதுச்சேரி முதல்வர் நவம்பருக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு தருவேன் என கூறி உள்ளார்.

ஆனால் இங்கே ரூ.400 கோடி செலவாகும். இதனால் மத்திய அரசு பணம் தந்தால் கணக்கெடுப்போம் என தட்டிக் கழிக்கிறார்கள். ரூ. 4,000 கோடி செலவானாலும் பரவாயில்லை. இது அவசியமானது. இதை தமிழக அரசுத்தான் செய்ய வேண்டும். நான் சொல்வதற்காக இல்லாமல், உச்சநீதிமன்ற ஆணைக்காக செய்ய வேண்டும் என மீண்டும் மீண்டும் கேட்டு கொள்கிறேன். இல்லையெனில் 69 சதவீத இட ஒதுக் கீடுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது.

மின்னணு வாக்குப்பதிவு தேவையில்லை. பழைய வாக்குசீட்டு முறை வேண்டும் என ராஜ்யசபாவில் இன்று குரல் கொடுக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

சேலம் ரயில்வே கோட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பின்னர் இந்த ரயில்வே கோட்டத்தில் எந்தப் பணியும் நடக்கவில்லை. இந்த பகுதியில் 7அமைச்சர்கள் இருந்தும் எந்த பணியும் நடக்கவில்லை.

காவிரி உரிமையை நாம் இழந்தோம். ஒரு இனம் அழிவிற்கு காரணமாக நாம் இருந்திருக்கிறோம். ஈழ அரசையே நடத்தி வந்த ஒரு இயக்கம் முற்றிலும் அழிவதற்கு நாம் காரணமாக இருந்தோம்.

காவிரி பாலாற்றுடன் முதலில் இணைக்க வேண்டும். வைகை தாமரபரணியுடன் இணைக்க வேண்டும். ஆனால் காவிரியையும், வைகையையும் இணைக்க பேசுகிறார்கள். பாலாற்றில் நீரை பார்த்து பல ஆண்டாகி விட்டது.

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் அறிவிப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை. நாங்கள் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்றார்.

கேள்வி: பாமகவில் உள்ளவர்கள் மதுகுடித்தால் நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்: இன்று கூட மாநில இளைஞர் அணி கூட்டம் நடந்தது. அதில் பேசிய அன்புமணி, நிர்வாகிகளிடம் மது குடிக்ககூடாது. அது தெரிந்தால் பதவியை பறித்து விடுவோம் என்று கூறியுள்ளார்.

கேள்வி: சேலத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அது செயல்பட ஒரு வருடம் ஆகும் என்கிறார்கள்.

பதில்: இது தொடர்பாக பாமக போராட்டம் நடத்தும். அதே போல ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் அனைத்து வட்ட, மாவட்ட தலைநகர்களில் செப்டம்பர் மாதம் 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கும்.

கேள்வி: பல கட்சியினரும் திமுகவில் இணைந்து வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: எதிர்க் கட்சியைச் சேர்ந்த, சேலத்துக்கு பக்கத்து மாவட்டத்துக்காரர் (செல்வகணபதி?) மீது ஊழல் புகார் இருக்கிறது. ஆனால், அவர் திமுகவில் இணைந்து ராஜ்யசபா எம்.பியாகிவிட்டார் என்றார்

மாநில அரசே ஜாதிவாரி சென்ஸஸ் நடத்த வேண்டும்: ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்

சென்னை: மத்திய அரசு க்காக காத்திருக்காமல் மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமுதாயத்தில் பெரும்பான்மையாக உள்ள மக்கள், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற வேண்டும்; அதற்கு ஒவ்வொரு ஜாதியினருக்கும் விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பது நீதிக் கட்சியின் கொள்கை.

பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு, அவர்களின் ஜனத்தொகை விகிதாச்சாரப்படி ஒதுக்கீடு செய்யும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கிடைக்க, அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டும் என்பது பெரியாரின் கொள்கை.

இந்த வழியில் வந்ததாக உரிமை கொண்டாடுகிறவர்கள், யாரும் வற்புறுத்தாமல், யாரும் கோரிக்கை வைக்காமல், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருக்க வேண்டும். அப்படி நடைபெறாததால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நான் கேட்கிறேன்.

ஆனால், இதற்கெல்லாம் தலையாட்டுவதாக இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை, சமூக நீதிக்கோ, நீதிக் கட்சியின் கொள்கைக்கோ எதிரானது என்று சொல்ல முடியுமா?. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எந்த அடிப்படையில் 50 சதவீத இடஒதுக்கீடு என்பது முடிவு செய்யப்பட்டது? அதற்கான கணக்கு எங்கே? என்று உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

இதுவரை கணக்கு இல்லாவிட்டால், புதிதாக கணக்கெடுப்பு நடத்தி, அந்த விவரங்களை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு எவ்வளவு வேண்டும் என்பதை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தேவைப்பட்டால், மாநில அரசு இடஒதுக்கீட்டின் அளவை தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதற்காக புதிய சட்டமும் இயற்றலாம் என்று கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சமூக நீதியில் அக்கறையுள்ள எந்த ஒரு அரசும், இந்த அனுமதி கிடைத்த மறுநாளே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருக்க வேண்டும்.

புதுச்சேரி மாநில அரசு யாரும் கோரிக்கை வைக்காமலேயே, வரும் நவம்பர் மாதத்துக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிக்க ஆணையிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் புதிதாக இடஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வரப்போவதாகவும் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், சமூக நீதி கொள்கைக்கு எங்களைத் தவிர வேறு யார் உரிமை கொண்டாட முடியும்? என்று கேட்கும் தமிழக முதல்வர் கருணாநிதி அகில இந்திய அளவில் முயற்சி நடப்பதால், இங்கே தனியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று கூறியிருக்கிறார். இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில், மாநிலத்துக்கு கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க முன்வராமல், பொறுப்பை தட்டிக் கழித்து ஒதுங்கிக் கொள்வது எந்த வகையில் நியாயம்? இது இரட்டை நிலை இல்லையா?

ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. பரிசீலிக்கலாம் என்ற நிலையில்தான் மத்திய அரசு உள்ளது. ஆனால், தமிழக அரசின் நிலை அப்படி அல்ல. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான கடமையையும், பொறுப்பையும் மாநில அரசின் மீது உச்ச நீதிமன்றம் சுமத்தியிருக்கிறது. ஓராண்டு காலத்துக்குள் கணக்கெடுப்பை செய்து முடிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த கெடு முடிவதற்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, புதிதாக இடஒதுக்கீடு அளவை முடிவு செய்து, அதற்கான சட்டத்தை கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், இப்போது இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கும் ஆபத்து வந்துவிடும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Wednesday, August 25, 2010

அன்புமணிக்கும் அழைப்பு வைத்த ரஜினி

மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்கு வருமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் அன்புமணிக்கும் நேரில் போய் அழைப்பு வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் நடக்கும் சௌந்தர்யா ரஜினி - அஸ்வின் ராம்குமார் திருமணத்தையொட்டி, முக்கியப் பிரமுகர்களுக்கு நேரில் போய் அழைப்பிதழ் வைக்கும் பணியில் மும்முரமாக உள்ளார் ரஜினி.

இரு தினங்களுக்கு முன் முதல்வர் கருணாநிதி , முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரில் அழைப்பு வைத்தார் ரஜினி.

பின்னர் மத்திய அமைச்சர் முக அழகிரி, துணை முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கினார்.

நேற்று காலை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை அவரது வேளச்சேரி தாய்மண் அறக்கட்டளை அலுவலகத்தில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார் ரஜினி.

பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணியை அவரது இல்லத்தில் நேற்று பிற்பகலில் சந்தித்தார் ரஜினி. அவரிடம் திருமண அழைப்பிதழை வழங்கினார். அன்புமணியும் அவர் மனைவி சௌம்யா அன்புமணியும் அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டனர்.

ஆனாலும் அவர் பாமக நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாஸை சந்திக்கவில்லை

100 தொகுதிகளுக்கு குறி-ராமதாசின் 'மைக்ரோ பிளான்'!

சேலம்: 100 தொகுதிகளில் வெற்றியைக் குவிக்க டாக்டர் ராமதாஸ் மைக்ரோ பிளான் திட்டத்தை வகுத்துள்ளார். அதன்படி செயல்பட்டு 100 தொகுதிகளை நாங்கள் வெல்வோம் என்று கூறியுள்ளார் பாமக தலைவர் ஜி.கே.மணி.

சேலம் வந்த ஜி.கே.மணி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது...

பாட்டாளி மக்கள் கட்சியை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கட்சி ரீதியாகவும், கட்சியின் அமைப்புகள் ரீதியாகவும் பலப்படுத்தி, அதனை தேர்தலுக்கு பயன்படுத்தும் வகையில் எங்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் மைக்ரோ பிளான் என்ற திட்டம் வகுத்துள்ளார்.

இந்த திட்டத்தின்படிதான் பென்னாகரம் இடைத்தேர்தலில் நாங்கள் தேர்தல் பணியாற்றினோம். அதற்கு கிடைத்த பலனாகத்தான் அந்த தேர்தலில் எங்கள் கட்சி இரண்டாவது இடத்தை பெற முடிந்தது.

அந்த திட்டத்தை மேலும் மேம்படுத்தி, தமிழகம் முழுவதும் அதனை செயல்படுத்தி கட்சியை பலப்படுத்த டாக்டர் ராமதாஸ் அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் 100 சட்டமன்ற தொகுதிகளை தேர்வு செய்து இந்த மைக்ரோ பிளான் செயல்படுத்தப்பட உள்ளது.

மைக்ரோ பிளான் திட்டத்தின் கீழ் நாங்கள் அதனை செயல்படுத்தும் 100 தொகுதிகளிலும் தேர்தலில் எங்கள் கட்சியை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் முதல்கட்டமாக 60 தொகுதிகளில் நாங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டோம். இதில் முதன் முதலாக திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டு மக்களுடன் கலந்துரையாடி வந்துள்ளோம்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு:

அடுத்ததாக சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் எங்கள் கட்சியை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட அனைவரும் வந்து பணியாற்றி வருகிறோம். இங்கு கிராமம் கிராமமாக சென்று கட்சியின் கொள்கைகளை எடுத்துக் கூறுவதோடு, அந்தந்த பகுதி மக்களின் பிரச்சினைகளையும் கையில் எடுத்து அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.

இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எங்கள் கட்சியில் புதியவர்களாக சேர ஏராளமான இளைஞர்கள் குறிப்பாக எல்லா சாதி சமுதாயத்தை சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் முன்வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதியவர்களை கட்சியில் சேர்ப்பதில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சியில் சேர்த்து வருகிறோம். புதிதாக கட்சியில் சேருபவர்களுக்கு பா.ம.க.-வின் கொள்கைகள், அரசியல் திட்டம், மக்கள் நலனுக்காக பாடுபடுவது போன்ற பல்வேறு அம்சங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இளைஞர்கள், இளம் பெண்களுக்கான பயிற்சி முகாம் நாளைநடத்தப்படுகிறது.

காலையில் தீவட்டிபட்டி-மாலையில் ஓமலூர்:

இந்த முகாம் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. இதற்காக டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணியும் 26-ந் தேதி வருகிறார்கள். காலையில் தீவட்டிபட்டியிலும், மாலையில் ஓமலூரிலும் என 2 முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றார் மணி.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: