Wednesday, August 25, 2010

100 தொகுதிகளுக்கு குறி-ராமதாசின் 'மைக்ரோ பிளான்'!

சேலம்: 100 தொகுதிகளில் வெற்றியைக் குவிக்க டாக்டர் ராமதாஸ் மைக்ரோ பிளான் திட்டத்தை வகுத்துள்ளார். அதன்படி செயல்பட்டு 100 தொகுதிகளை நாங்கள் வெல்வோம் என்று கூறியுள்ளார் பாமக தலைவர் ஜி.கே.மணி.

சேலம் வந்த ஜி.கே.மணி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது...

பாட்டாளி மக்கள் கட்சியை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கட்சி ரீதியாகவும், கட்சியின் அமைப்புகள் ரீதியாகவும் பலப்படுத்தி, அதனை தேர்தலுக்கு பயன்படுத்தும் வகையில் எங்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் மைக்ரோ பிளான் என்ற திட்டம் வகுத்துள்ளார்.

இந்த திட்டத்தின்படிதான் பென்னாகரம் இடைத்தேர்தலில் நாங்கள் தேர்தல் பணியாற்றினோம். அதற்கு கிடைத்த பலனாகத்தான் அந்த தேர்தலில் எங்கள் கட்சி இரண்டாவது இடத்தை பெற முடிந்தது.

அந்த திட்டத்தை மேலும் மேம்படுத்தி, தமிழகம் முழுவதும் அதனை செயல்படுத்தி கட்சியை பலப்படுத்த டாக்டர் ராமதாஸ் அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் 100 சட்டமன்ற தொகுதிகளை தேர்வு செய்து இந்த மைக்ரோ பிளான் செயல்படுத்தப்பட உள்ளது.

மைக்ரோ பிளான் திட்டத்தின் கீழ் நாங்கள் அதனை செயல்படுத்தும் 100 தொகுதிகளிலும் தேர்தலில் எங்கள் கட்சியை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் முதல்கட்டமாக 60 தொகுதிகளில் நாங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டோம். இதில் முதன் முதலாக திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டு மக்களுடன் கலந்துரையாடி வந்துள்ளோம்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு:

அடுத்ததாக சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் எங்கள் கட்சியை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட அனைவரும் வந்து பணியாற்றி வருகிறோம். இங்கு கிராமம் கிராமமாக சென்று கட்சியின் கொள்கைகளை எடுத்துக் கூறுவதோடு, அந்தந்த பகுதி மக்களின் பிரச்சினைகளையும் கையில் எடுத்து அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.

இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எங்கள் கட்சியில் புதியவர்களாக சேர ஏராளமான இளைஞர்கள் குறிப்பாக எல்லா சாதி சமுதாயத்தை சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் முன்வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதியவர்களை கட்சியில் சேர்ப்பதில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சியில் சேர்த்து வருகிறோம். புதிதாக கட்சியில் சேருபவர்களுக்கு பா.ம.க.-வின் கொள்கைகள், அரசியல் திட்டம், மக்கள் நலனுக்காக பாடுபடுவது போன்ற பல்வேறு அம்சங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இளைஞர்கள், இளம் பெண்களுக்கான பயிற்சி முகாம் நாளைநடத்தப்படுகிறது.

காலையில் தீவட்டிபட்டி-மாலையில் ஓமலூர்:

இந்த முகாம் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. இதற்காக டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணியும் 26-ந் தேதி வருகிறார்கள். காலையில் தீவட்டிபட்டியிலும், மாலையில் ஓமலூரிலும் என 2 முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றார் மணி.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: