Saturday, December 11, 2010

வீரபாண்டி ஆறுமுகத்துடன் பாமக எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு

சேலம்: வேளாண்மைத்துறை அமைச்சருடன் மோதல் போக்கில் இருந்து வரும் சேலம் மாவட்ட எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று அவரை சந்தித்துப் பேசினார்.

ஏன் இந்த திடீர் சந்திப்பு என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, மேட்டூர் அணையிலிருந்து வெளியாகும் தண்ணீரை சேலம் மாவட்ட பாசனத்திற்கு முறையாக பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரவே சந்தித்ததாக விளக்கினார் ஜி.கே.மணி.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக எம்.எல்.ஏக்கள் தமிழரசு, காவேரி, கண்ணையன் ஆகியோர் தொடர்ந்து வீரபாண்டியாருடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருபவர்கள். வீரபாண்டி ஆறுமுகத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவர்கள். இவர்களது கடுமையான திமுக விரோதப் போக்கு காரணமாகவே கட்சித் தலைமையால் திமுக கூட்டணியுடன் நெருங்கிப் போகமுடியாத நிலை முன்பு இருந்தது.

இந்தநிலையில், இந்த மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வந்தார். அப்போது அதிகாரிகளுடன் மாவட்ட திட்டப்பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்திக் கொண்டு இருந்தார் வீரபாண்டியார்.

பின்னர் அமைச்சருடன் பாமக குழுவினர் தனியாக சந்தித்து ஒரு அரை மணி நேரம் பேசினர். என்ன பேசினார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. என்ன பேசினீர்கள் என்று பின்னர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் கேட்டபோது, இது வழக்கமான சந்திப்பு தான். தேர்தல் கூட்டணி பற்றி தி.மு.க. தலைமை முடிவு எடுக்கும். தி.மு.க. தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுபவன் நான் என்றார்.

ஜி.கே.மணியோ வித்தியாசமான பதிலைக் கூறினார். அவர் கூறுகையில், மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வீணாகாமல் தடுப்பதற்காக சேலம் மாவட்ட மக்கள் பயன் அடையும் வகையில் பாசனத்திற்கு திருப்பி விட உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டோம். கூட்டணி பற்றி பேசவில்லை என்றார்.

ஆனால் சேலம் மாவட்ட பாமக எம்.எல்.ஏக்களை, வீரபாண்டி ஆறுமுகத்திடம் சமாதானமாகப் போகுமாறு கட்சி மேலிடம் வலியுறுத்தியதால்தான், மணியே அவர்களை நேரில் கூட்டிக் கொண்டு போய் வீரபாண்டியாரை சந்திக்க வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க உதவுமாறும் வீரபாண்டியாரிடம் வேண்டுதலுடன் கூடிய கோரிக்கையை பாமக வைத்துள்ளதாகவும் தெரிகிறது. வீரபாண்டி ஆறுமுகமும் பாமக மீது தனது பாசத்தையும், பரிவையும் காட்டியதாகவும், இதன் மூலம் பாமக மீண்டும் திமுக கூட்டணிக்குத் திரும்புவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: