Tuesday, June 19, 2012

எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் மீது மட்டும் பொய் புகார்களை பெற்று நடவடிக்கை எடுப்பது சரியல்ல! ராமதாஸ் கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நிலப்பறிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் அதிமுக அரசு பதவியேற்றதுமே நில மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது 5 வழக்குகள் தொடரப்பட்டடன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர், அவற்றில் இருந்து பிணையில் வெளிவந்திருந்த நிலையில், சேலத்தில் அவர் இல்லாத போது நடந்த ஒரு நிகழ்வுக்காக அவர் மீது காவல்துறையினர் பொய்வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
நீதிமன்ற உத்தரப்படி அவரை சேலம் சிறையில் அடைப்பதற்கு பதிலாக சென்னை, வேலூர், சேலம் என பல நகரங்களுக்கு அலைக்கழித்து பின்னர் மீண்டும் வேலூருக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். அவர் மீது ஆட்சியாளர்கள் எந்த அளவிற்கு கோபம் கொண்டிருந்தார்கள் என்பதையே காவல்துறையினரின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.
நிலப்பறிப்பு வழக்குகளில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை வீரபாண்டி ஆறுமுகம் கடைபிடித்து வந்த நிலையில் அவர் மீத புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒருவர் மீது 6 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் தான் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டே வீரபாண்டி ஆறுமுகம் மீது 6வது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக வீரபாண்டி ஆறுமுகத்தின் பிணை மனு உயர்நீதிமன்றத்தில் இன்று (19.06.2012) விசாரணைக்கு வரவிருந்த நிலையில் அவர் மீது குண்டர் சட்ட கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழக ஆட்சியாளர்களின் பழிவாங்கும் உணர்வை புரிந்துகொள்ளமுடியும்.
6 முறை சட்டபேரவை உறுப்பினராகவும், ஒரு முறை சட்டமேலவை உறுப்பினராகவும், 3 முறை அமைச்சராகவும் இருந்த ஒருவரால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி கைது செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. பொதுவாழ்வில் இருப்பவர்களை இதைவிட மோசமாக களங்கப்படுத்த முடியாது.
அதிகாரத்தை பயன்படுத்தியும், ஆள் பலத்தை பயன்படுத்தியும் நிலத்தை பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நான் ஒருபோதும் குறைகூறவில்லை. ஆனால் அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மீதும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதும் நிலப்பறிப்பு புகார் அளித்தவர்களை மிரட்டி புகார்களை திரும்பபெற செய்யும் காவல்துறையினர், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் மீது மட்டும் பொய் புகார்களை பெற்று நடவடிக்கை எடுப்பது சரியல்ல. இத்தகைய போக்கு மாற்றப்பட வேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: