Wednesday, December 1, 2010

யாருடைய தயவும் நமக்கு தேவையில்லை : அன்புமணி பேச்சு

மேட்டூர்:""வன்னியர்கள் மட்டும் பா.ம.க.,விற்கு ஓட்டு போட்டால் யாருடைய தயவும் தேவையில்லை,'' என, மாஜி மத்திய அமைச்சர் அன்புமணி பேசினார்.



எடப்பாடி சட்டசபை தொகுதி இளைஞர், இளம்பெண்கள் பயிற்சி முகாம் ஜலகண்டபுரத்தில் நேற்று நடந்தது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். மாஜி மத்திய சுகாதாரதுறை அமைச்சர் அன்புமணி, மாநில தலைவர் ஜி.கே.,மணி, எம்.எல்.ஏ.,க்கள் காவேரி, தமிழரசு, கன்னையன் முன்னிலை வகித்தனர்.



ஜி.கே.,மணி பேசுகையில், ""இளைஞர், இளம் பெண்களுக்கான 21வது முகாம் எடப்பாடி தொகுதியில் நடக்கிறது. இதர கட்சியினர் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என யோசித்து கொண்டிக்கும் நேரத்தில் அடுத்த தலைமுறையினர் நலனுக்காக டாக்டர் ராமதாஸ் மட்டுமே முகாம் நடத்துகிறார்,'' என்றார்.



அன்புமணி பேசியதாவது:தமிழகத்தில் வன்னியர்கள்தான் அதிக அளவில் குடிசையில் வசிக்கின்றனர். ஆடு,மாடு மேய்க்கின்றனர். வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு போராடியது பா.ம.க., மாற்று கட்சி வன்னியர்களும் தற்போது பலனை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். அவர்களால் வன்னியர்களுக்கு என தனியாக போராட முடியாது. வன்னியருக்காக போராடும் கட்சி பா.ம.க., மட்டுமே.



அண்டை மாநிலங்களில் மெஜாரிட்டி இனத்தை சேர்ந்தவர்கள்தான் முதலவராகின்றனர். தமிழகத்தில் மட்டுமே சினிமா துறையை சேர்ந்தவர்கள் முதல்ராகும் அவலம் உள்ளது. இலவசங்களாலும், மதுகடைகளாலும் மக்கள் சீரழிகின்றனர். தமிழகத்தில் மது அருந்துபவர்களின் சராசரி வயது 28 ஆக இருந்தது. தற்போது இந்த வயது 13 ஆக குறைந்து விட்டதாக மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.தமிழகத்தில் இரண்டரை கோடி, ஆந்திராவில் 90 லட்சம், கர்நாடகாவில் 70 லட்சம், கேரளாவில் 40 லட்சம், புதுச்சேரியில் 8 லட்சம், தென்னாப்பிரிக்காவில் 5 லட்சம் என உலகம் முழுவதும் 5 கோடி வன்னியர்கள் உள்ளனர். எடப்பாடியில் 2.34 லட்சம் வாக்காளர் உள்ளனர்.



இதில், வன்னியர் மட்டும் 1.50 லட்சம் பேர். வன்னியர்கள் மட்டும் பா.ம.க.,விற்கு ஓட்டு போட்டால் யாருடைய தயவும் நமக்கு தேவையில்லை. எனவே, பா.ம.க., வினர் தி.மு.க., உள்பட மாற்று கட்சியில் உள்ள வன்னியர் அனைவரையும் நமது கட்சியில் இணைக்க வேண்டும்.பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து மதுவை ஒழிப்பதற்கும், இரண்டாவது கையெழுத்து ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை அனைவருக்கும் இலவசம் என்பதுதான். நாம் கூட்டணி சேர மாட்டோமா என பிற கட்சியினர் துடித்து கொண்டிருக்கின்றனர், என்றார்.



ராமதாஸ் பேசுகையில், ""குடிக்கும் மக்களை அல்ல. நல்ல குடிமகன்களை உருவாக்க வேண்டும் என்பதே பா.ம.க,வின் நோக்கம். குடிக்க கூடாது. வரதட்சணை வாங்க கூடாது என்பதே பா.ம.க., இளைஞர், இளம்பெண்கள் எடுத்து கொள்ளும் உறுதிமொழியாகும்,'' என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: