Wednesday, October 27, 2010

சட்டத்தின் 'சந்து பொந்துகளில்' புகும் இடஒதுக்கீட்டின் எதிரிகள்: ராமதாஸ்

சென்னை: இடஒதுக்கீட்டின் எதிரிகள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து அதை எப்படியெல்லாம் முடக்கிப் போடலாம் என்று சிந்தித்து வருகின்றனர். இந்த ஆபத்தை தடுத்திட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக நடத்தி மாநிலத்தில் இடஒதுக்கீடு சலுகைப் பெற தகுதி படைத்த வகுப்பினர் 69 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுடன் உணர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம் என்ற நிலைமை இருந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் இந்த இடஒதுக்கீட்டுச் சலுகையை மேலும் ஓராண்டு காலத்திற்கு மட்டும் நீட்டித்து கடந்த ஜுலை மாதத்தில் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது.

அத்துடன் இந்த ஓராண்டு காலத்திற்குள்ளாக மாநிலத்தில் இடஒதுக்கீடு சலுகைப் பெறும் வகுப்பினரை அளவிடக் கூடிய தெளிவான புள்ளி விவரங்களை தயாரித்து அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை மறு ஆய்வு செய்யலாம் என்றும், தேவைப்பட்டால் இடஒதுக்கீட்டின் அளவை மேலும் அதிகரித்து புதிதாக சட்டம் இயற்றி கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த அனுமதியின்படி நமது மாநிலத்தில் இடஒதுக்கீட்டின் அளவை நமது தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்வதற்கு அதிகாரம் கிடைத்திருக்கிறது.

அதற்காக மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

ஆனால் இன்று வரையில் அத்தகைய ஆணை வெளியிடப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
இடஒதுக்கீட்டின் எதிரிகள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து அதை எப்படியெல்லாம் முடக்கிப் போடலாம் என்று சிந்திப்பார்கள்.

இந்த ஆபத்தை தடுத்திட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அதன் மூலம் மாநிலத்தில் இடஒதுக்கீடு சலுகைப் பெற தகுதி படைத்த வகுப்பினர் 69 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுடன் உணர்த்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை நமது தேவைக்கேற்ப அதிகரித்து புதிதாக சட்டம் இயற்ற வேண்டும்.

இந்தப் பணியை போர்க்கால அடிப்படையில் செய்யத் தவறினால் `முதலுக்கே ஆபத்து' என்பதைப் போல இருக்கின்ற 69 சதவீத சலுகைக்கே ஆபத்து வந்து விடும் என்று கூறியுள்ளார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: